மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

புரோலா சந்தையில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “இங்கிருந்து வெளியேறுங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் எங்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மே 26 முதல் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

0

டந்த ஜூன் 5 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி எனும் மலைப்பகுதியில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்யுமாறு மிரட்டும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புரோலா பகுதியில் 14 வயது இந்து சிறுமியை இருவர் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறி, உத்தரகாசி நகரத்தில் உள்ள முஸ்லீம் வியாபாரிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கடைகளை மூடிவிட்டு நகரை விட்டு வெளியேறுமாறு காவிக் குண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட உள்ளூர் கடைக்காரர் உபேத் கான் (24) மற்றும் இரு சக்கர வாகனங்களை பழுது பார்ப்பவர் ஜிதேந்தர் சைனி (23) ஆகிய இருவர்  மே 27 அன்று கைது செய்யப்பட்டுவிட்டனர்.

படிக்க : அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!

இருப்பினும், எவ்வித ஆதாரமுமற்ற சம்பவத்தை “லவ் ஜிஹாத்” என்று காவிக் குண்டர்கள் கையில் எடுத்துக்கொண்டு பெரும் கலவரைத்தை செய்ய எத்தனிக்கின்றனர். முஸ்லீம் ஆண்கள் இந்து பெண்களை இஸ்சுலாம் மதத்திற்கு மாற்றுவதற்காக அவர்களை காதல் என்கிறது சங்கப் பரிவார கும்பல். இதை சொல்லித்தான் இந்தியாவில் சங்கப் பரிவார அமைப்புகள் முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னும் பல்வேறு ’ஜிஹாத்’ எனும் சொற்களை உற்பத்தவும் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க காவி குண்டர்கள்.

புரோலா பிரதான சந்தையில் முஸ்லீம் வியாபாரிகளை அச்சுறுத்தும் முஸ்லீம் வெறுப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன, இதனால் பல முஸ்லீம் வியாபாரிகள் ஊரை விட்டு வெளியேறிவிட்டார்கள். முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகளின் கதவுகளில் “X” என்ற கூறியீட்டு வண்ணப்பூச்சு பூசி அட்டூழியம் செய்து வருகிறார்கள் காவி குண்டர்கள்.

“ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் மகாபஞ்சாயத்துக்கு(மாநாடு) முன்பாக தங்கள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று லவ்-ஜிஹாதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைச் செய்யாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று இந்தியில் போஸ்டர் ஒட்டியுள்ளது காவி பயங்கரவாத கும்பல்.

புரோலா பிரதான சந்தையில் கிட்டத்தட்ட 650-700 கடைகள் உள்ளன. அவற்றில் சுமார் 30-40 கடைகள் முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன.

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வீரேந்திர ராணா, “அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்று உள்ளூர்வாசிகளால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவர்கள் வியாபாரம் செய்வதற்காக இங்கு வந்தனர். ஆனால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைக்கிறார்கள்” என்று கூறினார்.

முஸ்லீம் கடைக்காரகள் தங்கள் கடை உரிமையாளர் அல்லது நில உரிமையாளரிடம் இருந்து முத்திரைத் தாளில் தங்கள் நடவடிக்கைகளுக்கு முழுப்பெறுப்பேற்க வேண்டும் என்ற ஒரு கடிதத்தைப் பெறுமாறு உள்ளூர் வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஜூன் 6 ஆம் தேதி வெளியான செய்தியின் படி, ஒன்பது நில உரிமையாளர்கள் தங்கள் முஸ்லீம் கடைக்காரர்களிடம் கடைகளை காலி செய்யும்படி கூறியுள்ளனர்.

புரோலா சந்தையில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “இங்கிருந்து வெளியேறுங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் எங்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மே 26 முதல் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

35 வயதான சலீம், “நாங்கள் தொடர்ந்து பயத்தில் வாழ்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் புரோலாவுக்குத் திரும்ப முடியாது. நாங்கள் மலைகளைவிட்டு வெளியேற வேண்டும் என்றால், அதிகாரிகள் எங்களுக்குச் சொந்தமான சொத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றார். புரோலாவில் ஒரு துணிக்கடை நடத்திவந்த அவர், டேராடூனில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

மார்க்கெட்டில் இருந்த மற்றொரு 40 வயது முஸ்லீம் கடைக்காரர், “கடத்தல் முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். கடுமையான நடவடிக்கை எடுக்க கோருகிறோம். சட்டவிரோத குற்றங்களில் ஈடுபடும் நபர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.” என்றார்.

சுவரொட்டிகளை ஒட்டியதற்காக அடையாளதெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததைத் தவிர, முஸ்லீம்களை வெளியேறுமாறு அச்சுறுத்தும் கும்பல் மீது போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணிப்பூரில் வகுப்புவாத வன்முறை தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது. அதை போன்று உத்தரகாண்ட் மாநிலத்திலும் மக்களிடையே வகுப்புவாத வன்முறைய தூண்டிவிட முயற்சிக்கிறது காவிக் குண்டர் படை என்பதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க