பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து உண்மை அறியும் குழுவானது கண்டறிந்த முடிவுகள்
- ஜூலை 2 – 2023 முதல் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டங்கள் ஜனநாயக முறையிலானவையே. மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முறையான பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடைபெறவில்லை. முறையான பேச்சுவார்த்தை எதையும் நடைபெறச்செய்யாமல் போராடும் விவசாயிகளை சமூக விரோதிகள் போல தமிழ்நாடு அரசு சித்தரிக்கிறது.
- ”1,200 ஏக்கர் அளவிற்கு நில எடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர்” என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது. நில எடுப்பிற்கான அறிவிப்பு அளித்த நிலப்பரப்பில் நன்செய் நிலம் இல்லை என்பது பொய்யாகும். அக்கிராமங்களுக்கு செல்லும் எவர் ஒருவராலும் இதனை அறியமுடியும். 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபனை செய்தனர் என்பதும் பொய். சிப்காட் பிரிவு முதல் அமைச்சர் வரை பலரிடமும் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். 22.07.2023 அன்று செய்யாறு சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்த போது சுமார் 1000 பேர் பேரணியாக சென்றனர் என்பது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு மக்களை செல்லவிடாமல் மறித்ததன் மூலம் சிப்காட்டிற்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களின் எண்ணிக்கையை சதித்தனமாக குறைத்துக்காட்டியுள்ளது.
- ”விவசாயிகள், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது, பணி செய்த காவலர்களை தாக்கியது, பொது உடமைகளை சேதப்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்ததாக” அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகளிடம் சிப்காட் திட்டம் தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருந்தது, மக்களை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் செய்தது, அமைதியாகப்போராடிய மக்களின் போராட்டப்பந்தலை பிய்த்து எறிந்தது, ஜனநாயக வழியில் போராடிய மக்களை வீடு புகுந்து கைது செய்வது, சிலர் கதவுகளை உடைத்தது, போராட்ட முன்னணியாளர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போட்டது ஆகிய குற்றங்களைச்செய்தது திமுக அரசுதானே தவிர விவசாயிகள் அல்ல. ஆகவே மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யாக புனையப்பட்டவையே.
- குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை இன்று (17-11-2023) நேரில் சந்தித்து, மேற்படி நபர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யார் சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர் என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் பொய்யே. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி மாபியாக்கள் போல செயல்பட்டது அமைச்சர் எ.வ.வேலுவும் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதியுமே ஆகும்.
- செய்யாறு சிப்காட் அலகு -3க்கான திட்டத்தை நேர்மையான முறையில் நிறைவேற்றாமல் ரகசியமாக, சதித்தனமான முறையில் வழிப்பறிக் கொள்ளையன் போல ஏமாற்றியும் மிரட்டியும் விவசாயிகளின் நிலங்களை பறிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது .
- இந்திய நாட்டுக்குடிமகன் இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கும் செல்வதற்கு உள்ள உரிமை என்பது, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதை மறுக்கும் விதத்தில் அமைச்சர் எ.வ வேலுவின் பேச்சும் மாவட்ட போலீசு – ஆட்சியரின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.
- பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்நாட்டு கார்ப்பரேட் – மாபியா கும்பல்களும் நாட்டில் அனைத்து இயற்கை வளங்களையும் தங்கு தடையின்றி சூறையாடிக்கொண்டு இருக்கும் போது, விவசாய நிலங்களை சிப்காட்டுக்காக கொடுக்காமாட்டோம் என்ற மக்களை கைது – குண்டர் தடுப்புச்சட்டம் – கண்காணிப்பு – மிரட்டல் என தொடர்ந்து அச்சுறுத்தும் வேலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – மாவட்ட ஆட்சியர் ஆகியேர் ஈடுபட்டுள்ளனர்.
- எட்டுவழிச்சாலை எதிர்ப்புப்போராட்டத்தினை தனது வாக்கு வங்கிக்காக பயன் படுத்திக்கொண்ட திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த உடன் ஜனநாயகப்பூர்வமாக போராட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்காமல், அவர்களின் போராட்டப்பந்தலை பிடுங்கியெறிந்தும் ஆயிரத்திற்குமேற்பட்ட போலீசை கிராமங்களில் ஏவியும் கைதும் செய்துள்ளது. அமைதி வழிப்போராட்டம் தொடங்கிய 2023, ஜூலை நவம்பர் வரையில் மட்டும் மக்கள் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது என்பது போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே.
- மேல்மா சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஐந்து பேர், தானாக முன்வந்து சிப்காட்டிற்கு நிலம் அளிக்க முயன்றதாகவும் அதை போராட்டத்தின் முன்னணியாளர்கள் தடுத்ததாகவும் 316/2023,317/2023,318/2023,319/2023,320/2023 ஆகிய பதிவெண்களைக்கொண்ட ஐந்து முதல் தகவல் அறிக்கைகள்8.2023 அன்று ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் அளித்த 5 பேரில் 4 பேரை சந்திக்க முயன்றதில் இந்த 4 பேருக்கும் அவர்களின் பேரில் நிலம் இல்லை என்பதும் முதல் தகவல் அறிக்கையில் தங்களுடைய நிலம் என்று அவர்கள் கூறியது அனைத்துமே பொய் என்பதை உண்மை அறியும் குழு கண்டறிந்துள்ளது. இந்த 4 பேரில்மூன்று பேர் திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஜூலை 2 முதல் போராடும் விவசாயிகளிடம் எவ்விதப்பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திட்டமிட்டே, சதித்தனமாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து, போராட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே மாவட்ட போலீசு செயல்பட்டுள்ளது. தற்போது வரை சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசின் சுற்றுக்கு அனுப்பில் மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளது.
- சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது என்பது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும் இப்படிப்பட்ட கொடூரத்தை செய்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி கடிதங்களைப்பெற்றும் திரு.தேவன் அவர்களின் தந்தையை மிரட்டி ஊடகங்களிடம் பேசவைத்தும் குண்டர் தடுப்பு சட்டம் இரத்து என்ற நாடகத்தை ஆளும் திமுக அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த பாதகச்செயலில் அமைச்சர் எ.வவேலும், செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
- 2013ம் ஆண்டு நில கையப்படுத்துதல் சட்டத்தில் கீழ் நிலத்தை கையகப்படுத்தாமல் 1956ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த திமுக அரசு முயல்கிறது.
- போராடும் மக்களை பிளவு படுத்துவதற்காகவே திரு. அருள் அவர்கள் மீதான குண்டர் சட்டம் இதுவரை இரத்து செய்யப்படவில்லை.
- விவசாயிகள் கைது செய்யப்பட்ட11.2023 முதல் இப்போதுவரை போலீசின் கண்காணிப்பிலேயே மேற்கண்ட கிராம மக்கள் இருந்துவருகின்றனர். சீருடை அணியாத போலீசு மக்களிடம் கருத்துகேட்பது என்ற பெயரின் சிப்காட்டிற்கு எதிராக யார் கருத்து கூறுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது, மாற்றுக்கருத்துள்ளவர்கள் மற்றும் போராட்ட குணம் உள்ளவர்களை கண்காணிப்பது போன்ற செயல்களில் போலீசு ஈடுபட்டு வருகின்றது. இப்படிப்பட்ட போலீசின் இச்செயல்களால் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களிடம் பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உண்மை அறியும் குழு உறுப்பினர்களிடம் பேசுவதற்குகூட மக்கள் அச்சப்பட்டனர். மேலும் உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் மக்களிடம் கருத்துக்களைப் பெறும் போது சீருடை அணியாத போலீசார் அங்கே வந்து அமர்ந்து கொள்வது, உண்மை அறியும் குழு உறுப்பினர்களை படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதன் மூலம் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களை அச்சுறுத்தும் வேலைகளில் திருவண்ணாமலை மாவட்ட போலீசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
- நவம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற சிப்காட் வேண்டும் என்ற போராட்டங்களானவை கார்ப்பரேட் நிறுவனங்கள், மாவட்டப்போலீசு, திமுகவினர் ஆகியோரால் திட்டமிட்டு இக்கிராமங்களில் நடத்தப்பட்டதாகும். இப்போராட்டங்களுக்கு வந்தவர்களுக்கு ரூ 200, பிரியாணி, மதுபானம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு போட்டியாக ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டங்கள் நடத்தில் தூத்துக்குடியை வேதாந்தா, போலீசு ஆகியவை பதட்டத்தில் வைத்திருப்பதைப்போலவே மேல்மா சுற்றுவட்டாரப் பகுதியையும் மாற்றுவதற்கு திமுக, கார்ப்பரேட், போலிசு ஆகியவை