மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

0

மே 3 முதல் (80 நாட்களுக்கும் மேலாக) மணிப்பூர் மாநிலத்தில் இன முரண்பாடு காரணமாக வன்முறை நடந்து வருகிறது. 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் தனது அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ் பயணங்களில் கவனத்தைக் குவித்திருந்தார். பாவம் அவர்தான் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் உழைப்பவர் ஆயிற்றே, முன்னாள் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியதைப் போல. அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.

நேரில் செல்லாதது மட்டுமல்ல, ’சிறந்த பேச்சாளரான’ மோடி மணிப்பூர் பிரச்சினை குறித்து வாயைக் கூடத் திறக்கவில்லை. ஜூலை 20-அன்று காலையில்தான் மணிப்பூர் பிரச்சினை குறித்து அவர் தனது வாயை முதன்முறையாகத் திறந்துள்ளார். வாயைத் திறக்க அவருக்கு 79 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மணிப்பூரில் நடந்த இந்த சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானகரமானது” என்று கூறினார்.

மோடி இங்குக் குறிப்பிடும் சம்பவம், மணிப்பூரில் குக்கி – மைதேயி இடையே வன்முறை தொடங்கிய அடுத்தநாள் (மே 4 அன்று) நடைபெற்றது. பாதுகாப்புக்காகக் காட்டுக்குள் தப்பி ஓடிய குக்கி மக்களின் ஒரு குழுவைப் போலீசு மீட்டது. மைதேயி கும்பல் ஒன்று இடைமறித்தபோது. போலீசு குக்கி மக்களை அக்கும்பலிடமே ஒப்படைத்துவிட்டது. குக்கி ஆண்கள் இருவரைக் கொலை செய்த அக்கும்பல், பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்தது.


படிக்க: மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி


இந்த சம்பவம் குறித்து போலீசு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அதாவது மே 18 அன்றே, வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜூன் 12-ஆம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்தில் இச்சம்பவம் உட்பட 6 பாலியல் சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊடக அறிக்கைகளிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மணிப்பூர் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று கூறுவதென்பது பித்தலாட்டமாகும். பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்தவரான மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஒரு அரசியலமைப்புத் தலைவராக இல்லாமல் மைதேயி இனத்தவராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் மோடிக்குத் தெரியாதது அல்ல. இக்குற்றச்சாட்டை மட்டுமல்ல, மணிப்பூர் வன்முறையையே மோடி கண்டுகொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

குக்கி பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட காணொலி வைரலான பின்புதான் பிரதமரும் மணிப்பூர் முதல்வரும் தங்களது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

இப்பிரச்சினை குறித்து வாயைத் திறந்த முதல்வர் பிரேன் சிங் பொய்யைத் தான் உமிழ்ந்தார். போலீசு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததாகக் கூறியதன்மூலம் இரண்டு மாதகால போலீசுத் துறையின் செயலின்மையை மூடிமறைக்க முயன்றார்.

பிரதமர் மோடியோ பிரேன் சிங்கை கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தானோ சத்தீஸ்கரோ மணிப்பூரோ – எந்த மாநிலமாக இருந்தாலும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்திப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாகும். நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல அங்கும் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இக்கொடூரங்கள் இந்தியாவின் பார்ப்பனிய – ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும். மேலும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மணிப்பூரைப் போல பற்றி எரிந்து கொண்டிருக்கவில்லை.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


முன்னதாக ஜூலை 15 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட நாகா பெண் ஒருவர் தனது பழங்குடி அடையாளத்திற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து வன்முறை மற்றொரு சமூகத்திற்கும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டது.

மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

மே 3-ஆம் தேதி முதல் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. ஆயுதங்களைக் கொள்ளையடித்தல், இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்தான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடியோ மணிப்பூரில் எதுவுமே நடக்காததைப் போலவும், தற்செயலாக ஏதோவொரு தனித்த சம்பவம் மட்டும் நடந்துவிட்டதைப் போலவும் பேசியுள்ளார்.

அதேபோல், மோடி தனது உரையில் மணிப்பூரில் அமைதியை வலியுறுத்தியோ, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து மட்டுமே பேச மோடி விரும்பினார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மணிப்பூரில் நடைபெற்ற மற்ற பாலியல் வன்முறைகள் குறித்து அவர் வாய் திறக்கவில்லை. ”இதுபோல 100 சம்பவங்கள் நடக்கின்றன” என்று மணிப்பூர் முதல்வரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே மோடி தனது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மணிப்பூர் வன்முறை என்பது மத்திய மாநில பா.ஜ.க அரசுகளின் துணைகொண்டு நடந்தது என்பதை மறைப்பதுதான் அவரது நோக்கம். எனவே, முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க