ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!

தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை.

0

டிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இரயில் விபத்தினால் 275 பேர் உயிரிழந்துள்ளனர் (ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி); 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நூற்றாண்டின் மாபெரும் இரயில் விபத்து இது. 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த 1981-ஆம் ஆண்டு பீகார் இரயில் விபத்திற்கு பிறகு இந்தியாவில் நடைபெற்றுள்ள பெரிய இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்தைக் கண்டு நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் கூறினார். விபத்து நடைபெற்ற உடனேயே ‘இரயில்வே துறையை மேம்படுத்த அரசு செய்த பணிகள்’ என வரிசையாகத் தரவுகளை வெளியிடத் தொடங்கியது மோடி அரசு.

ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (CAG – சி.ஏ.ஜி) இரயில்கள் தடம் புரள்வது குறித்து வெளியிட்ட அறிக்கை (Derailment in Indian Railways) மோடி அரசின் பொய்களைத் தோலுரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அவ்வறிக்கையின்படி, ஏப்ரல் 2017 – மார்ச் 2021 காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 2017 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 69 விழுக்காடு, அதாவது 1392 விபத்துகள், ரயில் பெட்டிகள் தடம் புரளும் விபத்துகளாகும். இன்னும் குறிப்பாக, விளைவுகளை ஏற்படுத்தும் விபத்துகளை (consequential train accidents) மட்டும் எடுத்துக்கொண்டால், 80 விழுக்காடு விபத்துகள் பெட்டிகள் தடம் புரளுதல் மற்றும் நேரடி மோதல் தொடர்பானவை ஆகும்.


படிக்க: இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!


ஒவ்வொரு முறையும் விபத்துகள் நடைபெறும் போது தனிமனித தவறுகளால் மட்டுமே அவை நடைபெற்றதாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை பெரும்பாலான விபத்துகள் இரயில்வே கட்டமைப்பின் குறைபாடுகளால் நடைபெற்றுள்ளதை வெளிப்படுத்துகிறது.

சி.ஏ.ஜி அறிக்கையின்படி இரயில் தடம் புரளும் சம்பவங்கள் பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 முறையும், தண்டவாளத்தை முறையாகப் பராமரிக்காததால் 171 முறையும் நடந்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்களின் தவறு காரணமாக 154 முறையும் இரயில் தடம் புரளும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆபரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளன.

விபத்துக்கள் தொடர்பான 63 விழுக்காடு சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. விபத்துகள் தொடர்பான முறையான ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை; பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பில் உள்ள கோளாறுகள் ஆகியவையும் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 – 2019ஆம் ஆண்டில் ₹9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019- 2020ஆம் ஆண்டில் ₹7,417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்கப்பட்டுள்ளது; அவ்வாறு குறைத்து ஒதுக்கப்பட்ட தொகையையும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


படிக்க: ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


முக்கியமாக, சி.ஏ.ஜி அறிக்கை விபத்துகளுக்கான காரணமாகப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணிகளில் ஆள் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிசம்பர் 1, 2023 நிலவரப்படி, மொத்தமுள்ள 18 ரயில்வே மண்டலங்களில் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் (non-gazetted posts) இருப்பதாகத் தெரிவித்தார். அதில் பல காலிப் பணியிடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகள். குறிப்பாக, மத்திய இரயில்வேயில் உள்ள 28,650 காலிப் பணியிடங்களில் 14,203 பாதுகாப்புப் பணிகள் தொடர்பானவை.

“விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்” எனத் தனி நபர்களை குற்றவாளிகள் ஆக்குவதன் மூலம், விபத்துக்கான காரணம் பாசிச பா.ஜ.க அரசாங்கமோ முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ள இரயில்வே கட்டமைப்போ அல்ல என்பதை மோடி நிறுவ முயல்கிறார். ஆனால் ரயில்வே நிர்வாகத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் தான் ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதற்குக் காரணம் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல, ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்’ அமைப்பில் ஏற்றப்பட்ட கோளாறு என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூன் 4, 2023) கூறியிருந்தார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதமே தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து இரயில்வே துறைக்குக் கடிதம் எழுதி எச்சரித்துள்ளார். ஆனால், பாசிசம் மோடி அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.


படிக்க: இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை


தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை. காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாமல், குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயக்குவது விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகிறது. எனவே, ஒடிசா ரயில் விபத்தில் அரசே முதல் குற்றவாளி!

விபத்துகள் ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது குறித்து பாசிச மோடி அரசிற்குக் கவலை இல்லை. இரயில்வே துறையை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டு, அரசால் பராமரிக்க முடியவில்லை; பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது; தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று கூறி தனியாருக்கு தாரைவார்ப்பதே மோடி அரசின் திட்டம்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க