இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பாட பிரிவில் புதிதாக சுவடியியல் (Manuscriptology) மற்றும் தொல்லெழுத்தியல் (Paleography) ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வடிவமைக்க சிறப்புக் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிறுவியுள்ளது.
தேசிய சுவடியியல் திட்டக்குழுவின் முன்னாள் இயக்குநர் பிரபுல்லா மிஸ்ரா தலைமையில் 11 பேர் கொண்ட இக்குழுவில், ஐஐடி மும்பையின் பேராசிரியர் மல்ஹர் குல்கர்னி, குஜராத் பல்கலைக்கழகத்தின் மொழிப்பள்ளியின் முன்னாள் இயக்குநர் வசந்த பட் மற்றும் டெல்லி என்.சி.இ.ஆர்.டி.யின் சமஸ்கிருதப் பேராசிரியர் ஜதீந்திர மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவைக் கொண்டு சுவடியியல் மற்றும் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்கள் சிறப்பு பாடமாகவோ அல்லது தேர்வு பாடமாகவோ (elective) வடிவமைக்கப்படும். சுவடியியல் பாடம் மூலம் கைகளால் எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் ஆவணங்களையும், தொல்லெழுத்தியல் பாடம் மூலம் பழங்கால, இடைநிலை எழுத்து முறைகளையும் ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
படிக்க : ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி
இது தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அறிவு முறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகும் என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் யுஜிசி தலைவருமான ஜெகதேஷ் குமார். மேலும், பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய கையெழுத்து பிரதிகள், தத்துவம், அறிவியல், இலக்கியம் மற்றும் மதம் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை இது உள்ளடக்கியது என்கிறார் ஜெகதேஷ் குமார். இத்தகைய பாடத் திட்டங்கள் பல்கலைக்கழகங்களால் உடனடியாக ஏற்றுகொள்ளப்படலாம் என்றும் கூறுகிறார்.
தத்துவம், அறிவியல், இலக்கியம் என்று இவர் கூறவருவது என்ன? பிள்ளையாருக்கு யானை தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், புற்றுநோயை குணப்படுத்த மாட்டு மூத்திரம், ராமாயணத்தில் விமானம், அர்ஜூன் பயன்படுத்திய அணுசக்தி அம்புகள், மனுஸ்மிருதி தத்துவம், வேத இதிகாச வரலாறு என அடுக்ககடுக்கான பொய்களையும் புராண குப்பைகளையும் கொட்டுவதைதான்.
இதுமட்டுமல்ல மேற்கூறிய பாடங்கள் நாட்டின் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கும் அதன் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கும் என்று புளுகுமூட்டையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஆனால், இப்பாடத் திட்டத்திற்கான 75 சதவிகித கையெழுத்து பிரதிகள் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது என்றும் மற்ற பிராந்திய மொழிகளில் வெறும் 25 சதவிகிதம்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
அதாவது இப்பாடத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் செத்து புதைந்து போன சமஸ்கிருத மொழியை மீட்டுருவாக்கம் செய்வதும் புராண குப்பைகளை ஆவணம் செய்வதும்தான் நடக்கபோகிறது.
படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
பன்முகத் தன்மையை வளர்ப்பதாக கூறும் இவர்கள் கடந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கும் பிற மொழிகளை மேம்படுத்தவும் எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது இதர 5 மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.29 கோடியை விட 22 மடங்கு அதிகம் என மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன. மேலும், 2020-ஆம் வரை ஒடியா மற்றும் மலையாளம் மொழிக்களுக்கு வளர்ச்சி மையங்களே அமைக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பள்ளி கல்வி பாடத் திட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் பாசிச பா.ஜ.க.வின் கல்வியை காவிமயமாக்கும் மற்றொரு நடவடிக்கை இது.
ஆதினி