சமீபமாக, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் வளர வளர தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தீவிரமடைந்து வருகின்றன. தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது போன்ற தீண்டாமை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. ஆனால் இதுபோன்ற தீண்டாமை குற்றங்களில் ஈடுபடும் சாதி வெறியர்களை அரசு கைது செய்து தண்டிக்காமலும், பட்டியல் சமூக மக்களின் கோவில் நுழைவு உரிமையை உறுதி செய்யாமலும் வெறுமனே “அமைதிப் பேச்சுவார்த்தைகள்” நடித்திக்கொண்டிருப்பது அம்மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 7 அன்று, கரூர் வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ய முயன்ற ஒரு தலித் நபரை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இழுத்துச் சென்றார். பாதிக்கப்பட்ட நபர் தன்மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் முதலில் அதிகாரிகள் ‘சமாதான பேச்சுவார்த்தைக்கு’ முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஆதிக்க சாதியினர் இதனை மதிக்காமல் கோவில் முன் திரண்டனர். இதனால் வேறு வழியின்றி மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது.
அதேபோல், விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் இதே போன்று ஜூன் 7 அன்று மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. இதிலும் மாவட்ட அதிகாரிகள் ‘அமைதி பேச்சுவார்த்தை’ தான் முதலில் நடத்தினார்கள்.
ஜூன் 7 அன்று கோவில் மூடப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, கோவிலில் பிரார்த்தனை செய்ய முயன்ற தலித் மக்களை வன்னியர் சாதி ஆண்கள் கடுமையாக தாக்கியதும், தலித் மக்களை சாதி ரீதியாக அவதூறு செய்ததும் நடந்திருக்கிறது.
இந்த தாக்குதலில் கதிரவன் என்பவரின் தந்தை கந்தன், தாய் கற்பகம் ஆகியோர் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை கண்டித்து அன்றிரவு விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பல தலித் மக்கள் ஒன்று சேர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!
அதிகாரிகள் இதுவரை வன்னியர்கள் மற்றும் தலித் மக்களுடன் ஏழு ‘அமைதிக் கூட்டங்களை’ நடத்தியுள்ளனர், அவற்றில் இரண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. ஆனால் “இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட வன்னியர் பிரதிநிதிகளில் பாதி பேர் எங்களைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள்” என்கிறார் கதிரவனின் தந்தை கந்தன். மேலும், முதல் கூட்டத்தில் மட்டுமே இரு சமூகத்தினரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மற்ற கூட்டங்கள் தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தைகளில் கூட ஆதிக்க சாதியினர் சாதி திமிர்த்தனத்தோடு நடந்து கொள்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
இந்த விவகாரம் அமைச்சர் க.பொன்முடி வரை எடுத்துச் செல்லபட்டு, கோயில்களில் நுழைவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரும் உறுதியளித்தார். ஆனால், வன்னியர்கள் கோவில் முன் திரண்டு, ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்போம் என்று மிரட்டல் விடுத்தனர். மேலும், மூன்று பெண்கள் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தின் வீரணம்பட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மேல்பாதி ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்திய ஆதிக்க சாதியினர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவியூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர் சமூகத்தினரின் பாரம்பரியமான முளைப்பாரியை எடுத்துச் சென்று கிராம குளத்தில் கரைக்க அனுமதி வேண்டுமென காவல்துறையை அணுகியபோது, இது புதிய நடைமுறை என்றும் மற்ற சாதியினரின் எதிர்ப்பை தூண்டிவிடும் என்றும் கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த பொதுக் கோவில் ஆதிக்க சாதியினரால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து திருவிழாவின் போது தங்கள் சொந்த கோவிலில் பாரம்பரிய ஊர்வலம் நடத்த முடிவு செய்து அதற்காக கிராமத் தலைவரை அணுகி அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. அதுவும் பட்டியல் சமூகத்தால் தொடங்கப்படும் “எந்தப் புதிய நடைமுறையையும் அனுமதிக்க முடியாது” என்று ஆதிக்க சாதிக் குழுக்களால் கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் பதிலும் ஆதிக்க சாதியினரின் வாதங்களை எதிரொலிப்பதாக உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த முருகன் கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் ஆதிக்க சாதி குழுக்களின் பக்கம் நிற்பதாகவும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழிபாட்டு உரிமைகளை மறுப்பதாகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சலூன் கடைகளில் முடி வெட்ட மறுப்பது, சில தெருக்களில் தலித்துகள் செருப்பு அணிவதற்கு அனுமதி மறுக்கப்படுவது, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, வயதானவர்களைக் கூட உணவகங்களில் தரையில் உட்கார வைத்து சாப்பாடு போடுவது போன்ற தீண்டாமை கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதங்களில் மாநில அரசின் உதவியுடன் தலித்துகள் கோயில்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், மாவட்ட ஆட்சியர்கள், போலீசார் மற்றும் வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் தலித் மற்றும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஒன்று திரட்டி ‘அமைதிக் பேச்சுவார்த்தை’ நடத்துகிறார்கள். தலித் மக்களை தாக்கிய, வன்கொடுமை செய்த அதே ஆதிக்க சாதி நபர்களும் அதில் கலந்து கொள்வது மிக அவலமான ஒன்றாகும்.
படிக்க: மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆதிக்க சாதியினர் இதுபோன்ற கூட்டங்களின் போது மட்டும் அமைதியாக இருந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு வந்து போராட்டங்களை நடத்துகிறார்கள், சில நேரங்களில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதுவொரு தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைக்கிறார்கள் அல்லது போலீஸ் பாதுகாப்புடன் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய உதவுகிறார்கள். அதன் பிறகு அதிகாரிகள் “கடமை முடிந்து விட்டதாக” கிளம்பி போய் விடுகின்றனர். பின்னர் ஏற்படும் பின்விளைவுகளை தலித்துகள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை கொடுமைகள் நடப்பது, அரசு நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது அல்லது ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக இருப்பது போன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாக தலித் மக்களை தனிமைப்படுத்தவாக முடியும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் உட்பட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும், அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தோழமைக் கட்சிகளோடு இணைந்து, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.
ஆனால் தி.மு.க-வால் வி.சி.க-வின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏனெனில், ஆதிக்க சாதியினரைச் சார்ந்து இயங்கும் கட்சியான திமுக-விடம் அத்தகைய தீர்வினை எதிர்பார்க்க முடியாது. மேலும், பெரும்பான்மையாக உள்ள ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை பகைத்துக்கொள்ளவும் விரும்பாது. மேலும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் வளருவதின் விளைவாய் சாதிய வன்முறைகள் அதிகரிக்கவே செய்யும்.
இதற்கு நம் முன் உள்ள ஒரே தீர்வு களப்போராட்டங்களை கட்டியமைப்பது மட்டுமே. புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான ஐனநாயக உரிமைகளுக்காக அவர்கள் பக்கம் நின்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சீனிச்சாமி