அமெரிக்காவின் சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க், பிரான்சிஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காசா மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் பற்றிப் படர்ந்துள்ளது.
ஏப்ரல் 17 அன்று பாலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏப்ரல் 18 அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், போர்நிறுத்தம், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை போலீசு கைதுசெய்து வருவதாலும், போராட்டத்தைக் கலைக்கும் வேலையில் போலீசு ஈடுப்பட்டு வருவதாலும் மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஏப்ரல் 22 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 47 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏப்ரல் 23 அன்று இரவு நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 24 அன்று, எமர்சன் கல்லூரி மாணவர்கள் 108 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதேபோல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் டெக்சாஸிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 34,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போராடும் மாணவர்கள் கூறுகின்றனர்.










புகைப்படங்கள்: அல் ஜசீரா
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube