நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலின் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கும், பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளுக்கும் அதிர்ச்சிதரத்தக்கவையாக அமைந்துள்ளன. ஐந்தில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வென்றிருப்பது அவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஒருவித அவநம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது.
தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்திருக்கிறது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் வென்றிருக்கிறது. ஆறுதல் பரிசாக தெலுங்கானாவை வென்றாலும், கர்நாடகத்தின் வெற்றி கொடுத்த உத்வேகத்தை, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பறித்துச் சென்றுள்ளன.
கர்நாடகத் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; “இந்தியா கூட்டணி” உருவாக்கத்திற்கு பிறகு, ஆறு மாநிலங்களின் ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தோற்றத்தை உருவாக்கின. ஏழில் நான்கு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியும், மேற்குவங்கத்தின் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரசின் வெற்றியும் குறிப்பிடத்தகுந்தன. இந்த இரண்டு தொகுதிகளும் பா.ஜ.க-வின் கோட்டையாகும். எனவே, இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது, பலராலும் பா.ஜ.க-வின் வீழ்ச்சியின் தொடக்கமாக கருதப்பட்டது. நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலின் முடிவுகளும் அதன் நீட்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி மூன்று மாநிலத்தில் பா.ஜ.க. வென்றிருக்கிறது.
இதனையொட்டி பொதுவெளியில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தோல்வி முகத்தால் இத்தேர்தலின் போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த பாசிசக் கும்பலால் ‘மோடி அலை இன்னும் ஓயவில்லை’ என்ற பிரச்சாரம் ஊதிப்பெருக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளும் இந்த வார்த்தைகளை அப்படியே வெளிப்படுத்தவில்லை எனினும் ‘மோடி அலை இன்னும் ஓயவில்லையோ?’ என்ற அச்சம் அவர்களையும் தொற்றிக்கொண்டது.
படிக்க: தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து, வினவு ஊடகத்தின் நேரலையில் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், “பா.ஜ.க. வெற்றிபெற்றுவிட்டது என்று நீங்கள் கண்ணீர்விட்டு புலம்புவதில் நியாயம் இல்லை. ஏனென்றால், பிரச்சினை என்பது நாடு தழுவியதாக இருக்கிறது. உங்களது பிரச்சினை என்பது இந்த தேர்தல் தழுவியதாக இருக்கிறது”, “இந்த தேர்தல் முடிவுகள் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்களின் முடிவுகள் அல்ல. அவர்கள் மோடியை (எப்போதோ) நிராகரித்துவிட்டார்கள். இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி-அதானி பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள். இந்த தேர்தல் மூலமாக அவர்களை வீழ்த்த முடியாது என்பதை மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு வகையில் மக்கள் நிரூபிக்கிறார்கள்” என்றனர்.
இந்துத்துவப் பாசிசத்தை நாடு தழுவியதொரு பிரச்சினையாக பார்க்காமல் ஒட்டுமொத்த அபாயத்தையும் தேர்தல் தழுவியதாக பார்க்கும் பார்வை விதைக்கப்பட்டுள்ளதன் விளைவாக, பலரால் இதன் பொருளை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்.
ஆனால், அண்மையில் சில துடிப்புமிக்க இளைஞர்கள் இந்துராஷ்டிரத்தின் சின்னமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்து, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று முழங்கிய சம்பவமானது, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மோடியை நிராகத்துவிட்டார்கள், பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது:
கடந்த டிசம்பர் 13-அம் தேதியன்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் புகைக் குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்” என்று முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு இளைஞர்கள் புகைக்குண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அவர்களை கைதுசெய்தபோது, நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமெழுப்பிய நீலம் ஆசாத் என்ற பெண், “என் பெயர் நீலம். இந்த இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை, காவல்துறை லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என பாசிஸ்டுகளின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தி முழக்கமிட்டார்.
பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள ஒரு நாட்டில், தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டு, குரல்வளை நசுக்கப்பட்டு, வேலையின்றி நிர்கதியாக்கப்பட்ட இளைஞர்கள், தங்களது உயிரைப் பணயம் வைத்து நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்திய நிகழ்வானது இந்தியா முழுக்க பெரும் விவாதப் பொருளானது. பத்து நாட்களுக்கு முன்பாகவே, பாசிச பா.ஜ.க. கும்பல் மூன்று மாநிலங்களில் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்திருந்த நிலையில், மாவீரன் பகத்சிங்கை தமது முன்மாதியாக அறிவித்துக்கொண்ட அந்த இளைஞர்கள், பாசிஸ்டுகளின் தர்பாரை கணநேரத்தில் போராட்ட அரங்காக மாற்றி, நாட்டு மக்களின் சார்பாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மிளிரச் செய்தது.
மேலும், ஐந்து மாநிலத் தேர்தலில் பாசிச பா.ஜ.க. தென்மாநிலமான தெலுங்கானாவில் மட்டும் தோல்வியடைந்து பசுவளைய மாநிலங்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையொட்டி, தென்மாநிலங்களில் மட்டும்தான் பாசிச எதிர்ப்பு உள்ளதா என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட விவாதங்களை இச்சம்பவம் நொறுங்க செய்தது. பாசிஸ்டுகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் கிளம்பிவந்தது, “பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது” என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.
தற்போதும், வடஇந்தியாவில் மோடி-அமித்ஷா பாசிசக் கும்பலால் நிறைவேற்றப்பட்ட பாசிசச் சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தில் லாரி ஓட்டும் தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ள கூறுகளை எதிர்த்து ‘இந்துத்துவாவின் இதயம்’ என்று சொல்லப்படுகின்ற மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடப்பது, பாசிச எதிர்ப்பு நாடு தழுவியது என்பதற்கு மற்றொரு அண்மைக்கால சான்றாகும்.
எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அபாயம்
ஆனால், இதனை பாசிஸ்டுகளை கதிகலங்கச் செய்த ஒரு கலக நடவடிக்கையாக அதை பார்க்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூச்சலிட்டனர். இது மக்கள் போராட்டத்தின் ஒரு வடிவம், பாசிச பா.ஜ.க. கும்பலின் கோர ஆட்சியே இளைஞர்களை இதை நோக்கி தள்ளியுள்ளது என்று பார்க்காமல் இதுவும் பாசிஸ்டுகளின் சதியாக இருக்கலாம் என்று மக்களுக்கு ‘பீதியூட்டினர்’. “நுழைவுச்சீட்டை வாங்கிக்கொடுத்தது பா.ஜ.க. எம்.பி”, “2001 தாக்குதல் நினைவு நாள்” என்று சில விவரங்களை தங்களது வாதத்திற்கு வலுசேர்ப்பதற்கு ஏற்ப போர்த்திக் கொண்டார்கள். ஆனால், மக்கள் பக்கம் நில்லாமல், ‘நாடாளுமன்ற மாண்பின் மீதான தாக்குதல்’ என்று மிக இழிவான நிலையில் நின்றுகொண்டு பிரச்சாரம் செய்தார்கள்.
முந்தைய நாள் வரை நாடாளுமன்றத்தில், “இது ஒரு சர்வாதிகார ஆட்சி” என்பதை தான் எதிர்க்கட்சியினர் ஒப்பாரியாக வைத்துகொண்டிருந்தனர். ஆனால் புகைக்குண்டு வீசிய இளைஞர்கள் அதனை எச்சரிக்கையாக சொல்லும்போது போலி ஜனநாயகப் புதைசேற்றில் மூழ்கி போன எதிர்க்கட்சிகளால் அதனை ஏற்றுகொள்ள முடியவில்லை. பகத்சிங்குகளை பாசிஸ்டுகள் கண்டு அஞ்சுவதை போலவே எதிர்க்கட்சியினரும் அஞ்சினர்.
ஆனால், பாசிசப் பேயாட்சியின் கீழ் ‘நாடாளுமன்ற மாண்புக்காக’ குரலெழுப்பியவர்களுக்கு, அந்த மாண்பு எப்பேர்ப்பட்டது என்பதை பாசிஸ்டுகள் உணர்த்திவிட்டார்கள். பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் தேவை என்று கேட்டவர்களை, ‘நாடாளுமன்றத்தின் மாண்பை’ கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வெளியே தள்ளியது பாசிசக் கும்பல். அடுத்தடுத்து வாயை திறந்த எதிர்க்கட்சி எம்.பி-க்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து, 10, 20, 40 என்ற கணக்கில் கொத்து கொத்தாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியே தூக்கி வீசியது பாசிசக் கும்பல்.
படிக்க: நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!
நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இக்கூட்டத்தொடரில், மக்களவையிலிருந்து 100 எம்.பி-க்களும் மாநிலங்களவையிலிருந்து 46 எம்.பி-க்கள் என மொத்தம் 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்திய மக்கள் தொகையில் கால் சதவிகிதமான 34 சதவிகித மக்களின் பிரதிநிதிகள் இந்துராஷ்டிர நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வீசப்பட்டனர்.
இதுநாள்வரை, அம்பானி-அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக்கை அணைப்பது, எதிர்க்கட்சியினர் பேசுவதை நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது, பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தினால் எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்றத்திலிருந்து தூக்கியெறிவது என்பதை இயல்பு நிலையாக மாற்றி வந்த பாசிஸ்டுகள், எதிர்க்கட்சிகளை கொத்து கொத்தாக வெளியே தூக்கி வீசியெறிந்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தி முடிப்பதையும் இயல்பு நிலையாக மாற்றினர்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதாகைகளை வைத்து முழக்கம் எழுப்பி ‘போராடிக்’ கொண்டிருந்தபோது அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த பத்து மசோதாக்களையும் முந்தைய கூட்டத்தொடர்களில் நிலுவையில் இருந்த ஏழு மசோதாக்களையும் எந்தவித ‘தொந்தரவுமின்றி’ நிறைவேற்றியது பாசிசக் கும்பல். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் தொலைத்தொடர்பு மசோதா 2023, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023, இந்துராஷ்டிர சட்டங்களை அமல்படுத்த இந்திய தண்டனை சட்டங்கள் ஆகிய பாசிசச் சட்டங்களும் அதில் அடக்கம்.
ஆனால், இதில் கொடுமை என்னவென்றல், இவ்வளவு நடந்த பிறகும் எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. நாடாளுமன்றம் கேலிக்கூத்தாக்கப்பட்டிருப்பதை 146 எம்.பி.க்களும் தமது தொகுதி மக்களிடம் சென்று அம்பலப்படுத்தவில்லை. “நீங்கள் எங்களை உறுப்பினர்களாக தேர்வு செய்தீர்கள், ஆனால் மோடியின் அவை எங்களை நீக்கியதன் மூலம் மக்களாகிய உங்களது அதிகாரத்தை பறித்துள்ளது; இதற்கு நாம் சேர்ந்துதான் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று மக்களிடம் அறைகூவல் விடுக்கவில்லை. போலி ஜனநாயக நாடாளுமன்றப் புதை சேற்றுக்குள் மூழ்கிபோன எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் முடியும்வரை நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் போட்டுவிட்டு கூட்டத்தொடர் முடிந்ததும் கிளம்பி சென்றுவிட்டனர்.
இது போராட்ட வழிமுறை:
இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.
நாடாளுமன்றமோ மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான அரங்கமாக இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமாகவே அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படுகின்றன., பெரும்பாலான மசோதாக்கள் பண மசோதாக்கள் என்ற வகையினத்தில் கொண்டுவரப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஒப்புதலின்றியே நிறைவேற்றப்படுகின்றன. மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி பரிசீலிக்கும் நடைமுறை ஏறத்தாழ பா.ஜ.க-வின் ஆட்சியில் காலாவதியாகிவிட்டது. கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி, அதானியின் மெகா ஊழல், மணிப்பூர் கலவரங்கள் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு கூட முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் இடைநீக்கங்கள், போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தி உறுப்பினர் தகுதியையே நீக்கும் சதிச்செயல்கள் என பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இருந்தாலும், அது இல்லாததுபோல்தான் என்றாகிவிட்டது.
ஆதாரை பண மசோதாவாக நிறைவேற்றியது, பணமதிப்பிழப்பு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், நீதித்துறை பாசிஸ்டுகளின் கைப்பாவையாக செயல்படுவதற்கான எடுத்துக்காட்டுகளை குவித்துக் கொண்டிருக்கின்றன. இதனோடு, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை போன்ற சொல்லிக்கொள்ளப்படும் சுயேட்சையான நிறுவனங்களும் பாசிஸ்டுகளின் அடியாட்படைகள் என்பது ஊரறிந்த ஒன்றாக மாறிவிட்டது. ‘ஒரு நிறுவனம் பலவீனப்பட்டால், பிற நிறுவனங்கள் அதனை முறைப்படுத்தும்’ என்று சொல்லிக்கொள்ளப்படும் இந்தியாவின் அரசுக்கட்டமைப்பு பாசிஸ்டுகளின் ஆட்சியில் முற்றிலுமாக அழிந்துவிட்டது.
இத்தகைய சூழலில்தான் மக்கள் தேர்தலையோ அரசு நிறுவனங்களையோ நம்பாமல் வீதிப் போராட்டங்களுக்கு திரள்கிறார்கள். அந்தவகையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் பல போராட்டங்கள் பாசிசக் கும்பலை பணிய வைக்கவும் செய்துள்ளன.
சான்றாக, தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வுபெறும்வரை தங்களது வருங்கால வைப்புநிதியிலிருந்து, சேமிப்புகளை எடுப்பதை கட்டுப்படுத்தும்வகையில் 2016-ஆம் ஆண்டு மோடி அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பெங்களூரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் முதல் நாடெங்கும் பல தொழிலாளர்கள் உடனடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பின்வாங்கப்பட்டது; அதேபோல, 2017-ஆம் ஆண்டு வங்கிகள் திவாலானால், அதனை மக்களின் சேமிப்புகளைக் கொண்டு ஈடுசெய்யும் சதித்திட்டமான நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா (எஃப்.ஆர்.டி.ஐ) வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கப்பட்டது; பா.ஜ.க-வின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இப்போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி 2020-ஆம் ஆண்டின் முதற்பகுதி வரை நீடித்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டமும், அதைத்தொடர்ந்து ஓராண்டுகாலம் வரை நீடித்த விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டமும் பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளுவதில் முக்கிய பங்காற்றின.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதையும் பார்க்க வேண்டும்.
மக்கள் பக்கம் நிற்காதவரை தேர்தல் வெற்றி கூட கிடையாது
நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசிய சம்பவத்துடன் சேர்த்து, இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் பாசிசக் கும்பலை நிராகரித்துவிட்டார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை சொல்லும்போது, இந்தியாவின் உழைக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் களப்போராட்டங்கள் மூலம் பாசிஸ்டுகளை நிராகரிப்பது நிரூபிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது, தேர்தலில் மட்டும் பெரிய அளவில் பின்னடைவுகளை சந்திக்காமல் பா.ஜ.க. வெற்றி அடைந்துகொண்டிருப்பது எப்படி என்ற கேள்வி எழலாம்.
இந்தியாவின் தேர்தல்முறை என்பது இயல்பிலேயே எதேச்சதிகாரமானது. அது சர்வாதிகாரக் கும்பலுக்கே வெற்றியை தரும் தன்மை கொண்டதால், முன்பிருந்த எல்லா தேர்தல் கட்சிகளைக் காட்டிலும் பாசிசக் கும்பலான பா.ஜ.க-விற்கே இத்தேர்தல்முறை மிகவும் சாதகமாக உள்ளது. இது பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தேர்தல் நிதி பத்திரச் சட்டம், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற தேர்தலை பாசிசமயமாக்கும் சட்டங்கள் சட்டப்பூர்வமாக அமலாவது அதற்கான எடுத்துக்காட்டு.
ஆனால், இதனைவிட முக்கிய ஒரு விடயம் ஒன்று உள்ளது. இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வரும் சூழலில், நாட்டில் பாசிச அபாயம் அரங்கேறிவரும் சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்கின்ற இந்தியாவின் எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணி கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை எத்தகையதாக உள்ளது?
பாசிச எதிர்ப்பு முகாமாக முன்னிறுத்தப்படும் இந்தியா கூட்டணிக்கும் பாசிஸ்டுகளுக்கும் பெரியளவில் எந்த வித்தியாசமும் காண முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சிகள் உள்ளன. பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் இந்துத்துவத்தையும் கவர்ச்சிவாதத்தையும் பின்பற்றி பாசிச பா.ஜ.க. கும்பலின் போலியாகவே எதிர்க்கட்சிகள் தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றன.
பாசிஸ்டுகள் அடக்குமுறைகளை ஏவி மக்கள் போராட்டங்களை ஒடுக்குகின்றனர் என்றால் எதிர்க்கட்சிகள் அப்போராட்டங்களை நிராகரிப்பது, அலட்சியப்படுத்துவது, கொச்சைப்படுத்துவது என்று அதையே வேறு வடிவில் வேறு அளவுகோலில் செய்து கொண்டிருக்கின்றனர்.
சொந்தமுறையில் ஒரு போராட்டத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ கடையடைப்பையோ அறிவித்து நடத்த முடியாவிட்டாலும் மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுக்கும் போராட்டங்களை ஆதரவு தெரிவித்து அதனை வளர்த்தெடுக்கும் வேலையை செய்யக்கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. மேலே வரிசைப்படுத்திய மக்கள் போராட்டங்களிலும் அதுதான் அனுபவம். இதனால் மக்களால் எதிர்க்கட்சிகளை நம்பிக்கை கொண்ட ஒரு முகாமாக பார்க்க முடிவதில்லை.மக்களை நசுக்கிவரும் பாசிசச் சட்டத்திட்டங்களை அடித்துநொறுக்கும் வகையிலான மக்கள் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மக்கள் பக்கம் நிற்காத வரை அவர்களால் தேர்தலில் கூட பா.ஜ.க-வை தோற்கடிக்க முடியாது.
பால்ராஜ்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube