மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக, பாடகர் நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய சுவயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) சங்க உடை அணிந்த ஒருவர் எதிரே அமர்ந்திருந்த மற்றொருவர் மீது சிறுநீர் கழிப்பது போன்ற படத்துடன் ட்வீட் ஒன்றைப் பாடகர் நேஹா பதிவிட்டிருந்தார். இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பழங்குடியின சமூகத்தினரிடையே பகையை உருவாக்கியதாகப் பாடகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் போலீசு நிலையத்தில் பாஜக தொண்டர் சூரஜ் கரே என்பவர் ரத்தோர் சமூக ஊடகப் பதிவின் மூலம் ஆர்.எஸ்.எஸ்-ஐ இழிவுபடுத்தியுள்ளார் என்று புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரத்தோர் மீது இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 153(A) (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) என்ற பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
படிக்க : மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!
வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரத்தோர் டிவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில் “மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில், பாஜக தலைவர் ஒருவர் பழங்குடியினரின் தலையில் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவத்தை விமர்சித்ததற்காக பாஜகவின் பட்டியல் சாதி மோர்சாவின் ஊடகப்பொறுப்பாளர் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இவர்களின் பழங்குடியினர் மீதான அன்பு ஆச்சரியமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாஜகவிற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனால் பாஜகவிற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தவரை அழைத்து, அவரின் கால்களைக் கழுவது போல் காட்சிகளை எடுத்து வெளியிட்டார். இது சிறுநீர் கழித்த சம்பவத்தை மறைப்பதற்காக முதல்வர் செய்யும் நாடகம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த கால்கள் கழுவப்படும் நபர் பாதிக்கப்பட்ட நபரே இல்லை, முதல்வர் வேறு யாரையோ அழைத்து வந்து கால்களைக் கழுவுவதுபோல் கழிவிரக்கம் தேடியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்கள் முழுவதும் வலம் வருகின்றன.
படிக்க : 90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்
காவி பயங்கரவாத அரசைக் கேள்வி எழுப்பினாலோ, விமர்சித்தாலோ குற்றமாகக் கருதுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். உத்தரப்பிரதேச அரசையும் மோடி அரசையும் விமர்சித்து நேஹா சிங் ரத்தோர் தொடர்ந்து பாடல் பாடி வருகிறார். கடந்த 2023 பிப்ரவரியில் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து, “உ.பி மெய்ன் கா பா” பாடல் பாடி வெளியிட்டதற்காக அவர் சங்கிகளால் ஒடுக்கப்பட்டார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் பாஜகவைச் சார்ந்த நபர் சாதிவெறியுடன் பழங்குடி நபர் மீது சிறுநீர் கழித்து வக்கிரமாக நடந்துகொண்ட ஓர் உண்மை சம்பவத்தை விமர்சித்துப் பதிவிட்டதற்காக ஒடுக்கப்படுகிறார்.
காவி பயங்கரவாதிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் நேஹா சிங் போன்ற ஜனநாயக சக்திகளைக் காவி பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
கல்பனா