தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக்குழுவில் இருந்து, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜவஹர் நேசன் பதவி விலகியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையின் மூலம், மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க அரசின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இரகசியமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலைக் கல்விக்குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார்.
தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வரிடமும் கடிதம் சமர்பித்தேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் “மாநிலக் கல்விக்கொள்கை” பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
படிக்க: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!
மாநில உயர்நிலைக் கல்விக் குழுத் தலைவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், “தவறானது, அடிப்படை ஆதாரமற்றது” எனக் கூறி ஜவஹர் நேசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜவஹர் நேசன் மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிற்கான ஒருங்கிணைப்பாளர் கிடையாது, துணைக் குழுக்களுக்குதான் ஒருங்கிணைப்பாளர் எனப் பச்சையாகப் பொய்யுரைத்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையின் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் ஜவஹர் நேசன். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினை பற்றி வாய்திறக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, இரண்டு உறுப்பினர்களை கல்விக்குழுவில் கூடுதாக நியமித்துவிட்டு, குழுவில் “அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை” என்று விவாதத்தை தட்டிக்கழித்துவிட்டார். ஜவஹர் நேசன் முதல்வருக்கு எழுதியதாகக் கூறும் கடிதம் தங்களுக்கு கிடைத்ததா, அல்லது கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது பற்றி அரசினது கருத்து என்ன என்று எவைபற்றியும் வாய்திறக்கவில்லை.
இவர்கள் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை; அவரது குற்றச்சாட்டுகளை மறுக்கவும் முடியாது. ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினால், இன்னும் துல்லியமாக என்னென்ன முயற்சிகள் நடக்கின்றன என்று உண்மைகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், இதனை இப்படியே ஊற்றி மூடிவிட வேண்டும் என்பதுதான் ஆளும் தி.மு.க. அரசின் அணுகுமுறையாகும்.
தி.மு.க.வின் போலி வேடம்
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., புதிய கல்விக் கொள்கையை மறுப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. 13-08-2021 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கென தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதத்தில் குழுவையும் அமைத்தது.
அக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர் நேசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், யுனிசெஃப் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டு 12 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், இக்குழு அமைக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை கவர்ச்சிகரமான பெயர்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் வந்ததுள்ளது. “இல்லம் தேடிக் கல்வி”, “கலா உத்சவ்”, “நான் முதல்வன்”, “எண்ணும் எழுத்தும் திட்டம்”, “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” போன்ற அனைத்துத் திட்டங்களிலும் கார்ப்பரேட் மயமாக்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதே இதற்கான சான்றுகளாகும்.
இவை மட்டுமின்றி, கல்வித்துறையில் புதுப்புது திட்டங்களாக வெளியில் தெரியாதபடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக, அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி கடந்த டிசம்பர் மாதத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவை மேலும் அதிகரித்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதெல்லாம், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனால், நரகலில் நல்லரிசி தேடும் விதமாக, “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம்” என கல்வித்துறை அமைச்சர்கள் இருவரும் கூச்சமின்றி விளக்கமளித்தனர்.
இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி போலி வேடம் போட்டு வந்துள்ளதை பேராசிரியர் ஜவஹர் நேசனின் பதவி விலகலானது இன்று திரைகிழித்துக் காட்டியுள்ளது.
கார்ப்பரேட்மயம் + காவிமயம் = புதிய கல்விக் கொள்கை
தி.மு.க அமல்படுத்த இருக்கும் மாநில கல்விக் கொள்கையில், கல்வித்துறையை நேரடியாக காவிமயமாக்கும் திட்டங்களான இந்தித் திணிப்பு, சாதி ஏற்றத்தாழ்வுகளை போதிக்கும் வர்ணாசிரம கோட்பாடுகளை புகுத்துதல், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு போன்ற விஞ்ஞானப்பூர்வமான அறிவியல் பகுதிகளை நீக்குதல், வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சாதகமாக திருத்துதல், பாடத்திட்டங்களில் பகவத் கீதை போன்ற புராணக் குப்பைகளை சேர்த்தல் போன்ற காவி கும்பல்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை.
பேராசிரியர் ஜவஹர் நேசனின் கூற்றும் அதைத்தான் தெளிவுபடுத்துகிறது. “மும்மொழிக் கொள்கை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தவிர தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள எல்லா அம்சங்களையும் மாநிலக் கல்விக் கொள்கையில் கொண்டுவருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
ஆனால், புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறையை காவிமயமாக்குவதை மட்டும் உள்ளடக்கியது அல்ல. கார்ப்பரேட்மயமாக்கத்தையும் உள்ளடக்கியது. கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் அதற்கு துலக்கமான சான்றுகளாகும்.
கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார் – கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கூறுகளைக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது தி.மு.க. அரசு.
கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது, மறுகாலனியாக்கக் கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முன்னேறிய, அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும். கல்வித்துறையை பல துறைகளாகப் (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization) பிரித்து, அவற்றை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் செய்வது ஆகும்.
கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகள், மறைமுகமாக காவிமயமாக்கத்திற்கு தான் வழிவகுக்கும். சான்றாக, என்.ஜி.ஓ.க்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், என்.ஜி.ஓ.க்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைய சாதகமாக அமையும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட “அகஸ்தியா” என்ற தொண்டு நிறுவனத்திற்கு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் நடத்த அனுமதி அளித்தது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
“இல்லம் தேடிக் கல்வி” திட்டமும் தன்னார்வலர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்பட்டது. தன்னார்வலர்கள் என்ற போர்வையில் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். எனவே, இதன் மூலமும் காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல், இதை தங்களுக்கு சாதகமான வாய்ப்பாகவே கருதி பயன்படுத்தி இருக்கும்.
மேற்கூறியவை சில சான்றுகள்தான். கல்வித்துறையில் என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, காவிக் கும்பல் மாணவர்களை சென்றடைவதும் அதிகரிக்கும். அதன் மூலம் காவிக் கும்பலின் நச்சுக் கருத்துகள் மாணவர்களின் மனதில் விதைக்கப்படும். இது மறைமுகமாக கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கை ஆகும்.
இதுதானா திராவிட மாடல் ஆட்சி?
காவி கும்பல் நமது நாட்டிற்கு ஆபத்தானது என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. ஆனால், இந்த சமூக நீதிக் காவலர்கள்தான் கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அமல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையை காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலுக்கு திறந்துவிடுகிறார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பா.ஜ.க கும்பலுக்கு எதிரான வெறுப்புணர்வுதான் தி.மு.க வெற்றி அடைய முக்கியக் காரணமாகும். ஆனால், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, இரண்டாண்டுகளாக புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதும், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையையே நடைமுறைப்படுத்த விழைவதும் தி.மு.க. அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.
திராவிட மாடல், சமூகநீதி ஆட்சியின் அவலம் இதுதான். இந்த கேடுகெட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள தி.மு.க.தான் பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறதாம். நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
பாசிசக் கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற தி.மு.க.வை விட்டால் வேறுவழியில்லை என்று தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.வின் நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
பிரவீன்