‘‘நாடு நெருக்கடியில் உள்ளது, அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது, மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன, தேசிய நலன் கருதி, கருத்து வேறுபாடுகளை கலைந்து, ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’‘ – இவை கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் பா.ஜ.க-விற்கு எதிராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உதிர்த்த வார்த்தைகள்.
அதே நிதிஷ்குமார், ஜனவரி 28-ஆம் தேதி பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் பா.ஜ.க-வின் தலைவர்கள், சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
நிதிஷ்குமாரின் இந்தச் செயலை பலரும் விமர்சித்து வந்தாலும், பெரும்பான்மையான விவாதங்கள் நிதிஷின் இச்செயல் ‘‘இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்’‘ என்ற கோணத்தில்தான் நடத்தப்படுகின்றன. இன்னும் சிலரோ, நிதிஷ்குமாரை விமர்சிக்க சென்றால், அவர் ‘ஒருங்கிணைத்த’ இந்தியா கூட்டணியையும் விமர்சிக்க நேரும் என்பதால் பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.
ஆனால், நிதிஷ்குமாரின் யோக்கியதையைப் பற்றிப் பேசும் இவர்கள், அவர் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியைப் பற்றியும், நிதிஷ்குமார் போன்ற கேடுகெட்ட பிழைப்புவாதிகளை உருவாக்கும், வளர அனுமதிக்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை பற்றியும் வாய்திறப்பதில்லை.
‘பல்டி’ குமார்
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என ஒருவார காலமாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ‘‘நிதிஷ்குமார் தான் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர், அவர் இவ்வாறு செய்யமாட்டார்’‘ என்று இந்தியா கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசுமாறு நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
2022-இல், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு நிதிஷ்குமார், ‘‘இனி என் வாழ்நாளில், எந்த வகையிலும் பா.ஜ.க. வழியில் செல்ல மாட்டேன்’‘, ‘‘பா.ஜ.க-வுடன் இணைவதைவிட என் உயிரை மாய்த்துக்கொள்வதே மேலானது’‘ என்றெல்லாம் சவடால் அடித்திருந்தார்.
படிக்க: நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா
அதேபோல, ‘‘சாதிவெறியைப் பரப்பும் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. இனி ஒருபோதும் கைக்கோர்க்காது, பீகார் முதலமைச்சருக்கு பா.ஜ.க-வின் கதவுகள் இனி ஒருபோதும் திறக்காது’‘ என்று கூறியிருந்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஆனால் இன்று நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில் முதல் ஆளாக சென்று முதல்வரிசையில் அமர்ந்திருந்த, பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘‘நிதிஷ்ஜீ மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜே.டி.யூ. மற்றும் நிதிஷ்ஜீ-யின் இயல்பான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே’‘ என்று பாசிஸ்டுகளுக்கே உரிய இரட்டை நாக்குடன் நிதிஷ்குமாரை வரவேற்று சிலாகித்துள்ளார்.
கேட்பதற்கே கேலிக்கூத்தாக இருக்கிறதல்லவா?
ஆனால், நிதிஷ்குமார் இப்படி பல்டி அடிப்பது முதல்முறையல்ல, ‘‘பல்துராம்’‘ (மாறிக்கொண்டே இருப்பவர்) என்று பெயர் சூட்டும் அளவிற்கு அவர் பல்டி அடிப்பதில் இழிபுகழ்பெற்றவர்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நிதிஷ்குமார் நான்குமுறை கூட்டணி தாவியுள்ளார். 2013-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது பிரதமர் கனவு கலைந்துபோனதாலும், இஸ்லாமிய மக்களின் வாக்குவங்கியை காப்பாற்றி கொள்வதற்காகவும், பா.ஜ.க-வுடனான தனது 17 ஆண்டுகால கூட்டணியை முறித்து ‘மதச்சார்பற்ற’ வேடம் தரித்தார், நிதிஷ்குமார். அதன்பிறகு 2015-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘‘மெகா கூட்டணி’‘ அமைத்து தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால், 2017-இல் மெகா கூட்டணியில் இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி நிதிஷ்குமாரை அக்கூட்டணியில் இருந்து பெயர்த்தெடுத்து தனது கூட்டணியில் இணைத்துக்கொண்டது மோடி-அமித்ஷா கும்பல். அதன்பிறகு வந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் என்.டி.ஏ. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தார். அத்தேர்தலில் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. என்னதான் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க-வே பீகாரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்படியேப்போனால், தனது கட்சியையே பா.ஜ.க. விழுங்கிவிடும் என்று அஞ்சிய நிதிஷ்குமார் மீண்டும் 2022-இல் பா.ஜ.க-வுடனான என்.டி.ஏ கூட்டணியை முறித்துக்கொண்டு மெகா கூட்டணியில் இணைந்துக்கொண்டார்.
இதற்கடுத்து தான் பா.ஜ.க-விற்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாக நிதிஷ்குமார் அறிவித்து, அதற்கான முயற்சியில் இறங்கினார். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடத்தப்பட்டதையடுத்து, 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி உருவாகியது. அதாவது, பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கபடியாடிக்கொண்டிருந்த பிழைப்புவாதியான நிதிஷ்குமாரின் தலைமையில்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு ஏழு மாதங்கள் கூட ஆகாத நிலையில் மறுபடியும் பல்டியடித்து பா.ஜ.க-வுடனே இணைந்துள்ளார்.
நிதிஷ்குமாரின் கூட்டணி தாவல்:பதவி ஒன்றே நோக்கம்
நிதிஷ்குமார் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. முதலில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவோம் என்று நிதிஷ்குமார் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் ஒற்றை ஒருங்கிணைப்பாளர் பதவியே உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக, ‘‘இந்தியா கூட்டணியின் முகமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்தலாம்’‘ என்று மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்வைத்தது, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகலாம் என்று எண்ணியிருந்த நிதிஷ்குமாரின் கனவில் மண்ணைப் போட்டது.
இதனால் எரிச்சலடைந்த நிதிஷ்குமார், அதற்கடுத்து நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை குறிவைத்து ‘‘இந்திதான் நம் தேசிய மொழி, அவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், மொழிபெயர்க்க முடியாது’‘ என்று திமிராக பேசியிருந்தார். இது பெரும் பேசுபொருளானது. அப்போதே, நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு விலகப்போகிறார் என்று பேச்சுகள் எழுந்தன.
மற்றொருபுறம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நிதிஷ்குமாருடன் கூட்டணியில் இருந்த ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவதற்கான இரகசியச் சந்திப்பு நடத்தியதாக செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து அச்சந்திப்பில் ஈடுபட்டிருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங்கின் பதவியை நிதிஷ்குமார் பறித்தார்.
இதனுடன், பீகாரில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓ.பி.சி.) வாக்குகளை கவர்வதற்காக, கடந்தாண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் நிதிஷ்குமார் சட்டம் இயற்றியிருந்தார். இதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் பேசுப்பொருளானதோடு நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் இந்தியா கூட்டணியினரால் பா.ஜ.க-விற்கு எதிரான ஆயுதமாக முன்னெடுக்கப்பட்டது. இது பா.ஜ.க-வை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
அதற்குபிறகு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்கான வேலையில் பா.ஜ.க. தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, பீகாரின் முன்னாள் முதல்வராக இருந்த, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய கர்பூரி தாக்கூர் என்பவருக்கு பாரத் ரத்னா விருதை அறிவித்துள்ளது. இது பீகாரில் நிதிஷின் ஓ.பி.சி. வாக்குவங்கியில் மேலும், சரிவை ஏற்படுத்தும் என்றும் பேசப்படுகிறது.
ஒருபுறம்,தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையிலும் தொகுதி பங்கீட்டை கூட முடிக்க முடியாமல் இந்தியா கூட்டணி திணறி வருகிறது. அதேபோல் அக்கூட்டணியில் தனக்கு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இதனைவிட, இந்த கூட்டணியில் நீடித்தால் லாலு பிரசாத் யாதவே தனது முதல்வர் பதவியை பறித்துவிடுவார் என்ற அச்சமும் நிதிஷ்குமாருக்கு உள்ளது. எனவே, இந்தியா கூட்டணியை போன்றதொரு ‘மூழ்கும் கப்பலில்’ இருந்து பதவியை பறிக்கொடுப்பதைவிட பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அடிமையாக இருந்தாலும் முதல்வர் பதவியுடன் ‘கௌரவமாக’ இருக்கலாம் என்ற முடிவுக்கு நிதிஷ்குமார் வந்துவிட்டார். இந்த பிழைப்புவாத கணக்கே நிதிஷ்குமாரின் தற்போதைய அந்தர் பல்டிக்கான காரணம்.
படிக்க: மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!
ஒருபுறம் நிதிஷ்குமார் பிழைப்புவாதத்திற்காக இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இன்னொருபுறம் கூட்டணியை விட்டு வெளியேறாவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும், இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்த கருத்திற்கு வர முடியாத காங்கிரஸ் கட்சிக்கும் இதே பிழைப்புவாத கண்ணோட்டம்தான் உள்ளது. தங்களுக்கு இடையிலான பதவி, அதிகார போட்டியை கூட சுமூகமாக முடித்துகொள்ள முடியாதளவிற்கே இக்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு உள்ளது. மற்றப்படி இவர்களுக்கு பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடோ அதற்கான கொள்கையோ கிடையாது.
பாசிச எதிர்ப்பாக இருந்தாலும் பா.ஜ.க. எதிர்ப்பாக இருந்தாலும் மாற்று திட்டமும், கொள்கைகளும் முக்கியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பா.ஜ.க.விற்கு எதிரான மாற்றுத்திட்டம் ஏதும் இல்லாமல் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ என்ற ஒன்றை மட்டும் வைத்துகொண்டு உருவாக்கப்படும் கொள்கையற்ற கூட்டணி சந்தர்ப்பவாதமாக, பிழைப்புவாதத்திற்கானதாக மட்டுமே இருக்கும்.
இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்து
ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை விமர்சிக்கும் அதேவேளையில், ஒரே நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அதேநாளில் முதல்வராக பதவியேற்க முடியும் என்ற இழிநிலைக்கு வாய்ப்பு வழங்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்தை பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.
பதவி, அதிகாரத்திற்காக கூட்டணி மாறுவது, கட்சித் தாவுவது எல்லாம் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மாண்புகளே’. தேர்தலுக்கு முன்னர் ஒரு கூட்டணியில் இருந்து, பிரச்சாரம் செய்து, மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிக்கலாம்; தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணியை முறித்துகொண்டு, யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடரலாம்.
அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியம் ஓட்டுக்கட்சிகளுக்கு கிடையாது. அதேப்போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கட்சியோ, கூட்டணியோ தாவினால் அவர்களை தண்டிப்பதற்கான அதிகாரத்தையும் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களுக்கு வழங்குவதில்லை. அவர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை.
இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை மற்ற ஓட்டுக்கட்சிகளைவிட, பா.ஜ.க. தன்னுடைய பாசிசச் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக ‘திறம்பட’ பயன்படுத்தி வருகிறது. இதற்காக, ஆளும் கட்சிகளின் கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ-க்களை குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்குவது, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி பணியவைப்பது எனப் பல்வேறு சட்டப்பூர்வமான உத்திகளை பா.ஜ.க. கும்பல் கையாண்டுவருகிறது. இதன்மூலம் மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டாலும் பா.ஜ.க-தான் அங்கு ஆட்சிசெய்யும் என்ற புதியநிலையை உருவாக்கியுள்ளது.
எனவே, இங்கு நிதிஷ்குமார் கூட்டணி தாவியது மட்டும் பிரச்சினை அல்ல, நிதிஷ்குமாரை போன்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகளையும் பா.ஜ.க-வை போன்ற பாசிசக் கும்பலையும் வளர அனுமதிக்கும் இந்தியாவின் போலி ஜனநாயகக் கட்டமைப்பே முதன்மையான பிரச்சினை. ஆகவே, நிதிஷ்குமாரை போன்ற பிழைப்புவாதிகளும், பா.ஜ.க. பாசிசக் கும்பலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை தகர்த்தெறிவதற்கான தேவையை உணர வேண்டும். மேலும், தேர்தல் பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் வளர அனுமதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராட வேண்டும்.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube