அமெரிக்காவில் பாசிச மோடியை விமர்சிக்கும் பதாகைகள்!

டிஜிட்டல் பதாகைகளில், “ஹே ஜோ! மாணவர் ஆர்வலர் உமர் காலித் ஏன் 1000 நாட்களுக்கு மேல் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார் என்று மோடியிடம் கேளுங்கள்?”, "மோடி ஏன் 2005-2014 வரை அமெரிக்காவில் நுழைய தடை செய்யப்பட்டார்?" போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

0

பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். யோகா செய்கிறார். கிராஸ் டைசன் மற்றும் எலோன் மாஸ்கை சந்திக்கிறார். ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைர நகையை பரிசளிக்கிறார். ஜோ பைடனுடன் இரவு உணவுகளை புசிக்கிறார். எவ்வாறாயினும், பாசிச மோடி அரசை விமர்சிக்கும் பல்வேறு நிகழ்வுகளை அமெரிக்காவின் ஜனநாயக சக்திகள் அரங்கேற்றி வருகிறார்கள்.

அதில் ஒரு நிகழ்வு, இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் மற்றும் உமர் காலித் மேலும் பல ஜனநாயக சக்திகளின் சிறை – சித்திரவதை கொடுமைகள் உட்பட  இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகள் குறித்து மோடியிடம் முக்கியமான கேள்விகளைக் கேட்குமாறு பைடனுக்கு கூறும் டிஜிட்டல் பதாகைகளுடன் ஓர் வாகனம் நியூயார்க் நகரில் உலா வந்தது.

வாகனங்களில் இருந்த டிஜிட்டல் பதாகைகளில் “மோடியின் ஆட்சியில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் அதிகரித்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?”, “ஹே ஜோ! மாணவர் ஆர்வலர் உமர் காலித் ஏன் 1000 நாட்களுக்கு மேல் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார் என்று மோடியிடம் கேளுங்கள்?”, “மோடி ஏன் 2005-2014 வரை அமெரிக்காவில் நுழைய தடை செய்யப்பட்டார்?” போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், குறிப்பாக கடுமையான மத சுதந்திர மீறல்கள் காரணங்களுக்காக விசா மறுக்கப்படும் ஒரே நபர் இந்தியப் பிரதமர் மட்டுமே என்றும், பதாகைகளில் மோடியை “இந்தியாவின் குற்ற அமைச்சர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றுமொரு நிகழ்வு, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவால் (Committee to Protect Journalists – CPJ) ஜூன் 21 அன்று வெளியான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் தற்போது பாசிச மோடி அரசால் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆசிப் சுல்தான், கௌதம் நவ்லகா, சஜாத் குல், ஃபஹத் ஷா, ரூபேஷ் குமார் சிங் மற்றும் இர்பான் மேராஜ்.

அந்த விளம்பரம், “உலகின் மிகப்பெரிய ’ஜனநாயக’ நாடு இந்தியா, இருப்பினும் ஊடகங்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் இதுவும் ஒன்று”, “பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொய் வழக்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரங்களை எதிர்கொள்வதால், பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது”, “ஜனநாயகத்தை மதிக்கும் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்களை அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும்” என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.

அமெரிக்காவின் ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் முகமான பாசிஸ்ட் மோடியின் முகத்திரையை கிழித்தெறிந்து வருகிறார்கள்.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க