அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை. எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை. பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை. பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

ணிப்பூர் குக்கி இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று பிரதமருக்கும் நன்கு தெரியும்.

கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த நமது பிரதமர் வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துகளும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது. அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை.

படிக்க : ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்

எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது. நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு சபைக்கு வந்தார்.

பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.

குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

ஆகையால், நாடாளுமன்றத்தை ஜூலை 24-ஆம் தேதிவரை ஒத்திவைத்துவிட்டார். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினால், கல்லூரிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவது போல, எதிர்க்கட்சிகளைக் கலைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு லீவுவிட்டுவிட்டார். இதெல்லாம், மிகவும் பழைய டெகினிக்.

எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ சபை கலைத்துவிட்டு சென்றுவிட்டார்.

“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். தற்போதைய நாடாளுமன்ற மரபையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

படிக்க : மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை.

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூசன் விசயத்தில் வாய் திறந்தாரா? இல்லை.

எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை.

பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை.

பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து முடக்கிவிட்டார். நாம் நாட்டை முடக்குவோம்!

புதிய ஜனநாயகம்
22.07.2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க