அமெரிக்காவின் காங்கிரஸின் கூட்டு அமர்வில் நரேந்திர மோடியை பேச அழைத்துள்ளது ஜோ பைடன் அரசு. இதனை எதிர்த்து காங்கிரஸின் கூட்டு உரையை புறக்கணிக்கப்போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்ஹான் உமர் மற்றும் ரஷிதா த்லைப் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மோடி, ஜூன் 21 முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். அதன் ஒருபகுதியாக ஜூன் 22 அன்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பேசவிருக்கிறார். இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.
படிக்க : எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மின்னசோட்டாவின் 5வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இல்ஹான் ஓமர், “பிரதமர் மோடியின் அரசாங்கம் மதச் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கி, வன்முறையில் ஈடுபடும் இந்து தேசியவாதக் குழுக்களைத் தூண்டி, பத்திரிகையாளர்கள்/மனித உரிமை வாதிகளை தண்டனையின்றி இலக்கு வைத்துள்ளது. மோடியின் உரையில் நான் பங்கேற்க மாட்டேன். மோடியின் அடக்குமுறை மற்றும் வன்முறை குறித்து விவாதிக்க மனித உரிமை குழுக்களுடன் நான் ஒரு மாநாட்டை நடத்துவேன்” என்று கூறினார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 12வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷிதா த்லைப், “நமது நாட்டின் தலைநகரில் மோடிக்கு மேடை கொடுக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது – மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், முஸ்லிம்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து, பத்திரிகையாளர்களை தணிக்கை செய்த அவரது நீண்ட வரலாறு ஏற்றுக்கொள்ள முடியாதது. காங்கிரஸில் மோடியின் கூட்டு உரையை நான் புறக்கணிக்கிறேன்” என்று கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசை விமர்சிப்பதும், மோடியின் உரையை புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது. உலக நாடுகளின் முற்போக்காளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிச மோடியையும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பலையும் புறக்கணிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கல்பனா