வழக்குரைஞர் ஒருவரைச் சந்திப்பதற்காக கீழமை நீதிமன்றத்திற்கு வண்ண உடையில் சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய வழக்குரைஞர் நீதிமன்றத்திற்குள் இருந்தார். நான் நீதிமன்றத்திற்கு வெளியே கொஞ்ச தூரம் தள்ளி வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். நான் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு எதிரில் இருந்த நீதிமன்றத்தில் யாரும் இல்லை, நீதிமன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை . அரை மணி நேரம் ஆனது, செல்பேசியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென பெண் காவலர் ஒருவர் வந்தார். “சார் கால் மேல கால் போட்டு உட்காராதீங்க ” என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்குச் சுருக்கென்று கோபம் வந்தது. நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எடுக்கவே இல்லை . பத்து நிமிடம் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பிறகு நானே அவரிடம் நேரில் சென்று கேட்டேன்.
“ஏன் கால் மேல கால் போட கூடாதுன்னு சொன்னீங்க?”
“ஜட்ஜ் வருவாங்க”
“நீதிமன்றத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாமத்தான இருக்கு . நீதிபதி வரும் பொழுது யாராவது அவரை அவமரியாதை செய்வார்களா? அந்த குறைந்த பட்சம் நாகரிகம் கூட இல்லாமலா நாங்க இருக்கிறோம்?”
“அதை என்கிட்ட சொல்லாதீங்க ஜட்ஜ் கிட்ட சொல்லுங்க”
“நான் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிற போது மற்றவர்களை எப்படி அவமானப்படுத்தும்?
எத்தனை நாளைக்கு செருப்பு போடாதீங்க, கால் மேல கால் போடாதீங்க , கூளை கும்பிடு போடுன்னு சொல்லிட்டே இருப்பீங்க?” என்றேன் காட்டமாக.
அதற்கு அந்தப் பெண் காவலரிடம் பதில் ஏதுமில்லை.
படிக்க: செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!
கடந்த 13 வருடமாகச் சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன். நீதிமன்ற வளாகத்தில் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று யாரும் சொன்னது இல்லை.
கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை. என்னிடம் பேசிய அந்த பெண் போலீசு நீளமாக முடி வளர்க்காமல் கட்டிங் செய்திருந்தார். முடி வளர்ப்பது தேவையற்றது என்று கருதி முடிவெடுத்த அவரால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பது சாதாரண செயலாக, இது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமையாகக் கருத முடியவில்லை.
இது சாதிய, அதிகார வர்க்கப் புத்தி!
ஆண்டைத் தனமான கலாச்சாரங்களின் குரல்கள் ஒலிக்கும் போதெல்லாம் அவற்றின் செவிட்டில் அறைவதே நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.
மருது