நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மிசோரம் தவிர்த்து பிற நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தனது 18 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்துள்ளதோடு, ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கரில் காங்கிரசின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியோ, தெலுங்கானா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், இமாச்சல பிரதேசத்தை தவிர்த்து பிற ‘பசு-வளைய’ மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, “ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைவது உறுதி” என்று பேசிவந்த காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை மட்டுமே பாசிச எதிர்ப்புக்கான ஒற்றை ‘நம்பிக்கையாக’ பார்த்துவந்த பெரும்பாலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வின் ‘இந்து’ வாக்குவங்கிக்கு பின்னால் ஓடிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு மக்கள் கொடுத்துள்ள பரிசே இத்தோல்வி!
இந்த ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க-விற்கு எதிராக மாற்று திட்டத்தை முன்வைத்தோ, ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் உழைக்கும் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டுவந்த ஜி.எஸ்.டி, சி.ஏ.ஏ., வனப்பாதுகாப்பு சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்களைத் எதிர்த்தோ, மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை கையிலெடுத்தோ காங்கிரஸ் கட்சி இத்தேர்தலை அணுகவில்லை.
முழுக்க முழுக்க கவர்ச்சிவாத, அடையாள, இந்துத்துவ அரசியலையே காங்கிரஸ் முன்னெடுத்தது. குறிப்பாக, ‘பசு வளைய’ மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் பா.ஜ.க-வின் இந்து முனைவாக்க உத்தியையே கையிலெடுத்தது.
சான்றாக, சத்திஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பா.ஜ.க. மீதான அதிருப்தியை அறுவடை செய்துகொண்டுதான் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அம்மக்களின் கோரிக்கைகளை குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை தூரவீசிவிட்டு ராமனுக்கு “ராம் வான் கமான் பாதை” அமைப்பது, ராமன்-சீதைக்கு சிலை அமைப்பது, கோவில் கட்டுவது போன்ற ‘இந்துமுனைவாக்க’ நடவடிக்கைகளில் இறங்கியது காங்கிரஸ்.
ராஜஸ்தான் மாநிலத்திலும் அங்குள்ள முக்கியமான பிரச்சினைகளான விவசாயிகள் கோரிக்கைகளை காங்கிரஸ் வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பார்த்தது. சான்றாக, அம்மாநிலத்தில் பசு ஏற்றுமதிக்கு தடை இருப்பதனால், தெருக்களில் திரியும் பசுக்கள் பயிர்களை மேய்வதால் ஆண்டுதோறும் 30 முதல் 40 சதவிகித பயிர்கள் நாசமடைகின்றன. பசு ஏற்றுமதிக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்பது அம்மாநில விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கை. ஆனால், அது தனது ‘இந்துமுனைவாக்க’ நோக்கத்திற்கு கேடாக முடியும் என்பதால் காங்கிரஸ் அதை செய்யவில்லை.
இதுபோன்ற எந்த மக்கள் கோரிக்கைகள் குறித்தும் பேசாமல் பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கு ‘யூகம், உத்தி, தந்திரங்களை’ மட்டுமே நம்பி தேர்தலில் களமிறங்கியது காங்கிரஸ். அந்த யூகம், உத்தி, தந்திரங்கள் என்பதும் பாசிஸ்டுகளின் வழிமுறையாகதான் இருந்தது. மக்களின் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தது, கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிறுத்திகொண்டது போன்ற பாசிச வழிமுறையில் தான் பா.ஜ.க. எதிர்ப்பை மேற்கொண்டது, காங்கிரஸ்.
மொத்தத்தில், “பாசிச எதிர்ப்பு வாக்குகள் மட்டும் வேண்டும், ஆனால் பாசிச எதிர்ப்புக்கான திட்டமோ மாற்றோ முன்வைத்து செயல்படமாட்டோம்” என்பதே இக்கட்சிகளின் நடைமுறை. இத்தகைய கேடுகெட்ட சந்தர்ப்பவாதத்தை பின்பற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைதான் ‘பாசிச எதிர்ப்பாளர்களாக’ முன்னிறுத்துகின்றனர், பல பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்.
இதன் விளைவாக, மோடி பிரச்சாரத்திற்கு சென்றால் வாக்குகள் சரியும் என்ற அச்சத்திலிருந்த பாசிச கும்பல், தற்போது புது தெம்போடு 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
பலரும் சொல்வது போல் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்ப்போமேயானால், ஒருவேளை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோற்றாலும் எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்திக்கொண்டு, குறுகிய காலத்திலேயே பாசிச கும்பல் மீண்டும் ஆட்சியதிகாரத்தில் வந்து அமரும் என்பது தெளிவாகிறது. அதற்கான பாதையைதான் இந்த எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளுக்கான தூதுவர்களான (ambassador) ‘பாசிச எதிர்ப்பாளர்களும்’ செப்பனிட்டு கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
03.12.2023
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube