மோடி கும்பல் அடித்த ஸ்டண்டுகள்!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சென்றுகொண்டிருந்த வேளையில் இராமர் கோவிலை கையிலெடுத்தது காவி கும்பல். தேர்தலில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைத்தால் இராமர் கோவிலை இலவசமாக தரிசிக்கலாம் என  மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குறுதியளித்து ‘இந்து முனைவாக்க’ முயற்சியில் ஈடுபட்டது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 3

த்தியில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி கும்பல், தங்களது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாததால், ஒவ்வொரு தேர்தலின்போதும் மதவெறி, தேசவெறியை தூண்டும் வகையிலான பல்வேறு ஸ்டண்டுகள் அடித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு ஒரு சிறந்த சான்று, 2019¬-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாசிச கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல். இதைபோல, நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மோடி கும்பல் விதவிதமான ஸ்டண்டுகளை அடித்துள்ளது.

உலக கோப்பை: இந்தாண்டுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை இந்தியா நடத்தியதையடுத்து மோடி அரசு அதனை தனது பிரச்சாரத்திற்காக பயன்படுத்திகொள்ள பார்த்தது. G20, சந்திரயான்-3 ஏவுகணையை போல உலக கோப்பை கிர்க்கெட் போட்டியையும், சரிந்துவரும் தனது பிம்பத்தை தூக்கிநிறுத்துவதற்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் பயன்படுத்திக்கொள்ள எண்ணியது. அதற்காக, நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு ‛சிவசக்தி’ என பெயரிட்டது. சந்திரயான்-3 ஏவுகணையை அனுமன் தூக்கிக்கொண்டு நிலவிற்கு செல்வது போன்ற மீம்களை போட்டதுபோல, இந்து கடவுளான இராமன் உலக கோப்பையை மோடிக்கு தருவது போன்ற மீம்களையும் பரப்பி மதவெறியூட்டியது. ஆனால் பாசிச கும்பல், மோடி மைதானத்தில் மதவெறியர்களை வைத்து “ஜெய் ஸ்ரீ ராம்” என கூவ வைத்ததற்கு எதிராக #SorryPakistan என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆனது. சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமிய வீரரான ஷமியும், பார்ப்பன உயர்சாதியை சாராத விராத் கோலியும் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்ததோடுச் சேர்ந்து இந்தியா அணி உலக கோப்பையில் தோற்றது பாசிச கும்பலின் கனவுகளை சுக்குநூறாக்கியது. மேலும், இந்தியா முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தோல்விக்கு மோடி தான் காரணம் என திட்டியதையும் கலாய்த்ததையும் பாசிச கும்பலே எதிர்பார்த்திருக்கவில்லை.


படிக்க:ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!


சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை – அமித்ஷா:

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்ததையடுத்து இந்தியா முழுக்க அது பேசுபொருளானது. எதிர்கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை கையிலெடுத்தன. குறிப்பாக, இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த பிரச்சாரம் முக்கிய வினையாற்றியது. இதன் காரணமாக பாசிச கும்பல் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டது. தொடக்கத்தில் எதிர்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து மக்களை பிரிக்கின்றன என்று மோடி பேசியிருந்த நிலையில் இனி சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுபோக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதனைப் புரிந்துகொண்ட பா.ஜ.க-வின் ‘சானக்கியனான’ அமித்ஷா ஒரேயடியாக “நாங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் அல்ல, அதுகுறித்து கட்சியில் பேசி முடிவு செய்யப்படும்” என்றார்.

ராமர் கோவிலில் இலவச தரிசனம்: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சென்றுகொண்டிருந்த வேளையில் இராமர் கோவிலை கையிலெடுத்தது காவி கும்பல். தேர்தலில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைத்தால் இராமர் கோவிலை இலவசமாக தரிசிக்கலாம் என  மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குறுதியளித்து ‘இந்து முனைவாக்க’ முயற்சியில் ஈடுபட்டது.

போர் விமான பயணம்: நவம்பர் மாத இறுதியில் தெலங்கானா மாநில பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது, நவம்பர் 26 அன்று நரேந்திர மோடி ஆலிவ் பச்சை நிற சூட் அணிந்துகொண்டு தேஜாஸ் விமானத்தில் பறப்பது போன்ற புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகின. இதுகுறித்து பேசிய மோடி அவ்விமானத்தில் பறந்த அனுபவம் நம்பமுடியாததாக இருந்தது என்றார். ஒருபக்கம் சங்கிகள் அந்த புகைப்படங்களை பரப்பி கொண்டாடிக் கொண்டிருக்க, பலரும் எதற்காக இந்த விளம்பரம் என்று மோடியை விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, 25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம் போலியானது என்று சொன்னது இணையத்தில் பரவி மோடி விமானத்தில் அடிக்க நினைத்த ஸ்டண்ட் பாழாய்போனது.

திருப்பதி வேடம்: தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் மோடி அடித்த தேஜாஸ் விமான ஸ்டண்ட் நாசமாய் போனதையடுத்து, மோடி திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் நாடகத்தை அரங்கேற்றினார். மோடி தேஜாஸ் விமானம் ஓட்டியதாக புகைப்படங்கள் வெளியானதற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு, நெற்றியில் நாமத்துடனும் வேட்டி-சட்டையுடனும் மோடி திருப்பதி பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தும் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய மோடி, 140 கோடி இந்திய மக்களின் நல்ல உடல் ஆரோக்கியம், நலமான வாழ்வு, வளர்ச்சிக்காக தான் பிரார்த்தனை செய்ததாக கூறினார். ஆனால், தெலுங்கானா மாநில மக்களிடைய திருப்பதி கோவில் மீதான நெருக்கத்தை பயன்படுத்திகொள்ள எண்ணிய மோடியை இது வேடம் தான் என அம்மாநில மக்களே கேலி செய்தனர்.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க