ஆ) செய்யாறு சிப்காட் அலகு – 3 வரவுள்ள கிராம மக்களின் நேர்காணல்கள்:-
1. திரு. ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், குறும்பூர்
நான் திமுகவைச்சேர்ந்தவன். நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றோம். நிலம் எடுக்கப்பட உள்ள பத்து கிராமங்களில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். நெல்,மணிலா, கரும்பு என விவசாயம் நடைபெற்று வருகின்றது. சிப்காட் அலகு 3 அமைய உள்ளதாக கூறப்பட்டுள்ள 3,174 ஏக்கரில் சுமார் 2,500 ஏக்கர் முப்போகம் விளைகின்ற பூமியாகும். இங்கு இருப்பவர்கள் அனைவருமே சிறு – குறு விவசாயிகளாவர். இங்கே இருக்கக்கூடிய மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். ஆகவே ஒருபோதும் மக்கள் விவசாய நிலத்தை கொடுக்க மாட்டார்கள். அரசு இதுவரை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
2. பெயர் கூறவிரும்பாத விவசாயி
எங்களது நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித அறிக்கையும் வரவில்லை, பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. இவ்வூரைச்சேர்ந்தவர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பினைப் பார்த்து எங்களிடம் கூறினார். அதன் பின்னர் நாங்கள் பதிவாளர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது, எங்களுடைய நிலத்தை இனி யாருக்கும் விற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். 22.07.2023 அன்று இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் கையெழுத்துப் பெற்று செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி அவர்களிடம் தெரிவித்தோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் வேறு வழி இன்றி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டோம். எங்களுக்கு வேறு என்ன வழி உள்ளது?
3. பெயர் கூறவிரும்பாத மாணவர்
என்னுடைய அப்பாவைத்தேடி இரவு 11.45 மணிக்கு சுமார் 20 போலீசுக்காரர்கள் வந்தனர். என்னுடைய அப்பா வீட்டில் இல்லை என்று கூறிய பின்னரும் வீட்டில் நுழைந்து சோதனை செய்தனர். என் அப்பாவைப்போல சுமார் 25 பேர் தலைமறைவாக 18 நாட்களாக உள்ளனர் (20.11.2023 தேதி நிலவரப்படி). அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதற்கு நிலம் கொடுக்கமாட்டோம் என்று கூறிய விவசாயிகளை சமூக விரோதிகள் போல போலீசு அணுகியுள்ளது.
4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள குறும்பூரைச் சேர்ந்த திரு. பாக்கியராஜ் அவர்களின் அம்மா
நவம்பர் 4ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சுமார் 20 போலீசுக்காரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். என்ன என்று நான் விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே என்னுடைய வீட்டின் கதவை உடைத்து என்னுடைய மகனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். என் மகனை கைது செய்யும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் என்னுடைய மருமகளின் புடவை கிழிந்துவிட்டது. இச்சம்பவத்தை 2 செல்போன்களில் படம் பிடித்தோம். அந்த இரண்டு செல்போன்களையும் போலீசு பறித்துக்கொண்டு சென்று விட்டது.
5. பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி
சிப்காட் அலகு – 3 அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு வேனில் செல்ல திட்டமிட்டோம். அதற்கு கூட எங்களைச் செல்ல போலீசு அனுமதிக்கவில்லை. பிறகு எப்படி எங்களால் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? குண்டர் தடுப்புச்சட்டம் போட்டால்தான் மக்கள் பயந்து நிலத்தை கொடுத்துவிடுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. தமிழ்நாடு முழுவதும் மு.கஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என்றால் இங்கு மட்டும் அமைச்சர் வேலு ஆட்சி செய்கிறார்.
6. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட திரு. தேவன் அவர்களின் மனைவி திருமதி கலைச்செல்வி
நவம்பர் மூன்றாம் தேதி இரவு 11.00 மணிக்கு 5 போலீசுக்காரர்கள் வந்து எனது வீட்டை சோதனையிட்டு சென்றனர். பிறகு என்னுடைய கணவர் மீது குணடர் தடுப்புச்சட்டம் போட்டப் பிறகு போலீசுக்காரர்கள், வி.ஏ.ஒ ஆகியோர் காரில் என்னுடைய வீட்டிற்கு வந்து ஆதார் கார்டு கொண்டு கொண்டு வா என்று கூறினர். எனக்கு சந்தேகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய மாமியாரிடம் “நீங்கள் வந்தால் தான் உங்கள் மகனை வெளியே விடுவோம்” என்று கூறியதால் அவர் என்னுடைய மாமனாரை அனுப்பி வைத்தார். என்னுடைய மாமனாரை காரில் அழைத்துச்செல்லும் போது நாங்கள் சொல்கிறபடி பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லவில்லை என்றால் உங்கள் மகனை வெளியே கொண்டு வர பல லட்சம் செலவாகும் என்று கூறி மிரட்டியுள்ளனர். அதனால்தான் என்னுடைய மாமனார் அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்போராட்டம் அருள் ஆறுமுகம் சொல்லி தூண்டிவிடப்பட்டது என்றார். என்னுடைய மாமனார் இவ்விசயத்தை என்னிடம் தெரிவித்த பிறகு உண்மை நிலையை அவரையே பேச வைத்து நான் முகநூலில் பதிவு செய்தேன். கடந்த 20ம் தேதிகூட யாரென்றே தெரியாத சிலர் என்னுடைய வீட்டை படம் பிடித்தனர். நான் ஏதுவென்று விசாரிப்பதற்குள் சென்றுவிட்டனர். இப்படி தொடர்ந்து அச்சுறுத்தலிலேயே உள்ளோம். எங்களுக்கு ஒரு செண்ட் நிலம் கூட இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். நிலம் இல்லாதவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடக்கூடாதா?
7. திரு.கிருணன், தேத்துறை கிராமம்
நீங்க போலீசா பயமா இருக்கு, எங்க ஊர் ஆளுங்க நேற்றுதான் விடுதலை ஆகியிருக்காங்க. எங்களுடைய நிலத்தை அரசு அடாவடியாக பறிக்கப்பார்க்கிறது. கடந்த 4ம் தேதி முதல் போலீசுக்காரர்கள் கிராமங்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு வெள்ளைக்காரன் ஆட்சியே மேல் என்பது போல் உள்ளது.
8. திரு.குமார், தேத்துறை கிராமம்
நான் சிப்காட் வரவேண்டும் என்று சொல்கிறேன். நான் லோட்டஸ் கம்பெனியில் வேலை செய்கிறேன். எங்களுடைய குடும்பமே விவசாயம் செய்கிறது.விவசாயம் கட்டுப்படியாகவில்லை. சந்தைவிலைக்கு நிலத்திற்கு இழப்பீடு கொடுத்தால் மக்கள் போராட மாட்டார்கள். மக்கள் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது, அச்சுறுத்தக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணவேண்டும்.
9. திரு.தினேஷ், மேல்மா
கஷ்டப்பட்டு சேர்த்த நிலத்தை காப்பாற்றக்கூடாதா? பொய்வழக்குகளைப்போட்டு அரசு எங்களின் நிலங்களைப் பறிக்கப்பார்க்கிறது. போலீசை வைத்து கிராமங்களில் பயத்தை உருவாக்கிவிட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு மரியாதை கொடுத்தார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு பயம் இன்னமும் போகவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.
(தொடரும்..)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube