சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு யூனிநார் அலைபேசி நிறுவனம், நாம் இருக்கும் இடத்தின் – செல்போன் டவரின் பயன்பாட்டுக்கு ஏற்ப தள்ளுபடி என்ற திட்டத்தை அறிமுகம் செய்து கட்டண வசூல் செய்தது. ஓர் அழைப்பைப் பேசி முடித்து அடுத்த அழைப்பை நாம் மேற்கொள்ளும் போது கட்டண விகிதம் மாறிவிடும். தற்போது, அது போன்றதொரு நூதனக் கொள்ளையை மின்சாரத் துறையிலும் நடத்தவிருப்பதாக மோடி அரசு அறிவித்துள்ளது. “நேரத்திற்கேற்ற கட்டண முறை” (Time of Day Tariff) என்று இதற்குப் பெயரும் சூட்டியிருக்கிறது.
நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், சேவைத்துறைகளையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து நாட்டையே மறுகாலனியாக்கி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் மின்சார சட்டத் திருத்த மசோதா-2022 யையும் கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினாலும், மின்சார ஊழியர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் விடாப்பிடியான போராட்டத்தினாலும் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இந்நிலையில், “நேரத்திற்கேற்ற கட்டண முறை” (Time of Day Tariff) என்ற முறையில் மின்சாரக் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, மின்சாரப் பயன்பாட்டு நேரத்தைத் வகைபிரித்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது ஒன்றிய அரசு. இந்த முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், கிடப்பில் இருக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மறைமுகமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு முடிவு செய்திருப்பதையே இது காட்டுகிறது.
டி.ஓ.டி. முறையின்படி, ஒரு நாளின் 24 மணி நேரத்தை உச்சபட்ச மணி நேரங்கள், சாதாரண மணி நேரங்கள், சோலார் மணி நேரங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது ஒன்றிய அரசு. உச்சபட்ச மணி நேரங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணம் சாதாரண மணி நேரங்களுக்கான கட்டணத்தை விட 10 முதல் 20 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும் என்றும், சாதாரண மணி நேரங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை விட சோலார் மணி நேரங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணம் 10 முதல் 20 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் நிலைமைக்கேற்ப, உச்சபட்ச, சோலார் மற்றும் சாதாரண மணி நேரங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
படிக்க: மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், 10 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்சத் தேவை கொண்ட வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கும், 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயப் பயனாளர்களைத் தவிர மற்ற அனைத்து வீட்டுப் பயனாளர்களுக்கும் டி.ஓ.டி. முறையில் மின்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருக்கிறது மோடி அரசு.
இதற்கேற்ப பழைய மின் அளவீட்டு மீட்டர்கள் அனைத்தையும் மாற்றி 22.98 கோடி புதிய வகை ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த பல இலட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இந்த மீட்டர்கள் பொருத்தப்பட்டால், மின் பகிர்மானக் கழக அலுவலகக் கணினியில் இருந்தே ஒவ்வொரு மின் இணைப்பிற்குமான மின் அளவீட்டைக் கணக்கிட்டு கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். உரிய நேரத்தில் பணம் கட்டாவிட்டால் அலுவலகத்தில் இருந்தே மின் இணைப்பைத் துண்டிக்கவும், பணம் கட்டியவுடன் 12 நொடிகளில் தானாகவே மின் இணைப்பைச் சீர்செய்யவும் முடியும்.
கார்ப்பரேட் பாணி கட்டணக் கொள்ளை:
மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங், “மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் போது மின்சாரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக” இந்த டி.ஓ.டி. முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், “டி.ஓ.டி. கட்டண முறையை விழிப்புணர்வுடனும், திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர் தங்கள் கட்டணத்தைக் குறைக்க முடியும்” என்று சொன்னதன் மூலம் கல்லில் நார் உரிக்கும் வித்தையை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
மக்களுக்கு மின்சாரத்திற்கான தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், மின்சாரத்தைத் தடையில்லாமல் குறைந்த விலையில் விநியோகிப்பது தான் அரசின் கடமை. மாறாக, பெரும்பான்மை மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தைப் பயன்படுத்தவே வாய்ப்பில்லாத, மின்சாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில், மின்சாரத்தின் கட்டணத்தைக் குறைத்து, அதற்கேற்ப உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுவதெல்லாம் மக்களை மடையர்களாகக் கருதும் அயோக்கியத்தனம் ஆகும்.
இந்த டி.ஓ.டி முறையினால், தங்களுடைய மாதாந்திர வருவாயில் இருந்து மின்சாரக் கட்டணத்திற்கென இன்னும் அதிகப்படியான தொகையை ஒதுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். இப்புதிய முறையானது கார்ப்பரேட் பாணியில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கான ஒரு தொடக்க நடவடிக்கையே. மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ள ஏப்ரல், மே போன்ற மாதங்களில் அதிக மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான முறையும், பெட்ரோல் மற்றும் டீசலைப் போல நாளுக்கு நாள் மாறுபடும் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான முறையும், ப்ரீபெய்ட் முறையும் மோடி அரசின் நீண்டகால இலக்கில் உள்ளன.
‘மலிவு’ விலை சோலார் மின்சாரம் யாருடையது?
டி.ஓ.டி மின் கட்டணமுறையில், சோலார் மின் கட்டண மணி நேரங்களில் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது மோடி அரசு. மேலும், சோலார் மணி நேரங்களில் (தோரயமாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கலாம்) சூரிய மின்சாரத்தை மக்களுக்கு விநியோகிப்பதால் அதற்கான கட்டணம் குறைவு என்றும், உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் அனல் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அதற்கான கட்டணம் அதிகம் என்றும் கூறியுள்ளது மோடி அரசு.
சோலார் மணி நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யுமா மோடி அரசு? நிச்சயமாக அதற்கான வாய்ப்பு அரசுக்கு இல்லை. மாறாக, தனியார் நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக சூரிய மின் உற்பத்தியில் ஏகபோகத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதானி குழுமத்திடமிருந்து வாங்கும் மின்சாரத்தை டி.ஓ.டி முறையின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்வது தான் அரசின் திட்டம்.
ஒன்றிய அரசின் தரவுகளின் படி, நாட்டின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் மத்திய அரசு 24 சதவீதமும், மாநில அரசுகள் 25.3 சதவீதமும், தனியார் நிறுவனங்கள் 50.7 சதவீதமும் தற்போது பங்களித்து வருகின்றன. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியாரின் பங்களிப்பும், சூரிய ஒளி மின்னுற்பத்தியில் அதானியின் பங்கும் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய சூரிய மின்னுற்பத்திப் பூங்காக்களை அமைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அத்திட்டங்கள் யாவும் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமும் தனியார் நிறுவனங்களுடான ஒப்பந்தத்தின் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆற்றலை மாநில அரசுகளின் மின் உற்பத்தி நிறுவனங்கள் கொண்டிருந்தாலும் அவை திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன; அரிதாக சில ஒப்பந்தங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
சூரிய மின்னுற்பத்தித் திட்டத்திற்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு பறித்துக் கொடுப்பதும், மின் கொள்முதலுக்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதும்தான் மாநில அரசுகளின் பணியாக மாறியிருக்கிறது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக, இந்திய அளவில் சூரிய மின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட இத்தனை ஆண்டுகளில் கட்டியமைக்கவில்லை. எனவே மோடி அரசால், டி.ஓ.டி. மின் கட்டண முறையில் சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்களின் தயவு இல்லாமல் விநியோகிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அதானிமயமாகும் மின்சாரத்துறை:
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுடன் பல தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தமிட்டுக் கொண்டு சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட்டாலும், மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமம் சூரிய மின் உற்பத்தி துறையில் கொண்டுள்ள கட்டமைப்புகளுக்கு இணையாக வேறு எந்தத் தனியார் நிறுவனங்களிடமும் கட்டமைப்பு இல்லை.
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் ஏகபோகமாக வளர முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதானி நிறுவனம், தற்போது இப்பிரிவில் எட்டு ஜிகா வாட்டிற்கும் அதிகமான உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் பல மின் உற்பத்தி நிலையங்களை நிறுவியுள்ளது.
இது மட்டுமின்றி, குஜராத் மாநிலத்தில் 72,000 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் தகடுகள் மற்றும் காற்று விசையாழிகள் மூலம் 20 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி பூங்காவைக் கட்டியமைத்து வருகிறது. ராஜஸ்தானில் மாநில அரசு நிறுவனமான ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 10 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பூங்காக்களை கட்டம் கட்டமாக அமைத்து வருகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட் அளவுக்கு புதிப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது அதானி நிறுவனம். இது தனது இலக்கை எட்டினால், டி.ஓ.டி முறையில் சோலார் மின் நேரத்தில் விநியோகம் செய்வதற்கு தேவையான சூரிய மின்சாரத்தில் பெரும்பகுதியை கொடுக்கும் அளவுக்கு ஏகபோகமாகி விட முடியும்.
மின்னுற்பத்தி மட்டுமன்றி விநியோகத்திலும் ஏற்கெனவே கால் பதித்துவிட்டது அதானி குழுமம். மும்பை மாநகரத்தில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் 30 லட்சம் குடும்பங்களுக்கு, அதாவது மும்பை நிலப்பரப்பில் 85 சதவிகிதத்திற்கும், மக்கள் தொகையில் 67 சதவிகிதத்திற்கும் மின் விநியோகம் செய்து வருகிறது அதானி நிறுவனம்.
படிக்க: மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!
மேலும், மும்பை, டெல்லி போன்ற வருவாய் அதிகமுள்ள பெருநகரங்களில் அம்பானி – அதானி – டாடா உள்ளிட்ட 14 தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே மின்சார விநியோகம் செய்து வருகின்றன. இதன் மூலம், மின் விநியோகத்தில் தனியாரை அனுமதிப்பதை முக்கிய அம்சமாகக் கொண்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பே, அதை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன ஒன்றிய அரசும் மாநில அரசுகளும்.
மின்சாரத்துறையை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கும் இலக்குடன் நிலக்கரி, நீர் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநில அரசுகளின் கட்டமைப்புகள் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுகள் மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தனியார் நிறுவனங்களைச் சார்ந்து இருக்கக்கூடிய அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல மாநில அரசுகள் அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலக்கரிக்கும் கூட குறிப்பிட்ட சதவிகிதம் அதானியைச் சார்ந்துதான் உள்ளனர்.
உண்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள், மின் விநியோகம் என மின்சாரத்துறையை மலைப்பாம்பு போலச் சுற்றி வளைத்து வருகிறது அதானி குழுமம். இவையனைத்தும் கடந்த பத்தே ஆண்டுகளில் நடந்து முடிந்துவிட்டன.
எனவே, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியாரின் ஆதிக்கத்தை, அதிலும் குறிப்பாக அதானியின் ஆதிக்கத்தை நிறைவடையச் செய்வதற்கான இறுதிக்கட்ட முயற்சியே மின்சாரச் சட்டத்திருத்த மசோதா -2022 என்றால் அது மிகையாகாது. அதில் தாமதம் ஏற்படுவதைக் கூட சகித்துக்கொள்ள விரிம்பாமல் தான் டி.ஓ.டி எனப்படும் நேரத்திற்கேற்ற மின் கட்டண முறையை நயவஞ்சகமாக அமல்படுத்துகிறது, மோடி அரசு.
மோடி அரசின் துணையுடன் சட்டத்திருத்தங்களையும், வங்கிக் கடன் மற்றும் தள்ளுபடிகளையும் இதர சலுகைகளையும் ஆயுதங்களாகக் கொண்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அம்பானி – அதானி கும்பலின் ஏகபோக ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு விட்டது. இப்போது அவர்கள் மின்சாரத் துறையின் மீது இறுதித் தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்டு நாட்டின் பல மாநிலங்களிலும் பெரும் செலவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதில், கேரளா மட்டுமே விதிவிலக்கு. கேரளாவில் மின் ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பு இருந்தாலும், கடன் நெருக்கடியும், அதிகப்படியான செலவும் சேர்ந்து அரசைத் தற்காலிகமாகப் பின்வாங்க வைத்துள்ளன.
மோடி கும்பல் அதிகாரத்தில் இருப்பதுதான் தங்களுக்குப் பிரச்சினை, மற்றபடி கார்ப்பரேட் சேவையில் தங்களுக்கும் உடன்பாடு தான் என்பதை எதிர்க்கட்சிகள் மறைமுகமாக அறிவித்துக் கொள்வதன் வெளிப்பாடே இது. ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி கும்பலின் பாசிசத்தை முறியடிக்கும் போரில் இந்த மண்குதிரைகளை நம்பி உழைக்கும் மக்கள் இறங்க முடியாது என்பதை தமது ஒவ்வொரு நடவடிக்கையிலும் நிரூபித்து வருகிறார்கள்.
மின்சாரம் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் துறைகளையும் தனியார்மயமாக்கி, நாட்டையே மறுகாலனியாக்கிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல். இதற்கெதிராக, அகில இந்திய அளவில் மின்வாரிய ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளால் பாதிக்கப்படும் அனைத்து வர்க்கங்களையும் ஒருங்கிணைக்கும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாகும்.
சிவராமன்