நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

நீட் எனும் பலிபீடத்தில்; தொடர்ந்து பலியாகும் மாணவர்கள்!

டந்த ஆகஸ்டு 14-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த, ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வில் இரண்டுமுறை தேர்ச்சி அடைந்தும் மருத்துவக்கனவை அடைய முடியாததால் துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் மறுநாள்(15/08/2023) காலை, அவரது தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஜெகதீஸ்வரன் சென்னை சைத்தன்யா சிபிஎஸ்இ பள்ளியில் படித்துள்ளார். 12-ஆம் வகுப்பில் A-கிரேடு’ல் 85 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் “ஆகாஷ்”(Aagash) எனும் தனியார் நீட் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 2 வருடம் நீட் தேர்வு பயிற்சிப் பெற்றுள்ளார். இறப்பதற்கு முன்புதான் மூன்றாவது முறையாக பயில்வதற்கு பதிவு செய்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரன் 14/08/2023 அன்று ‘சிட்டலப்பாக்கம்’ காவல்நிலையத்தில் நீட் தேர்வினால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளித்தார். அதன்பின் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தான் போட்டோகிராபர் தொழில் செய்வதாகவும், ஒற்றை பெற்றோராக (single parent) இருந்து தன் மகனை வளர்த்து வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும் “நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் போராட வேண்டும்” என தனது இறுதி வார்த்தைகளை உருக்கமாகத் தெரிவித்தார்.

படிக்க : தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

ஜெகதீசனுக்காக வாதாடும் அவரது நண்பர் ஃபயாஸ்தின் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக தனியார் கோச்சிங் சென்டருக்கு போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், ரூபாய் 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ்  சேர்த்துள்ளேன்.

ஆனால் அந்தப் பணம் இல்லாததால் அதிக மதிப்பெண் பெற்ற எனது நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்து விட்டோம்!” மேலும், “உனக்கு கிடைத்த  வாய்ப்பு முக்கியமானது அதை வைத்து மக்களுக்கு சேவை செய்” என்று ஜெகதீஸ்வரன் கூறியதாக உருக்கமாகவும், மனக் குமுறல்களுடனும்  ஃபயாஸ்தின் தெரிவித்தார்.

அதேபோல் “சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்கள் எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ள இயலும்” என ஃபயாஸ்தின் கேள்வி எழுப்பினார்.

000

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆகஸ்டு 11-ம் தேதி நடந்த, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை “எப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போகிறீர்கள்” என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு திமிர் பிடித்த வகையில் பதிலளித்த ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆளுநர்  ஆர்.என்.ரவி “நான் உள்ளவரை கண்டிப்பாக நீட்டை ரத்து செய்ய மாட்டேன்” என்று தமிழ்நாட்டு மண்ணில் இருந்து கொண்டே கொக்கரித்தார்.

கேள்வியெழுப்பியவர் அத்துடன் நிறுத்தாமல் ஒன்றிய அரசு ஊழியராக நான் இருந்ததால் என் மகளை படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், இதனால் “கோச்சிங் சென்டர்களுக்கு தான் லாபம்” என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

மேலும் அம்மேடையில் ஆளுநர் சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் சிறந்த பாடத்திட்டம், அது தான் நீட் தேர்விற்கு தேர்ச்சிப் பெற உதவும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த ஜெகதீஸ்வரன் போன்ற மாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு போயும் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், தற்கொலை செய்து கொள்வதும் இந்த பொய்களை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

“நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன் நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று குமுறுகிறார் ஃபயாஸ்தின்.

நீட் தேர்வினால் கொலைசெய்யப்பட்ட அனிதா தொடங்கி அரசு பள்ளியில் படிக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தான் நீட் தேர்விற்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற வாதம் ஆளும் வர்க்கத்தினரால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வந்தன.

ஆனால் அதை சுட்டெரிக்கும் விதமாக ஜெகதீஸ்வரனின் மரணமும், அவரின் நண்பர் ஃபயாஸ்தினின் பேட்டியும், ஆளுநர் மாளிகையில் மாணவியின் தந்தை ஒருவர் நீட் தேர்வுக்கு எதிராக  எழுப்பிய கேள்வியும் நீட் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளது.

“தேசிய தேர்வு முகமை” மூலம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு நீட் (NEET) என்ற நுழைவுத் தேர்வை நடத்தி ‘தகுதி’ என்ற பெயரில் மாணவர்களின் உயிரையும், அவர்களின்  மருத்துவ கனவையும் காவு வாங்கி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இன்று மருத்துவம் என்பது  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கூறுவது போல்,  “பணம் உள்ளவன்தான் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும், அப்படி பணம் கொட்டி படிப்பவர்கள் மீண்டும் பணம் பார்க்கத்தானே பார்ப்பார்கள்” என்பதுதான் உண்மை.

மருத்துவம் என்னும் சேவைத் துறையை பணம் பறிக்கும் வணிகமாக மாற்றியுள்ளது நீட் தேர்வு. இந்த நீட் தேர்வினால் மட்டும் தமிழ்நாட்டில் கடந்த 4-5 ஆண்டுகளில் இருபது மாணவர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 2 முறை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டால் முதலில் தனது நாற்காலி அடியில் போட்டு அமர்ந்து கொண்டு பின்பு தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குடியரசு தலைவர் இது குறித்து விசாரணை செய்துள்ளாரா? என தெரிவதற்கு முன்னரே மேலும் ஒரு உயிர் பலியாக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இன்னும் எத்தனை உயிர்களை பலிக் கொடுத்து கொண்டே இருப்போம் என்ற கேள்வி நம்மை நோக்கி எழுப்பப்படுகிறது தானே!

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர்கள் “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டை நோக்கியும் எழுப்பப்பட்ட கேள்விகள்.

படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

உதயநிதி அளித்த பேட்டியில், “சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு, இல்லையென்றால் தெருவில் இறங்கி போராட வேண்டியதுதான். தமிழக மாணவர்கள் போராடினால் திமுக அதற்கு ஆதரவு தரும்” என்றார். இனி சட்டப்போராட்டத்தால் தீர்வில்லை, களப்போராட்டமே நீட்டை ரத்து செய்யும் என்று ஆளுங்கட்சி அமைச்சர் தரும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

அனிதா முதல் ஜெகதீசன் தற்கொலை வரை நமக்கு உணர்த்துவது அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைதான்! அதை வார்த்தை மூலமாகவே ஜெகதீசன் தந்தை நமக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளார் “நீட்டுக்கு எதிராக போராட்டம் பண்றதுக்கு ரெடி, தமிழ்நாடு மக்கள் ஒத்துழைத்தால், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லை இந்தியாவில் இருந்து கூட நீட் தேர்வை எடுத்து விட முடியும்” என்றார்.

இதைப் பற்றிகொண்டு தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும்தான் போராட்டக் களத்திற்கு வரவேண்டியுள்ளது. “நீட் தேர்வை ரத்து செய்” என்று முழங்க வேண்டியுள்ளது.

தென்றல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க