பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”

கொரோனா பெருந்தொற்றையும் மனிதாபிமானமின்றி கொடூரமான முறையில் கையாண்டு பலரை கொன்றொழித்தது பாசிசக் கும்பல். கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் ஏற்பட்ட ஒவ்வொரு பேரிடரையும் பாசிஸ்டுகளுக்கே உரிய அணுகுமுறைகளுடன் கையாண்டு அதனை மக்கள் மீதான பேரழிவாக மாற்றி வருகிறது பாசிச மோடி அரசு.

டந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி உட்பட எட்டு மாவட்டங்கள் புயல் மற்றும் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்; சற்றும் எதிர்பார்க்காத இப்பேரிடர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை “தேசிய பேரிடராக” அறிவிக்க வேண்டும்; ரூ.21,000 கோடி நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரியிருந்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்ப்பனத் திமிருடன், “இதையெல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை கிடையாது” எனப் பேசினார். மேலும், பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் தூத்துக்குடிக்கு சென்ற நிர்மலா, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் கோவிலுக்கு சென்று “பெருமாளுக்கு ஊர்வலம் செல்ல சாலை வசதி இல்லை, அதற்கு நிதி ஒதுக்குங்கள்” என அதிகாரிகளை மிரட்டி அருவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமாக நடந்துக்கொண்டார். இறுதிவரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவது குறித்து வாயே திறக்கவில்லை.

இதேபோன்று, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இமாச்சலப்பிரேதசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதை தேசியப் பேரிடராக அறிவித்து ரூ.10,000 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநிலக் காங்கிரஸ் முதல்வர் மோடி அரசிடம் கோரியிருந்தார். ஆனால், பாசிச மோடி அரசோ தற்போது தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதைப் போலவே அற்ப நிதி ஒதுக்கி அம்மாநில மக்களையும் வஞ்சித்தது.

ஜி.எஸ்.டி. போன்ற பயங்கரவாத பொருளாதார கொள்கைகளால் “மோடி ராஜ்ஜியத்தின் காலனிகளாக மாற்றப்பட்ட மாநிலங்களுக்கு, மாநில உரிமை என்று பேச ஒரு வெங்காயமுமில்லை, வாயை மூடிக்கொண்டு கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பதையே பாசிசக் கும்பல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. பரந்துப்பட்ட உழைக்கும் மக்களை தனக்கான அடிமைகளாக-சூத்திரர்களாக பார்க்கும் பார்ப்பனப் பாசிசக் கும்பலிடம் வேறெதை நாம் எதிர்ப்பார்க்க முடியும்.

இவ்வாறே, கொரோனா பெருந்தொற்றையும் மனிதாபிமானமின்றி கொடூரமான முறையில் கையாண்டு பலரை கொன்றொழித்தது பாசிசக் கும்பல். கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் ஏற்பட்ட ஒவ்வொரு பேரிடரையும் பாசிஸ்டுகளுக்கே உரிய அணுகுமுறைகளுடன் கையாண்டு அதனை மக்கள் மீதான பேரழிவாக மாற்றி வருகிறது பாசிச மோடி அரசு.

இன்னொருபுறம், மோடிக் கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாடுமுழுவதும் இயற்கைவளங்கள் கட்டற்றமுறையில் சூறையாடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான வளங்களை சுரண்டுவதற்காக மணிப்பூர் எரிந்துக்கொண்டிருப்பதை போல இந்தியா முழுவதும் காடுகளுக்கு அரணாக உள்ள பழங்குடியின மக்கள் மீது மறைமுகமான போரை தொடுத்து வருகிறது. இந்த சூறையாடல் காரணமாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் மோடியின் பாசிச ஆட்சியில் மேலும் கோரமானதாக உருவெடுக்கின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மோடியின் அரசு மேற்கொண்டுவந்த கார்ப்பரேட் சுரண்டலால் ஒரு பேரழிவாக மாறியதே அதற்கு சான்று.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க