பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சிங்-இன் தொழில் கூட்டாளி மல்யுத்த கூட்டமைப்புக்கு தலைவராக்கப்பட்ட பின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து வெளியேறியுள்ளார். மற்ற மல்யுத்த வீரர்கள் பதக்கங்களையும், விருதுகளையும் திருப்பியளித்து வருகின்றனர். இதற்கு முன்பு விவசாயிகள் சங்கம் கூட மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்தது. ஆனால் ஒன்றிய அரசு திமிர்த்தனமாக அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் நடவடிக்கைகள், தங்களை வருத்திக் கொள்வதாகவே (அவர்கள் சுயமரியாதையாகவும், நேர்மையாகவும் முடிவெடுத்திருந்தாலும் கூட) உள்ளது? இவற்றை எப்படி பார்ப்பது?
இது முக்கியமான விஷயம். நாட்டின் மல்யுத்த வீராங்கனைகளை அவமானப்படுத்திய பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன், மோடியின் இந்துராஷ்டிர தர்பாராக மாறியுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் அலங்கரிக்கப்படுகிறார். நாடாளுமன்றம் எப்படி மாறியுள்ளது என்பதற்கு இச்சம்பவம் சிறந்த சான்று.
இச்சம்பவம், “இதற்குமேல் இந்தக் கட்டமைப்பில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வியை யதார்த்தமாக எல்லோர் முன்பும் எழுப்புகிறது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் மல்யுத்த வீரர்களின் பதக்கங்களைத் திருப்பியளித்த நடவடிக்கைகளை பார்க்க வேண்டியுள்ளது. தங்களுடைய ஒலிம்பிக் பதக்கங்களையே திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கை என்பது மிக முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை கடந்தாண்டில் நடந்த இந்தியாவின் அறிவுத்துறையினருடைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும்.
குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டபோதும், இந்துமதவெறியை எதிர்த்த கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்கள் பாசிசக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டபோதும், இலக்கிய ஆர்வலர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் பலரும் தங்களது விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். ஜனநாயகத்தை விரும்புபவர்களுக்கு இந்தக் கட்டமைப்பில் இடமே கிடையாது, நீங்கள் வெளியேறிவிட வேண்டியதுதான் என்கிற அளவிற்கு நிலைமை முற்றிப்போய்விட்டது. இதற்கு மாற்றாக வேறொரு ஜனநாயகக் கட்டமைப்பு தேவை என்பதைத்தான் நிலைமைகள் வலியுறுத்துகின்றன.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube