இலஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி!

இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஏலச்சீட்டு மோசடி வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ₹17 இலட்சம் இலஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி

0

மலாக்கத்துறை அதிகாரி ஒருவர் ₹15 இலட்சம் இலஞ்சம் வாங்கியதற்காக இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையால் (Rajasthan Anti-Corruption Bureau) நேற்று (நவம்பர் ‌2) கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவல் கிஷோர் மீனா (Naval Kishore Meena) மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கூட்டாளி பாபுலால் மீனா இராஜஸ்தானில் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவ்விருவரும் இணைந்து இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஏலச்சீட்டு (சிட்ஃபண்ட்) மோசடி வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ₹17 இலட்சம் இலஞ்சம் கேட்டுள்ளனர். கேட்ட இலஞ்சத்தை கொடுக்கவில்லை என்றால் அவரது சொத்துகளை வழக்கில் இணைத்து முடக்கி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நபர் இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.


படிக்க: ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!


₹17 இலட்சம் இலஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ₹15 லட்சத்தை மட்டும் வழங்குவதாக பேரம் பேசப்பட்டது. அந்த ₹ 15 இலட்சத்தினை நவல் கிஷோர் மீனா, பாபுலால் மீனா பெற்றபோது இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்விருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாசிச மோடி அரசால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் (PMLA) மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியது. சிபிஐ (CBI), வருமான வரித்துறை ஆகியவற்றைத் தனது ஏவல் நாயாகப் பயன்படுத்தி வந்த மோடி அரசு, மேலே குறிப்பிட்ட சட்டத் திருத்தத்திற்குப் பின் அமலாக்கத்துறையைத் தனது பிரதான ஏவல் நாயாகப் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் மீது அதை ஏவி அவர்களை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.

இராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 25-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி மட்டும் 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில்,‌ இலஞ்சம் வாங்கியதற்காக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது அத்துறையின் யோக்கியதையை மக்கள் முன்பு அம்பலப்படுத்தியுள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க