முடிவுறாப் பயணம்?
புலம்பெயர் தொழிலாளர்கள் கவிதை
இதுநாள் வரையிலான
எங்கள் பயணங்களில்
எதையுமே திட்டமிட்டதில்லை
கொரானா ஊரடங்கிற்கு முன்பு வரை…
அனைத்து ஊரிலும்
அனைத்து ஊர்திகளும் அமைதியாக்கப்பட்டிருந்தது
அரசின் திடீர் அறிவிப்பால்..
நெடுந்தூரம் கடக்க
திட்டம் என்ன இருக்கு?
சிந்தனையில் அமிலம் இறங்கி
சிந்திக்க சிரமமாக்கியது…
எட்டும் தூரம் என்றாலுங்கூட
எழுநூறு மைல் தள்ளி இருக்கிறார்கள்
என் பெற்றோர் உற்றார் உறவுகள்..
குடுவைத் தண்ணீர்
கொஞ்சம் ரொட்டிப் பைகள்
கைப்பிடியளவு தைரியம்
நோயுற்ற மிதிவண்டிகளோடு
நெடும் பயணத்தை நிகழ்த்தினோம்…
உச்சி வெயில் உச்சந்தலையில் விழ
வெஞ்சினமாய் வெப்பக்காற்று வீச
தாகத்திற்கு உதவா கானல்நீர் பாதையெங்கும் பளபளக்க
கல்லும் முள்ளும் கால்களை பிளக்க
தொடர்ந்தது பயணம்…
ஓய்வு கேட்டு உடல் உருக
இளைப்பாற நெஞ்சம் மறுக
மெல்லத் தவழும் மிதிவண்டியும் முனக
இருள்கவிந்த இடமாய் எங்கும் தென்பட
ஓடித் தேய்ந்த மிதிவண்டிகளை ஓரம் நிறுத்தி விட்டு
வல்லிய பசியில் மெல்லிய பாடல் பாடியபடி
ஊரே அடங்கியபின் ரயிலா வரப்போகிறதென்றெண்ணி
தண்டவாளத்தில் தலைவைத்து
இரவுக்கும் களைப்புக்கும் அடிபணிந்து
உறங்கிப் போனோம் …
ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில்
முந்நூறு மைல்கள் கடந்து வந்த
உடல்களைச் சிதைத்தப் போது
முடிவுக்கு வந்தது
எங்கள் முடிவுறாப் பயணம்…!
ஏகலைவன்