விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!

மக்கள் விரோத கார்ப்பரேட் நலத் திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்தும் தி.மு.க அரசு, போராடும் விவசாயிகளையும் மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.

சோறு போடும் நிலத்தினை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாயுமாம். இத்தகைய கொடூரம் நிகழ்ந்தது பா.ஜ.க. ஆளும் வட மாநிலத்தில் அல்ல. “தனது அரசு விவசாயிகளுக்கு என்றென்றும் உற்ற தோழனாக இருக்கும்” என்று வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் ஆளும் தமிழ்நாட்டில்.

சிப்காட் திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுத்தவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது என்பது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும்.  இந்த அடக்குமுறைக் குறித்து மக்கள் அதிகாரம் சார்பில் உண்மை அறியும்குழு அமைக்கப்பட்டது. அக்குழு விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பதியப்பட்டது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி மன்னிப்பு கடித்ங்கள் பெற்றது, தி.மு.க. அரசே பணம் கொடுத்து  சிப்காட்டிற்கு ஆதரவான போராட்டங்களை நடத்தியிருப்பது உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது.

000

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு எனும் பகுதி தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்காவாக செயல்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழில் வளாகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் மூன்றாவது சிப்காட் அமைப்பதற்காக செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, நர்மாபள்ளம், எருமைவெட்டி, மணிப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்தது.

இதற்கான நடவடிக்கையாக கடந்த மே மாதத்தில், 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை கையகப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டது. அரசின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஜூன் 2-ஆம் தேதி மேல்மா கிராமத்தில் ஒன்று திரண்டு, பந்தல் அமைத்து இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தினர். அன்று தொடங்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக 125 நாட்களுக்கும் மேலாக நடந்தது.

ஆனால், விவசாயிகளின் போராட்டத்தினை தி.மு.க. அரசு, ஒரு பொருட்காகக்கூட மதிக்கவில்லை. தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தபோதும் விவசாயிகளுக்கு உரிய பதிலேதும் அளிக்கப்படவில்லை. சிப்காட்டிற்கென அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்திற்கு விவசாயிகள் டிராக்டர்களில் சென்று மனு அளித்தும் பார்த்தனர். ஆனால் எதுவும் நகரவில்லை.


படிக்க: 🔴LIVE: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு


இப்படியாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் எ.வ.வேலு, சார் ஆட்சியர் ஆகியோரை சந்திக்க பலமுறை விவசாயிகள் முயற்சித்தும் பயனில்லை. அதிகாரிகளும் ஆளும்வர்க்கமும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, செவிடாக இருக்கும் இந்த அரசுக்கு தங்களது போராட்டங்களின் மூலம் செவிப்பறையை கிழிக்கச் செய்ய முடிவுசெய்தனர் விவசாயிகள். போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது.

போராட்டத்தின் 125-வது நாளான நவம்பர் 2-ஆம் தேதி தங்களது ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் திருப்பிக் கொடுக்கும் நோக்குடன் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசு, மண்டபத்தில் அடைத்தது. மனு கொடுக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மேல்மா பகுதியில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள்மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தது போலீசு.

போராடினால் குண்டர் சட்டமா?

திருடன், கொலைகாரன், கள்ளச்சாராயம் காய்ச்சுபவனை விரட்டி விரட்டிப் பிடிப்பதைப் போல நவம்பர் 4-ஆம் தேதி, நள்ளிரவு கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்தும், போராட்ட பந்தலில் தங்கியிருந்தவர்களையும் பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கியது போலீசு. போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களைக் குறிவைத்து தேடியது.

அன்றிரவு நடத்தப்பட்ட ‘தேடுதல் வேட்டையில்’ பிடித்துவரப்பட்டவர்கள் மீது, “தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, போலீசு வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது” என போராட்டத்தின் தொடக்கத்தில் விவசாயிகள்மீது போடப்பட்ட 11 பொய் வழக்குகளைத் தோண்டி எடுத்து அதன்கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்தது போலீசு. கைது நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்களிடம், விபச்சாரம் மற்றும் கஞ்சா விற்ற வழக்கு போட்டுவிடுவோம் என மிரட்டியது.

“அன்னைக்கு ராத்திரி மணி ரெண்டு இருக்கும். எங்க வீட்டு கதவ தட்டிக்கிட்டே இருந்த போலீசு, தடாலடியாக உள்ளே வந்து என் புருஷன தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. என் புருஷன் எதுவும் தப்பு பண்ணல, போராட்டத்துல நான்தான் கலந்துக்கிட்டனு கத்திக்கிட்டே அவங்க பின்னாடி ஓடுனேன். வீட்டில கொழந்த குட்டிங்க இருக்குதுல அவங்கள பாத்துக்கும்னா ஒழுங்கா போய்டு. இல்லைனா, உன்னையும் பிடிச்சிட்டுபோய் கேஸ் போட்டுறுவோம்னு மிரட்டிட்டு, அவரை பிடிச்சி வேனில ஏத்திட்டு போயிட்டாங்க. இப்படி நடுராத்திரில வந்து கைது செய்றளவுக்கு அவர் என்ன தீவிரவாதியா” என கேள்வி எழுப்புகிறார் மேல்மா பகுதியை சேர்ந்த ராமா.

“என் புருஷன் கட்டியிருந்த கைலிய அவுத்துட்டு வெறும் உள்ளாடையோட போலீசு இழுத்துட்டு போச்சு. மறுபடியும் அடுத்த நாள் என் வீட்டுக்கு வந்து சோதனையிட்டாங்க. என்ன பண்றீங்கனு கேட்டதுக்கு, உன் வீட்டில கஞ்சா இருக்குதா, வேற ஏதாவது இருக்குதான்னு பாக்க வந்தோம்னு சொன்னாங்க” என போலீசு அராஜகமாக நடந்துக்கொண்டதாக கதறுகிறார் மணிப்புரத்தைச் சேர்ந்த கல்பனா. இப்படியாக அட்டூழிய அராஜக வேலையில் ஈடுபட்டது திராவிட மாடல் போலீசு. இதன்மூலம் மேல்மா சுற்றுவட்டார கிராமங்களை தி.மு.க. அரசு பரபரப்பான சூழ்நிலையில் வைத்திருந்தது.

அன்று போலீசால் பிடித்துவரப்பட்ட 22 பேரில் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அருள் ஆறுமுகம், திருமால், பச்சையப்பன், தேவன், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தை ஏவிவிட்டதோடு, தீவிரவாதிகளை சிறையிலடைப்பதை போல அவர்களை திருச்சி, மதுரை, வேலூர், கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் பிரித்து அடைத்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு இதய பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்கு மருந்து ஏதும் வழங்காமல் இருந்ததோடு, அவரை பார்க்க வந்த அவரின் மனைவியிடம் “தனக்கு பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கு” என்று சொல்லுமளவுக்கு உளவியல் ரீதியாக சித்தரவதை செய்திருந்தது போலீசு.

அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது தமிழ்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாய சங்கங்கள், ஜனநாயக சக்திகள் தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். எதிர்ப்புகள் வலுப்பெறவே, ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், வெளியிலிருந்து போராட்டத்தைத் தூண்டினார் எனக் கூறி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப் மறுத்தது, தி.மு.க. அரசு. இதற்கு, அருள் ஆறுமுகம் சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் என்றும் காரணம் கூறியது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “அந்த ஊரிலேயே இல்லாதவர்களை எல்லாம் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்கிறார்கள். அந்த பகுதி மக்களை வெளியூரைச் சேர்ந்த ஒருவர் தூண்டிவிடுகிறார்” என விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். ஆனால் இதனை மறுக்கும் அப்பகுதி மக்கள், “விவசாயிகளின் கோரிக்கையின் பேரில்தான் எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் ஆறுமுகம் இப்போராட்டதில் கலந்துகொண்டார்” என்று தி.மு.க. அரசை அம்பலப்படுத்துகின்றனர்.


படிக்க: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1


மேலும், நவம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற சிப்காட் வேண்டும் என்ற போராட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், மாவட்டப்போலீசு, திமுகவினர் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதையும் உண்மை அறியும் குழு அம்பலப்படுத்தியுள்ளது. இப்போராட்டங்களுக்கு வந்தவர்களுக்கு ரூ 200, பிரியாணி, மதுபானம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்காட் வேண்டும் என்ற கோரிக்கையோடு நடத்தப்படும் போராட்டப் பாணியானது ஸ்டெர்லைட் போராட்டத்தை மேற்கொள்ளப்பட்ட அதே வழிமுறையாகும். 100 நாள் வேலைக்குச் சென்றவர்களை அழைத்து வருவது, வேலை தருவதாக பொய் சொல்லி மக்களை அழைத்துவருவது ஆகிய கிரிமினல் வேலைகளில் திமுக அரசு, மாவட்டப்போலீசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடு பட்டுள்ளன. இதிலிருந்தே புரியும் யார் வெளியிலிருந்து போரட்டத்தை  தூண்டிவிட்டுள்ளார்கள் என்பது.

மற்றொருபுறம், ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியில், கைது செய்தவர்களை விடுதலை செய்யும்படி கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை மனு அளித்ததாக கூறப்படுகிறது. அம்மனுவில், “வருங்காலங்களில் இதுபோன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்கமாட்டோம். இத்தகைய தவறுகளை வெளியாட்கள் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம்” என உறவினர்கள் எழுதியிருந்ததாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், நவம்பர் 4 அன்று நள்ளிரவு குண்டுக்கட்டாகப் பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் சில காதிதங்களைக் காண்பித்து, “இதில் கையெழுத்து போட்டால்தான் உன் புருஷன் எங்கே இருக்கானு சொல்லுவோம். கையெழுத்து போடலனா வீட்டை ஜப்தி பன்னுவோம், கடைக்கு சீல் வைப்போம் என மிரட்டி போலீசு கையெழுத்து வாங்கியது” என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். மிரட்டி வாங்கப்பட்ட கையெழுத்துதான் மேலே மக்கள் கொடுத்ததாக சொல்லப்படும் ‘கோரிக்கை மனு’.

இப்படியாக விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒருபுறம் மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு, விவசாயிகள் கோரிக்கை வைத்ததாகவும் அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுகொண்டு மனமிறங்கி குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றதாகவும் நாடகமாடுகிறது தி.மு.க. அரசு.

நில மாஃபியாவாக  தி.மு.க. அரசு

மக்களிடமிருந்து அடாவடியாக நிலத்தைக் கையகப்படுத்துவதை நில மாஃபியா என்போம். அதே வேலையைதான் தி.மு.க. அரசு தற்போது செய்துவருகிறது. “3-வது சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்தவிருக்கும் 3,174 ஏக்கர் நிலத்தில் வெறும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே நஞ்சை நிலம். தற்போது 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் எதுவுமில்லை” என புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறது தி.மு.க. அரசு.

ஆனால் உண்மையில், 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தவிர மீதமுள்ள 2,700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான வளமான விளைநிலங்களாகும்.

“தொழிற்சாலை கட்டுவதற்கு நிலம் தேவைப்படுகிறது. எங்கே போய் எடுப்பது. கடலிலும், வானத்திலும் கட்டமுடியாது. விவசாய நிலங்களை கையகப்படுத்தினால்தான் தொழிற்சாலை கட்ட முடியும். தொழிற்சாலை கட்டினால்தான் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று திமிர்தனமாக பேசுகிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

ஆனால், “நிலம்தான் எங்களுக்கு சோறுபோடுகிறது. எங்களது தொழிலே விவசாயம்தான். அதனை எங்களிடமிருந்து பிடுங்கி எங்களுக்கு வேலைக் கொடுப்பதாக சொல்கிறது அரசு. வளர்ச்சி என்றால் யாருக்கான வளர்ச்சி. எங்களது வேலைகளை அழித்து வேலைகள் கொடுப்போம் என்பதெல்லாம் எந்தவகையில் நியாயம்” என்று விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.

மேலும், “பெருந்துறை சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட 3,000 ஏக்கர் நில பரப்பில் பாதி நிலத்தில்கூட தொழிற்சாலைகள் இல்லை. அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதே இளைஞர்களுக்கு எங்கு வேலை கொடுக்கப்பட்டது?” என தி.மு.க.வின் செவிப்பறையில் அறைகின்றனர் மக்கள்.

“கார்ப்பரேட் மாடல்” தி.மு.க. அரசின் அராஜகம்

ஜூலை 2 முதல் போராடும் விவசாயிகளிடம் எவ்விதப்பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திட்டமிட்டே, சதித்தனமாக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து, போராட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலே தி.மு.க அரசு செயல்பட்டுள்ளது.

அதேப்போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை  டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டதை ஊடகங்கள் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எ.வ.வேலு தெரிவித்ததற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

போராடுபவர்களை கண்காணிப்பது, பொய் வழக்குகளின் கீழ் கைது செய்வது, வெளியாட்கள் தூண்டுதலின் பெயரில் நடத்தப்படும் போராட்டம் என்று சித்தரிப்பது, குடும்பங்களில் இருந்து ஆண்களை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டுவது, விவசாயிகள் போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது வழக்கு பாயும் என்று பயபீதியைக் கிளப்புவது என அப்பட்டமான ஒடுக்குமுறைகளை விவசாயிகள் மீது செலுத்தியுள்ளது தி.மு.க. அரசு.

இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் 3,774 ஏக்கர் பட்டா நிலங்களாகும். “விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் எதற்கு?” என ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை காகிதக் குப்பையாக்கியுள்ளது திராவிட அரசு.

தான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டுவழிச் சாலை, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை எதிர்ப்பதாகவும், தனது ஆட்சி விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சி, விவசாயிகளின் அனுமதியுடன்தான் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் கூறி மக்களை வாக்குவங்கியாகப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க., தற்போது அதே மக்கள் விரோத திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்திவருகிறது; போராடும் மக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளும், பாசிச எதிர்ப்புக்கு தி.மு.க.தான் மாற்று என்பவர்களும் “ஸ்கிராப் குண்டாஸ்” (குண்டர் சட்டத்தை நீக்கு) என மென்மையாக தி.மு.க.வை ‘மிரட்டியதோடு’ தங்களது கடமையை முடித்துக் கொண்டார்கள். கூட்டணி கட்சிகளும் விவசாயிகள்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியதே தவிர எந்த கட்சிகளும் “நிலத்தை கையகப்படுத்தக் கூடாது” என்ற மக்கள் கோரிக்கையை முன்வைத்து தி.மு.க. அரசை நிர்பந்திக்கவில்லை; நிர்பந்திக்கவும் நிர்பந்திக்காது என்பதுதான் எதார்த்தம்.

கார்ப்பரேட் சேவைக்காக உழைக்கும் மக்கள்மீது கொடுங்கரங்களை ஏவிவிடுவதில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுதான்.எனவே, இனியும் இந்த அரசிடம் கெஞ்சி பயனில்லை. களத்தில் இறங்கி போராடுவதே தீர்வு!  இது, தி.மு.க. தனது பாசிச அடக்குமுறைகள் மூலம் போராடும் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு கற்பித்துள்ள பாடம்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க