உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்

2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

ஜூன் மாதத்தில் 3 சதவிகிதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் ஜூலை 13-ஆம் தேதியில் 4.8 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூலை 19-ஆம் தேதியன்று 5.2 சதவிகிதமாக உயர்ந்தது. தக்காளி, பருப்பு வகைகள், தானியங்களின் விலை உயர்வு காரணமாக இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் இந்த ஆண்டு மே மாதத்தில் 4.25 சதவிகிதமாக இருந்தது. இது ஜூனில் 4.81 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போலவே மொத்த பணவீக்கம் மே மாதத்தில் 3.48 சதவிகிதத்தில் இருந்து ஜூனில் 4.12 சதவிகிதமாக உயர்ந்தது.

2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் தொடர்பான மதிப்பீடுகளை மாற்றியமைத்த வகையில் இந்த பணவீக்கம் என்றால், உண்மையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது மிக மோசமானதாகும்.

ஜூனில் தக்காளியின் விலை 300 மடங்கு அதிகரித்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசியின் விலை சராசரியாக 10 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் 40 ரூபாய் அரிசி வகைகள் அனைத்தும் ரூ.10-12 வரை விலை உயர்ந்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் இவற்றின் விலை மேலும் அதிகமாக உள்ளது.

சமையல் எண்ணெயின் விலை உயர்வு என்பது மிக அதிகமானதாகும். நமது நாட்டின் சமையல் எண்ணெய் தேவையின் பெரும்பகுதி, 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.

கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆளி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை உள்நாட்டிலேயே உற்பத்தியானாலும் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாகவும் வணிக முறைகள் காரணமாகவும் இந்த விலை பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. கடலை எண்ணெய் மொத்த விற்பனையில் ரூ.162 இருந்தாலும் நடைமுறையில் அது ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதைப் போலவே மற்ற சமையல் எண்ணெய்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் கோல்டு வின்னர் சூரிய காந்தி எண்ணெய் ரூ.140, நடுத்தரக் குடும்பங்கள் பயன்படுத்தும் இதயம் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.500, தேங்காய் எண்ணெய் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. மிகவும் மலிவான எண்ணெய் என்று கருதப்பட்ட பாமாயில் ரூ.90 வரை விற்கப்படுகிறது.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


இதைப்போலவே பருப்பு வகைகளின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.95 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.130-150 வரை விற்கப்படுகிறது. இதைபோலவே உளுத்தம் பருப்பு ரூ.130 ஆக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த நிலைமை நீடித்தால் துவரம் பருப்பு ரூ.200 வரை விலை உயர்வதற்கான அபாயம் உள்ளது.

இந்த விலையேற்றம் அக்டோபர் மாதம்வரை நீடிக்கும் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இத்துடன், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அன்றாடம் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு உருளை விலை போன்றவையும் மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த விலையேற்றங்கள் அனைத்து வகையிலும் உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுகளுக்குத் தள்ளி வருகிறது.

செயற்கைப் பேரிடர்

போதிய அளவில் மழை பெய்யாமை, வெப்ப அலை வீச்சு அல்லது மிகையான புயல், பெரு மழை, வெள்ளம் போன்றவை விவசாயத்தை பெரிதும் பாதித்துள்ளன; இத்துடன் ரஷ்ய-உக்ரைன் போரும் விலையேற்றத்திற்கு காரணம் என்றெல்லாம் ஆளும் பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து பேசிவருகிறது. மேலும் உணவுப் பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கின்றனர் என்றும் சிறுவியாபாரிகளைக் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால், இயற்கைச் சீற்றங்களால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உணவுப் பொருள்கள் பற்றாக்குறை மட்டுமே தற்போதைய விலையேற்றத்திற்கு காரணமல்ல. மாறாக, பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்தையும் சிறுதொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றையும் மேம்படுத்துவது என்ற பெயரில், அத்தொழில்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டதுதான் இந்த பெரும் நெருக்கடிக்குக் காரணமாகும்.

அறுவடைக் காலங்களான ஜனவரி-மே வரை உணவு தானியங்களின் விலையைக் குறைத்து விவசாயிகளிடம் குறைந்த விலையில் தானியங்களைக் கொள்ளையடிப்பதும், அதன் பின்னர் ஜூன் முதல் அக்டோபர் வரையில் அதிக விலைவைத்து விற்பதும் காலங்காலமாக கமிசன் மண்டிகளும் தரகு முதலாளிகளும் கூட்டு வைத்து நடத்தி வந்த கொள்ளையாகும்.

உள்ளூர் மற்றும் வட்டார அளவில் நடந்து வந்த இந்த வர்த்தகக் கொள்ளைக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, கார்ப்பரேட்டுகளைப் புகுத்தி, ஆன்லைன் வர்த்தகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு தானியங்களைப் படுவேகமாக கொள்முதல் செய்யவும் அவற்றை அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையின் மூலம் விலையுயர்த்திக் கொள்ளையடிக்கவும் அனுமதிக்கப்பட்டன.

ஆகையால், இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் கொள்ளையின் விளைவாகும். அதிலும் குறிப்பாக, 2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். உணவுப் பொருட்களின் விலையுயர்வு மட்டுமின்றி, இக்கொள்கைகள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரும் பேரழிவை நோக்கி இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட் அடிமை பா.ஜ.க. அரசு

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை அரசால் தலையிட்டுத் தடுக்க முடியும். ஆனால், தனியார்மயம் கொண்டுவரப்பட்ட பின்னர், அரசு சந்தையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற உலக வங்கியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. 2014 வரையில் மன்மோகன் ஆட்சியில் கூட சில கட்டுப்பாடுகளை அரசினால் விதிக்க முடிந்தது. ஆனால், மோடியின் புதிய இந்தியாவிலோ பெயரளவிலான கட்டுப்பாடுகளை கூட விதிக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்கு மொத்த நாடும் தள்ளப்பட்டுள்ளது.

ஆகையால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற பா.ஜ.க. அரசின் கொள்கைதான் இந்த நெருக்கடி தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகும். ஒருவேளை, இந்த விலையேற்றத்தால் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு பாதிப்பு என்றால் மட்டுமே மோடி அரசு சந்தையில் தலையிடும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையேற்றத்தைச் சமாளிக்க இந்திய உணவுக் கழகம் 25 லட்சம் டன் கோதுமையை ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்தது. இதில் 3 லட்சம் டன் மட்டுமே அரசுக்கு ஒதுக்கப்பட்டது. இது ஏழை மக்களுக்கு அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 29.50 ரூபாய்க்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூன் 18-ஆம் தேதி, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் எதிர்ப்பைக் காட்டியபோதும், இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் தானியங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் விற்பனை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது, மோடி அரசு. தற்போது இந்திய உணவுக் கழகத்தில் 7.25 கோடி டன் உணவுதானியங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றை மாநில அரசுகளுக்கு சந்தை விலையில் கொடுத்தால் கூட பெருமளவு மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். பற்றாக்குறையை ஈடுசெய்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. இப்போது மட்டுமல்ல, பெருந்தொற்று காலத்தில் கூட இந்திய உணவுக் கழகத்தில் இருப்பில் இருந்த தானியங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்ததே அன்றி, மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ கொடுக்க முன்வரவில்லை.

ஊற்றி மூடப்பட்டுவரும் பொதுவிநியோக முறை

பொதுவிநியோக முறை என்பது நாட்டு மக்களுக்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதன்கீழ் மேற்கொள்ளப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியம் என்பது ஒன்றிய அரசின் முதல் ஐந்து செலவினங்களில் ஒன்றாகும். இத்திட்டமானது விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை பொதுமக்களுக்கு மலிவான விலையில் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். விவசாயிகளுக்கான மானியங்கள், பயிர்க்கடன்கள், இந்திய உணவுக் கழகம், ரேசன் கடைகள் உள்ளிட்டவை இந்த பொதுவிநியோக முறையின் கீழ் வருபவையாகும்.

தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கிய பின்னர், பொதுவிநியோக முறைக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன. உண்மையில், தனியார்மயத்தின் விளைவாக விவசாயத்தை விட்டு விவசாயிகள் விரட்டப்பட்டு வருவது, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களுக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ உணவுப் பொருட்களுக்கான மானியங்களை ஒப்பீட்டளவில் குறைத்து வந்தது.


படிக்க: அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?


இந்நிலையில், 2014-இல் மோடி-நிர்மலா சீதாராமன் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பொதுவிநியோகத்திட்டத்தை ஒழிப்பது என்பது ஒரு புதிய பாய்ச்சலுக்குச் சென்றது. நாடு தழுவிய அளவில் ஐந்தாண்டு திட்டங்களைப் போட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் முறை கைவிடப்பட்டது; அதற்கான கொள்கை வகுக்கும் திட்டக் கமிசனும் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் “நிதி ஆயோக்” என்ற பொருளாதார பயங்கரவாத அமைப்பு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் படுவேகமாக மாற்றப்பட்டன. இந்திய உணவுக் கழகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்க திறந்துவிடப்பட்டது. ரேசன் கடைகளை (பொதுவிநியோக முறையை) ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன; ஸ்மார்ட் கார்டுகள் கொண்டுவரப்பட்டன.

2004 ஆம் ஆண்டில், வாஜ்பாய் ஆட்சி காலம் நிறைவடையும்போது, பொதுவிநியோக முறையில் நிறைய தானியங்கள் வீணாக்கப்படுகின்றன (47 சதவிகித தானியம் விரையமாகிறது) என்று கார்ப்பரேட் ஊடகங்களாலும் அரசினாலும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம் “திறமையின்மை” மற்றும் “திருட்டு” என்று கூறி உணவுப் பொருளில் அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றனர் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இதன் அடிப்படையில்தான், மோடி அரசு ரேசன் கார்டுடன் ஆதாரை இணைத்தது.

ஆனால், “திருட்டு” மற்றும் “திறமையின்மை” என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்று கேள்வி கேட்பதற்கு இன்று ஆள் இல்லை. சில்லறை உணவுப் பொருள் விற்பனையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நிலையில், அரசுக் கொள்முதலின் பெரும்பகுதி கார்ப்பரேட்டுகளிடம் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆதார் அங்கீகரிப்புப் பிழைகள், ஸ்மார்ட் கார்டு அங்கீகரிப்புப் பிழைகள் காரணமாக பல ஆயிரம் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. இதற்கெல்லாம், பா.ஜ.க. அரசு எந்தவகையிலும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை.

இதுமட்டுமல்ல, இந்திய உணவுக் கழகம் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்யும் வகையில் சுருக்கப்பட்டதால், பொதுவிநியோக முறையும் அரிசி-கோதுமை வழங்குவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.

நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் புரதச் சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கும் போது, இந்த நடவடிக்கைகளானது மக்களை நிரந்தர ஊட்டச்சத்து குறைபாடு நிலைக்குத் தள்ளியுள்ளது. இதுமட்டுமின்றி, பன்முகப்பட்ட வறியநிலை என்பது கிராமப்புறங்களில் 32.75 சதவிகிதமாகவும் நகரங்களில் 8.8 சதவிகிதமாகவும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.

000

2022-23 நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை என்று கணக்குக் காட்டப்பட்டவை எல்லாம், பொதுவிநியோக முறையை வலுப்படுத்தும், உணவுப் பொருட்களுக்கு மானியங்களை வழங்கும் நோக்கத்திலானவை அல்ல. மாறாக, கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளம் ஆகியவற்றில் ரூ.20 இலட்சம் கோடி கடன் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது; இவை அனைத்தும் இத்துறைகளிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மேம்படுத்தும் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொடர்பான கடன்களாகும்.

ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து 32 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஒதுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறந்தள்ளிவிட்டது. மேலும், பிரதம மந்திரியின் மதிய உணவு திட்டத்திற்கான நிதியை சென்ற ஆண்டைவிட 9.37 சதவிகிதம் குறைத்துள்ளது. மொத்த உணவு மானியம் 2022-23-இல் முந்தைய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.2,06,831.09 கோடியிலிருந்து ரூ.1,97,350 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், பொதுவிநியோகத் திட்டம், மானியங்கள் அனைத்தும் அதன் அந்திமக்காலத்தை அடைந்துவிட்டன. ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களையும் நகர்ப்புற ஏழை உழைக்கும் மக்களையும் ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை நிராதரவாக கைவிடும் திட்டமும் நாட்டை மிகப்பெரும் பஞ்சம் பட்டினியில் தள்ளிவிடும் சதித்திட்டத்தையும் பா.ஜ.க. அசுர வேகமாக அரங்கேற்றி வருகிறது.

மக்களின் மாநிலங்களின் உயிரைக் குடிக்கும் ஜி.எஸ்.டி.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி., அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே சிறுதொழில், குறுந்தொழில் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகர்கள், சிறுவணிகர்களை பெரிதும் அழித்துள்ளது. இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.யின் சர்வாதிகார பாணியிலான கட்டாயமாக்கப்பட்ட முறைப்படுத்துதல் மற்றும் திட்டமிடப்படாத பெருந்தொற்று ஊரடங்கு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

2022-23 நிதியாண்டில் மட்டும் சுமார் 10,655 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (2021-22 இல் 6,222, 2020-21 இல் 175, 2019-20 இல் 400) அதிகரித்த எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் அளவு தொடர்பான அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டது. முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத வரி வருவாயுடன் ஒப்பிடும்போது இப்போது 12 சதவிகிதம் (19 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளதாகவும் சென்ற மாத வரிவருவாயுடன் ஒப்பிடும்போது 17.5 சதவிகிதம் (ரூ.27 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதை “எளிமையான அரசாங்கம், திறமையான நிர்வாகத்”தின் விளைவு என அலங்கார வார்த்தை ஜாலங்களுடன் அறிக்கையில் விளக்கியிருந்தது.

ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தியபோது, மறைமுக வரிக்கான மாற்றாக இது இருக்கும் என்று ஜி.எஸ்.டி. ஆதரவாளர்கள் பலரும் ஆரவாரமாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சாதாரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வரிவருவாயில் குறிப்பிட்ட சதவிகித உயர்வு இருக்கும் என்பதுடன் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும், ஒரு அம்சத்தை ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. ஜி.எஸ்.டி.யில் இருந்து பெறப்படும் வரவுகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் மாநிலங்களுக்கு ஈடு செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்து ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனுடன் ஒப்பிட்டு, ஜி.எஸ்.டி.யின் இப்புதிய ஆட்சியின் கீழ் வரிகளின் வருவாயில் 14 சதவிகித வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரிவிகிதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒன்றிய அரசால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், எந்தவொரு மாநில அரசும் அதில் தலையிட்டு தங்களுக்கு இணக்கமான வரிவிகிதங்களைக் கொண்டுவரமுடியாது. இந்த முறையால் மாநில அரசுகள் கிட்டதட்ட ஒன்றிய அரசின் பிணைக் கைதிகளாக இருக்கின்றன. அதாவது, ஜி.எஸ்.டி. வரிவருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. சர்வாதிகாரம் தொடங்கிய 2018-19 முழு நிதியாண்டில் இருந்து இந்த 2022-23 முழு நிதியாண்டு மட்டுமே தடையில்லாமல் வரி வருவாய் உயர்ந்து வந்த ஆண்டாகும். இடையில் இரண்டு நிதியாண்டு காலங்களில்தான் கொரோனா பெருந்தொற்றினால் சந்தைகள் நிலை குலைந்து போயின. உற்பத்தி மற்றும் விநியோகம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த காலங்களில் வரிவருவாய் நிலையான உயர்வை அடையவில்லை.

வரி உயர்த்தப்படுவதானது தனித்த ஒரு நிகழ்வாக சுருங்கிவிடுவதில்லை. வரி அதிகரிப்பு என்பது பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகி, பணவீக்கத்தை அதிகரிக்கிறது. இதுதான் முதலாளித்துவ சந்தை விதியாகும்.

எரிபொருள் விலை உயர்வின் கோரமுகம்

ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படாத இரண்டு துறைகள் எனில் அவை பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உருளை மற்றும் மதுபானங்கள் ஆகிய இரண்டு துறைகள்தான்.

இதில் அதானி, அம்பானி ஆகியோர் பெட்ரோல், டீசல், எரிவாயுகளில் முதலீடு செய்து கொள்ளையடிப்பதற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையுயர்வை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது மோடி அரசு.

2016 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62, இன்று சுமார் ரூ.97. இதைப்போலவே, டீசல் விலை ரூ.55, இன்று அதன் விலை சுமார் ரூ.90. ஏறக்குறைய இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகிதம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதைப்போலவே, 2015 பிப்ரவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.600. இன்று அதன் விலை ரூ.1,118.50.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில், ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த பாஹல் திட்டம் (PAHAL Scheme – நேரடி பயன்பெரும் திட்டம்) இரண்டு முறை திருத்தப்பட்டது. இதன் நோக்கமே, சமையல் எரிவாயுக்கான மானியத்தை வெட்டுவதுதான். இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இருந்து சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மட்டும் ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் பெட்ரோலியத் துறை செயலர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் இந்த விலையுயர்வு தொடர்ந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணிகளில் முக்கியமானதாகும்.

மோடியின் புதிய இந்தியா

பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை என்று தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டாலும் இது நாட்டின் பொதுவான நிலைமை அல்ல. கர்நாடக மாநிலத்தில், கர்நாடகப் பெண்களுக்கு மட்டுமே இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அன்றாட செலவினங்கள் அதிகரித்துள்ளன. மதுரை, சென்னை, திருச்சி, கோவை, ஒசூர் போன்ற பெருநகரங்களில் வாழும் சாதாரண மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை பேருந்துக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கட்டணம் ஒரு அத்தியாவசிய கட்டணமாக உள்ளது.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல சிறு தொழில்கள் அழிந்துபோயின. போக்குவரத்தைச் சீர்படுத்துவது, சுகாதாரத்தைப் பேணுவது என்ற பெயரில் சாலையோரக் கடைகள், தெருக் கடைகள் அனைத்தும் அன்றாடம் நெருக்கடியை சந்திக்கின்றன.

இத்துடன், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை உழைக்கும் மக்கள் நகரத்தின் மையப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வேலைவாய்ப்புக்காக பெருநகரங்களைச் சார்ந்து வாழும் மக்கள் அன்றாடப் பயணம் செய்வதற்கு நிர்பந்திக்கப் படுகின்றனர். தொடர்ச்சியாக வீட்டு வாடகைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவது, குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு அதிக செலவழிக்க வேண்டியிருப்பது போன்றவையெல்லாம் நகரவாழ்க்கையை பெரும் சிரமத்திற்குத் தள்ளியுள்ளது.

2014-இல் மோடி ஆட்சிக்கு வந்து வாக்களித்த எந்தத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போடப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளும் ஏமாற்று நடவடிக்கைகள் என ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது.

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நெருக்கடியில் இருந்த சிறுதொழில்கள் பல அழிந்துவிட்டன. இச்சூழலில் 2018 இறுதியில் வாகன உற்பத்தித் துறையில் தொடங்கிய பின்னடைவானது மொத்தப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. 2019-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி-நிர்மலா கும்பல், கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. 2020 கொரோனா  பெருந்தொற்றை ஒட்டி ஊரடங்கு காலத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள் வழக்கப்பட்டன. இத்துடன், பணப்பரிவர்த்தனைகளை குறைத்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்களைக் கொண்டுவருவதற்கு இந்தப் பெருந்தொற்று நெருக்கடி பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இன்னொருபுறம், பா.ஜ.க.வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பட்டிதொட்டி எங்கும் ஆன்லைன் விற்பனையின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. சிறிய கிராமங்களில்கூட டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற வகையில் விற்பனைக் கடைகள் உருவாகிவிட்டன. நாட்டின் பல்வேறு நகரங்கள், சிற்றூர்களிலும் சங்கிலித் தொடர் டீ கடைகளான “டீ டைம்”, “கருப்பட்டி காபி” போன்ற கார்ப்பரேட் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆண்கள் அழகு நிலையம், பெண்கள் அழகு நிலையங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சமூகத்தின் உயர் நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உரிய பொருளாதாரங்கள் மட்டுமே முன் தள்ளப்படுகின்றன.

குறிப்பாக, டிஜிட்டல் வடிவிலான கல்வி, ஆன்லைன் கல்வி பலமடங்கு அதிகரித்துள்ளது. முதல் வகுப்பில் இருந்தே ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் செல்போன் விற்பனையும் டிஜிட்டலுக்காக மக்கள் செலவிடும் அளவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. பைஜூஸ் என்பது இப்படி உருவாகி மக்களின் சொத்தை சூறையாடிய ஒரு கார்ப்பரேட் ஸ்டார்ட் அப் நிறுவனம்தான்.

ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்றவை எல்லாம் இன்று குப்புறக் கவிழ்ந்து கிடக்கின்றன. பல நாடுகளுக்கு ஓடி ஓடி அந்நிய மூலதனத்தை ஈர்த்த மோடியால், இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வரும் போது, 2013-இல் அதானியின் மூலதனம் 26 கோடி டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் 1,123 கோடி டாலராக 43.2 மடங்கு அதிகரித்தது. அதாவது, 4320 சதவிகிதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதைப்போலவே, அம்பானி 2014-இல் 180 கோடி டாலருடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 41வது இடத்தில் இருந்தார். 2019-இல் 540 கோடி டாலருடன் இவரை 9வது இடத்திற்கு உயர்த்தினார் மோடி. 2023-இல் இவர் 820 கோடி டாலருடன் இந்தியாவில் முதல் பணக்காரராக இருக்கிறார்.

மோடி குறிப்பிடும் புதிய இந்தியா என்பது இதுதான். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது என்று குறிப்பிட்டு வந்ததன் பொருளும் இதுதான். தற்போது கார்ப்பரேட் கும்பல் 2034-இல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டும் என்று முழங்கிவருகின்றன. மோடியின் இந்த புதிய இந்தியா, ஏழைகளுக்கும் அடிப்படை உழைக்கும் மக்களுக்கும் சுடுகாடாகவே அமையும்.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரம் என்பது அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் வகையிலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாசிசமாகும். இது மதச் சிறுபான்மை மக்கள், தலித்துகளுக்கு மட்டுமல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான பாசிசமாகும்.

உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி, அவர்களில் பெரும்பகுதியினரை அழித்து உருவாக்கும் புதிய இந்தியாதான், இந்துராஷ்டிர இந்தியாவாகும். ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான போராட்டம் என்பது அதன் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்.


தங்கம்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க