வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!

மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

ங்களது காடுகள், வாழ்வாதாரம் பறிக்கப்படும் நிலைமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மணிப்பூர் குக்கி பழங்குடிகள். அம்மக்கள் மீது காவி பாசிசக் கும்பல் ஆசியுடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகிறார்கள். மோடி அரசு இது குறித்து விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வந்த அதே நேரத்தில்தான், மணிப்பூர் பழங்குடிகளின் அச்சத்தை உண்மையாக்கும் வகையில், காடுகளை அழித்து பழங்குடிகளை விரட்டும் “வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா – 2023” என்ற நாசகர சட்டத் திருத்தத்தை ஜூலை 26 அன்று மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. வனம், பழங்குடிகள் மற்றும் கனிம வளங்கள் தொடர்பாக கடந்த ஓராண்டில் மோடி அரசு செய்திருக்கும் மூன்றாவது சட்டத் திருத்தம் இது.

வழக்கம் போல குறுக்கு வழி!

கடந்த மார்ச் மாதம் வனப் பாதுகாப்பு சட்டம் 1980-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023-ஐ மக்களவையில் தாக்கல் செய்தது, மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மசோதாவை நிறைவேற்ற முடியாமல், பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை, அந்தந்தத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதுதான், சட்டப்பூர்வமான வழிமுறை. அதன்படி, இந்த மசோதா அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்; அந்தக் குழுதான் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு மசோதா மீதான பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

இந்த நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜெய்ராம் ரமேஷ் தலைவராக இருப்பதால், மசோதாவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவானது பா.ஜ.க.வைச் சார்ந்த ராஜேந்திர அகர்வால் தலைமையில் பா.ஜ.க எம்.பிக்களை பெரும்பான்மை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழுவோ, பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் மசோதா மீது தெரிவித்த கருத்துகளையும் எதிர்ப்புகளையும் முற்றிலும் நிராகரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பரிந்துரை செய்தது.

ஜூலை 26 அன்று, இம்மசோதா மக்களவையில் பெயரளவிலான சொற்ப நேர விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தடாலடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நடப்பிலிருக்கும் சட்ட முறைகளை மீறி இவ்வளவு அயோக்கியத்தனமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? இச்சட்டத்திருத்தத்தில் மோடி அரசு இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

வனப் பாதுகாப்பல்ல, வன அழிப்பு!

2030 ஆம் ஆண்டிற்குள் தற்போது இருப்பதை விட கூடுதலாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் அளவுக்கு கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் இலக்கை நிறைவேற்றவும், நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்காக காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி திருத்தங்களை மேற்கொள்வதாக இத்திருத்தத்தின் முன்னுரையில் கூறுகிறது மோடி அரசு.

அதாவது கேழ்வரகில் நெய் வடிகிறதாம், நம்புபவர்கள் வழித்துக் கொள்ளலாமாம்!

மோடி அரசின் இந்தக் கூற்று எந்த அளவுக்கு மோசடியானது என்பதை, வனப் பாதுகாப்பு சட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்களே அம்பலப்படுத்துகின்றன. வனத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள மோடி அரசு, வன அழிப்பையே நோக்கமாகக் கொண்டிருப்பதை சில குறிப்பிட்ட திருத்தங்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் அறிய முடியும்.


படிக்க: காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!


1980 அக்டோபர் 25 அல்லது அதற்குப் பிறகு வனம் – காடு என்று அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். இதன் மூலம் இன்னும் வனம் – காடு என அறிவிக்கப்பட வேண்டிய ஏராளமான நிலப்பகுதிகள் அனைத்தும் பிற பயன்பாடுகளுக்குக் கையகப்படுத்திக் கொள்ள முடியும். அங்கு வசிக்கும் மக்களை பழங்குடியினர் இல்லை என்று பட்டியலில் இருந்தும் நீக்கவும் முடியும்.

1996 டிசம்பர் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக ஒரு நிலப்பகுதி (வனம்-காடு) வனம் சாராத நோக்கத்துடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், அது அப்படியே தொடரும். இதன் மூலம், ஏற்கெனவே காடுகளைக் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் தமது கொள்ளையைத் தொடர முடியும். அவை மீண்டும் காடு – வனம் என்ற வரம்புக்குள் வராமலேயே போய்விடும்.

1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் (வனத்திற்குள்) உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள தோட்டங்கள் மட்டுமே இச்சட்டத்தின் விதிகளின்படி உள்ளடக்கப்படும்; மற்ற அனைத்து தோட்டங்களும் இனி காடுகளாக இருக்காது; அவற்றை வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருப்பிவிடப்படலாம்; அவை காடுகள் அல்லாத நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிடப்படலாம் அல்லது நிலத்தின் மீது உரிமையுள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் ஈடுசெய்யப்பட்ட காடு வளர்ப்பிற்காக (Compensatory afforestation) வழங்கப்படலாம். இதன் மூலம் வேறொரு இடத்தில் மரம் வளர்ப்பதாகக் கணக்கு காட்டி வனத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

அதாவது, இன்னும் பல இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகளை, காடுகளை வனம் என்ற வரையறைக்குள் கொண்டு வராத நிலையில், அவை ஏற்கெனவே இருக்கும் நிலையில் – அதாவது வனம் அல்லாத பகுதி என்ற வகையிலேயே – பயன்படுத்திக் கொள்ள சட்டப்பூர்வ அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு.

மேலும், “தேசிய முக்கியத்துவம்”, “பாதுகாப்பு” என்ற பெயரில் எல்லைப் பகுதிகளில் 100 கி.மீ தூரத்துக்குள் உள்ள வனப் பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் இமயத்தின் அடிவாரம் மற்றும் வடகிழக்கில் ஏராளமான வனப் பகுதிகளை இராணுவப் பயன்பாடு என்ற பெயரில் கைப்பற்றி, கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடும் சூழலை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக வடகிழக்கில், உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏராளமான வனப்பகுதிகள் இதில் அடங்கும். இத்தகைய கேடான நோக்கத்தை எதிர்த்துத்தான் மணிப்பூர் குக்கி பழங்குடிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத் திருத்தம் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்து இமாச்சல் உள்ளிட்டு பல்வேறு எல்லைப்பகுதி மாநில அரசுகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் விரும்பும் சாகர்மாலா, பாரத்மாலா பரியோஜனா போன்ற கட்டுமானத் திட்டங்களையும், நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்க அகழ்வு போன்ற பேரழிவுத் திட்டங்களையும் “தேச முக்கியத்துவம்” வாய்ந்த திட்டங்கள் எனக் கூறி அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


படிக்க: அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !


இத்தகைய மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

வன உரிமைச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, கடந்த மூன்றாண்டுகளில் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்திலுள்ள பழங்குடி கிராமங்கள் மீது, நான்கு முறை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி, இத்தகைய சட்டவிரோதத் தாக்குதலை சட்டப்பூர்வமாக நடத்த முடியும். அதாவது, சட்டத் திருத்தத்திற்கு முன் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்ட மோடி அரசு, தற்போது தனது பாசிச நடவடிக்கைகளை சட்டத்தின் பெயராலேயே முன்னெடுக்க முடியும்.

சட்டத்திருத்தங்கள்: கார்ப்பரேட் சேவகத்தின் தொடர்கதை!

இந்தியாவின் காடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட கனிமங்களையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றையும் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு துணை நிற்பதும், பழங்குடி மக்களை விரட்டுவதும் 2004 – 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நடந்தவைதான். அவற்றை இன்னும் தீவிரமாக்கும் நோக்கிலேயே மோடியை பிரதமராகக் கொண்டு வந்தனர் கார்ப்பரேட் முதலாளிகள். அவரது தீவிரக் கார்ப்பரேட் சேவையின் ஓர் அங்கமே இந்தச் சட்டத் திருத்தம்.

2014-இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து தோல்வியடைந்தது மோடி அரசு. ஆனாலும், விடாப்பிடியாக அதை இரண்டு முறை அவசரச் சட்டமாக நடைமுறைப்படுத்தியது. அதற்கு அனுமதியளித்தவர் காங்கிரசால் நியமிக்கப்பட்ட அன்றைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி.

அதன் பிறகு, காடுகளைக் களவாடிக் கொள்வதற்கும், பழங்குடிகளை விரட்டவும் மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்கேற்ப தொடர்ச்சியாக சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வன விலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா 2022, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறது.

இவையனைத்துக்கும் பின்னால் பெரும் கனிம – சுரங்கக் கார்ப்பரேட்டுகளின் நலன்களே ஒளிந்திருக்கின்றன என்பதை அண்மை நிகழ்வுகள் பலவும் உறுதிசெய்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பும், அதன் பிறகு, இந்தியாவின் தேவையில் 80 சதவிகிதத்தை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு லித்தியம் இருப்பை ராஜஸ்தானில் கண்டறிந்துள்ளதாகவும் மோடி அரசு அறிவித்தது.

இது மட்டுமின்றி, மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுரங்க அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட “இந்தியாவுக்கான அரியவகைத் தனிமங்கள்” குறித்த நாட்டின் முதல் அறிக்கையை கடந்த ஜூன் 28 அன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இந்தியாவில் 30 அரியவகைத் தனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில ஆண்டுகளாக உலகின் எந்தெந்த நாடுகளில் அரியவகைத் தனிமங்கள் புதைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். எதிர்காலத்தில் இத்தனிமங்களின் அவசியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் நன்கு உணர்ந்து இருப்பதே அதற்குக் காரணமாகும். பிப்ரவரி மாதத்தில் வெளியான அமெரிக்க அரசாங்க அறிக்கை ஒன்று “உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நாடிச் செல்லும் போது, அடுத்த பல பத்தாண்டுகளில் மின்சார வாகன மின்கலன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் கிராஃபைட் தனிமங்களுக்கான தேவை, தற்போது தேவையான அளவை விட 4,000 சதவிகிதம் அதிகரிக்கும்” எனக் கூறுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கு மோடி சென்றபோது, அந்நாட்டின் தலைமையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற 12 நாடுகளைக் கொண்ட கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையில் (Minerals Security Partnership) இந்தியாவையும் இணைத்துள்ளார். அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவே இக்கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தரவுகளின் படி, அரியவகைத் தனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் 60 சதவிகிதத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது சீனா. அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன – அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டாபோட்டியின் வெளிப்பாடே, கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை. இக்கூட்டாண்மையில் இந்தியாவை இணைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மோடி.

சுரங்கத்துறையிலும் அதானிமயம்!

இந்தியாவில் லித்தியம் கண்டறியப்பட்ட பிறகு, மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்தியா வந்ததும், மோடி அமெரிக்கா சென்றபோது மஸ்க்கை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்ப முடியாத உற்சாகத்துடன் இருப்பதாகவும்” “டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும்” என்றும் மஸ்க் கூறியிருப்பதன் பின்னணியில் லித்தியம்தான் இருக்கிறது.

அரியவகைத் தனிமங்களைச் சூறையாட அமெரிக்க கார்ப்பரேட் முதலாளியான எலான் மஸ்க்கிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதோடு மட்டும் மோடியின் சேவை முடிந்து விடவில்லை. அவரது நெருங்கிய நண்பரான அதானிக்கும் இதில் பங்கு வைக்க முயன்று வருகிறார்.

இந்தியாவில் சூரிய மின் தகடுகள் மூலம் ஏறக்குறைய ஆறு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரே மிகப்பெரிய நிறுவனம் அதானி குழுமம்தான். சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்வதற்கு ஆர்சனிக், காலியம், ஜெர்மானியம், இண்டியம், டெல்லூரியம் ஆகிய அரியவகைத் தனிமங்கள் இன்றியமையாதவை ஆகும்.

ஏற்கெனவே, இந்தியாவில் அதிகப்படியான நிலக்கரிச் சுரங்கங்களைக் கையகப்படுத்தியிருப்பது அதானி குழுமம்தான். மோடி அரசு தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் உள்ள நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாகவும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருவதும் அதானி நிறுவனத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரியவகைத் தனிமங்களை வெட்டியெடுக்கும் ஒப்பந்தமும் அதானி நிறுவனத்திற்கு வழங்கவே மோடி அரசு விரும்பும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்மையில், லித்தியம் உள்ளிட்ட ஆறு அரியவகைத் தனிமங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ல் திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை அவசரகதியில் ஒப்புதல் வழங்கியுள்ளதில் அதானியின் நலன் இல்லை என மறுக்க முடியாது. எனவே எலான் மஸ்க்கும், அதானியும் கூட்டுசேர்ந்து அரியவகைத் தனிமங்களைச் சூறையாடும் நிலை உருவாகலாம்.

2070 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு”’ என்ற இலக்கை அடைய இந்தியா உறுதி கொண்டிருப்பதால், வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக மசோதாவின் முன்னுரையில் தெரிவித்துள்ளது மோடி அரசு. லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களைச் சுரண்டியே பசுமை எரிசக்தியை உருவாக்க முடியும் என்றும், அத்தகைய வளர்ச்சிக்காக காடுகளை அழிப்பதில் தவறில்லை என்றும் கூட நாளைக்கு மோடி விளக்கமளிக்கலாம்.

மோடி அரசு மக்களுக்கு விரோதமானது; கார்ப்பரேட்டுகளுக்கே சேவை செய்கிறது; அதற்காக மக்கள் மீது பாசிச அடக்குமுறையை ஏவிவிடுகிறது என்று சொல்லும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு சட்டத் திருத்தங்களுக்கு மாற்றாக எதை முன்வைக்கப் போகிறார்கள்?  இதுவரை நடந்துள்ள சட்டத் திருத்தங்களை நீக்குவது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? மோடி சொல்லும் வளர்ச்சி கார்ப்பரேட் மோசடி என்றால், எதிர்க்கட்சிகள் எத்தகைய வளர்ச்சிக்கான வாக்குறுதியைக் கொடுக்கப் போகிறார்கள்? 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாசிஸ்ட் மோடி வெல்லக்கூடாது என்பவர்கள் மீண்டும் 2014 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சேவைக்குத் திரும்பிச் செல்வார்களா அல்லது மக்களுக்கான சேவையை முன்னெடுப்பார்களா? நிச்சயம் மக்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


அமீர்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க