காவி பயங்கரவாதி, முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரகர், பாஜக தலைவர் என பல்வேறு பட்டங்களைக் கொண்டவர் பிரக்யா சிங் தாக்கூர். இவர் டிசம்பர் 6, 1992-ல் காஜியாபாத் நகரிலிருந்த பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு தலைமை தாங்கியவர். 2008 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி. தற்போது பாசிச பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் தற்போது மத்தியப் பிரதேசத்தின் போபாலில் மற்றுமொரு முஸ்லீம் வெறுப்பு உரையை நிகழ்த்தியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பின்போது தான் இறக்கத் தயாராக இருந்தேன் என்றும், முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக சங் பரிவார கர சேவகர்கள் எழுப்பிய முஸ்லீம் வெறுப்பு முழக்கத்தை மீண்டும் மீண்டும் நான் எழுப்பினேன் என்றும் பல்வேறு சம்பவங்களை விளக்குகிறார்.
படிக்க : ‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!
“நாங்கள் மசூதியை இடித்து அகற்றிவிட்டோம், அந்த முழு கரசேவையில் நானும் ஒரு பகுதியாக இருந்தது எனது மரியாதை. இடிப்பின்போது ஆட்கள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தார்கள். நான் வீட்டைவிட்டுக் கிளம்பும் முன் அப்பா சொன்னார், இப்ப நான் அங்க போகிறேன், திரும்ப வீட்டுக்கு வருவேனான்னு கவலைப்பட வேண்டாம். வீட்டிற்குத் திரும்பி வரும்போது, நீங்கள் ராமருக்குச் சொந்தமானவர், அவரை அர்ப்பணிக்க வேண்டும். நான் அங்குச் சென்றபோது, நான் செய்யும் எந்தச் செயலும் ராமருக்காகத்தான் இருக்கும், நான் இறந்தாலும் அது ராமருக்காகத்தான் இருக்கும் என்பதை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்தேன். மசூதியை இடித்துவிட்டு நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தோம், அருகிலிருந்தவர்கள் என்னிடம் கோஷம் எழுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள். மிகக் கடுமையான ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது, நான் ஏதேனும் கோஷம் எழுப்பினால் போலீசு என்னைக் கைது செய்யலாம் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஆனால் நான் அங்கு கோஷம் எழுப்ப ஆரம்பித்தேன்.
ராமர் என்ற பெயரில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற இழிவான முழக்கத்தை ஒட்டுமொத்த கரசேவகர்கள் மத்தியில் காவி பயங்கரவாதி பிரக்யா உற்சாகமாகக் கோஷமிட்டதாகக் கூறினார்.
2019 ஆம் ஆண்டில் கூட, ஆஜ்தக்கிற்கு அளித்த நேர்காணலில், “பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? உண்மையில், நாங்கள் அதைப் பற்றிப் பெருமைப்படுகிறோம். ராமர் கோயிலில் சில கழிவுப்பொருட்கள் இருந்ததால் அதை அகற்றினோம். இது நம் நாட்டின் சுயமரியாதையை தட்டியெழுப்பி, பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டுவோம்.” என்று பிரக்யா வெளிப்படையாகவே கூறினார்.
ஹேமந்த கர்க்கரே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் என்னைப் பொய்யாகச் சிக்க வைத்து, என்னை மிகவும் மோசமாக நடத்தினார். உன்னுடைய முழு வம்சமும் அழிக்கப்படும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் தனது கர்மத்தால் இறந்தார்” என்று வெறுப்பு பேச்சுக்களைப் பேசியுள்ளார்.
படிக்க : ‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டு சிறைசென்ற காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் பாசிச மோடி ஆட்சியில், முஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களைப் பேசி சுதந்திரமாகத் திரிகிறார். நாடாளுமன்ற உறுப்பினராகிறார். இதுதான் ‘இந்து ராஷ்டிரத்தின் காவி பயங்கரவாதிகளுக்கான நீதி’.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தைக் கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.
கல்பனா