முயல்கின்றன. இப்படி மக்களை பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் போக்குகளும் தொடருமானால் பெரும் வன்முறைகள் நிகழ்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- திமுக அரசு, மாவட்ட போலீசு , கார்ப்பரேட் கம்பெனிகள் இணைந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை மேல்மா பகுதியில் குவித்து அதன்மூலம் பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. ஆகவே மேல்மா சுற்று வட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கும் இப்பகுதியில் கலவரச் சூழலை உருவாக்கியதற்கும் திமுக அரசே முழு காரணமாகும். வேண்டும் சிப்காட் என்ற கோரிக்கையோடு நடத்தப்படும் போராட்டப் பாணியானது ஸ்டெர்லைட் போராட்டத்தை மேற்கொள்ளப்பட்ட அதே வழிமுறையாகும். 100 நாள் வேலைக்குச் சென்றவர்களை அழைத்து வருவது, வேலை என்று சொல்லி பொய் சொல்லி மக்களை அழைத்துவருவது ஆகிய கிரிமினல் வேலைகளில் திமுக அரசு, மாவட்டப்போலீசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடு பட்டுள்ளன.
- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. அப்பகுதியில் சிப்காட் அமைக்க திட்டமிடாமல் நீர்வளமிக்க மூன்று போகம் விளைவிக்கும் இந்த நிலங்களை செய்யாறு சிப்காட் அலகு 3க்கு கையகப்படுத்த முயல்வது கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே. செய்யாறு சிப்காட் அலகு 1 மற்றும் 2 ஆகியவற்றுக்காக நிலம் கையகப்படுத்தும் போது மக்கள் போராடவில்லை என்றும் பலர் ஒரு செண்ட் 350 ரூபாய்க்கு முன்வந்து கொடுத்துள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்காகவே நீர்வளமிக்க, நிலவளமிக்க இப்பகுதியை தாரைவார்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
- செய்யாறு சிப்காட் அலகு-3 திட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளிடம் முறையான பேச்சுவார்த்தை எதையும் நடத்தாமல் பொய்வழக்குகள் – கைது – குண்டர் தடுப்புச்சட்டம் – சீருடை அணியாத போலீசின் மூலம் அச்சுறுத்துவது – சிப்காட் வேண்டும் என்ற போராட்டங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஆகிய அராஜக செயல்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், சரக டிஐஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
- செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடமேற்பட்டுள்ள பதட்டத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், சரக டிஐஜி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரே காரணமாகும்.
படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2
வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பித்தலாட்டங்கள் குறித்து
வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் இந்திய நாட்டில் 1990 களுக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும் எவ்வித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்ளவே வழிவகுத்தன. வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலி குறைவு, பல்வேறு சலுகைகள் போன்ற காரணங்களாலேயே இந்தியாவிற்கு வருகின்றன. இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களையும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. தொழிலாளிகளுக்கு சங்கம் சேரும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு 12 மணி நேரவேலை , குறைந்த கூலி என்று தொழிலாளிகளை கொத்தடிமைகளாக மாற்றி வைத்திருக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.
கட்டமைப்பு வசதி, வரிச்சலுகை, இலவச தண்ணீர் – மின்சாரம், சாலைவசதி போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடிக்கணக்கில் லாபமீட்டுகின்றன. ரூ.2500 கோடி வரி ஏய்ப்பு செய்து திடீரென்று நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்ற நோக்கியா, 20 ஆண்டுகளில் மூடு விழா நடத்தப்பட்ட போர்டு கார் தொழிற்சாலை போன்றவை தான் போட்ட மூலதனத்தைவிட பல நூறு மடங்கு லாபத்தை கொள்ளையடித்து சென்றன. அத்தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையோ பாதளத்திற்குச் சென்றதுதான் மிச்சம்.
நோக்கியா, போர்டு போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான நீரை உறிஞ்சி எடுத்து நாசகர ஆலைக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை நாசம் செய்து விட்டே சென்றன. மேலும் இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டை மேற்கொள்ளவும் பல்வேறு சலுகைகளைப் பெறவுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குகின்றன. அதற்குத்தான் வெளிநாடுகளுக்குச்சென்று மாநில, ஒன்றிய அரசுகள் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றன.ஆக வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவையே.
செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்ட எல்லைக்கு உட்பட்ட மேல்மா சுற்றூவட்டார கிராமத்தில் உள்ளவை விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலங்களாகும். விவசாயத்தை அழித்து மேற்கொள்ளப்படும், வளர்ச்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே. விவசாயத்தை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மண்ணின் மீதும் மக்களின்மீதும் உண்மையான அக்கறை கொண்ட அரசு மட்டுமே அதைமேற்கொள்ளும்.
படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 3
பரிந்துரைகள்:-
- சிப்காட்டிற்கு நிலம் தர முடியது என்று போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். சமூக செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச்சட்டத்தையும் பிற வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
- போராடுகின்ற விவசாயிகள் மீது அவதூறு பரப்பியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட குடும்பத்தினரை அச்சுறுத்தி மன்னிப்பு கடிதங்களைப் பெற்றும் போராடும் விவசாயிகளிடம் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் எதிர் போராட்டங்களை செய்யத்தூண்டும் அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து செயல்பட்ட செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசைக்குவித்தது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியது, சீருடை அணியாத போலீசை கிராமங்களில் சுற்றுக்கு விட்டு மக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களுக்கு காரணமான டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- செய்யாறு சிப்காட் அலகு – 3 திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகளிடம் அரசு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.
- செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 128 நாட்கள் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிப்காட் பிரிவு அலுவலர், அமைச்சர் எ.வ.வேலு, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித முறையான பதிலும் கூறாமல் கருத்துக் கேட்பு கூட்டத்திற்குக்கூட அனுப்பவிடாமல் தடை செய்து போராட்டத்தை சீர் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டது அமைச்சர் எ.வ.வேலு, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி,மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டதை ஊடகங்கள் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எ.வ.வேலு தெரிவித்ததற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும் போராடும் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் எ.வ. வேலு மக்கள் போராட்டத்தை சீர்குலைப்பதில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கையை தி.மு. க மேற்கொள்ள வேண்டும்.
- மேல்மா சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கும் அப்பகுதி மக்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய அனைத்து நிகழ்வுகளுக்கும் குண்டர் தடுப்புச்சட்டம் – கைது – பொய் வழக்கு – போலீசைக் குவித்தல் – கண்காணிப்பு – எதிர்ப்புப் போராட்டங்கள் என அனைத்து மக்கள் விரோத நடவடிகைகளுக்கும் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக பொறுப்பு ஏற்பதுடன் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் இனி தமிழ்நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஜனநாயகப்பூர்வமாக மேற்கொள்வதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
- தனியார்மய – தாராளமய – உலகமயம் ஆகிய மறுகாலனியாக்கத் திட்டங்களின் விளைவாக மக்கள் நலன் புறம் தள்ளப்பட்டு கார்ப்பரேட் நலனையே முதன்மைப்படுத்தி செயல்படுவதில் திமுக அரசும் ஒன்றுதான். இயற்கை வளங்களை சூறையாடும் ஸ்டெர்லைட் முதல் செய்யாறு சிப்காட் வரையிலான கார்ப்பரேட் திட்டங்களுக்கு அரசு எப்போதுமே ஆதரவாகவே செயல்படுகிறது. பலமாதங்கள் தொடர்ந்து போராடிய பரந்தூர் மக்களின் கருத்துகளை உதாசீனப்படுத்தி விமான நிலையத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் அதை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க வேண்டும்.
- செய்யறு சிப்காட் அலகு – 3 திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுத்து பொய்வழக்குகளையும், குண்டர் தடுப்புச் சட்ட நடவடிகைகளையும் போலீசின் அச்சுறுத்துல்களையும் எதிர்கொண்டு உறுதியாகப் போராடும் மேல்மா சுற்றுவட்டார கிராம மக்களுக்கு உண்மை அறியும் குழுவானது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அம்மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் போராட முன்வரவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube