ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை
எத்தனை யுகங்கள் கடப்பினும்
ஈழத்தில் செத்து வீழ்ந்த
எம் தமிழ் உறவுகளின் கதறல் சத்தமும்,
வீழ்ந்த குண்டுகளின் சத்தமும்
மண்டைக்குள் நித்தம் ஒரு யுத்தத்தை
நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கிறது
எழுத பேனா எடுத்தா..
அதுவும் தன் குருதியை வரியா வடிச்சு கொடுக்குது.
எத்தனையோ பால்மணம் மாறா பச்சிளம் பிஞ்சுகளை
சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு
துண்டு துண்டாக்கி முச்சந்தியில் வீசியெரிந்தது!
தடுத்த தாயையும் நிர்வாணமாக்கி,
பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்தது !
இளம் பெண்களோ பெற்ற தகப்பனின் கண்முன்னே அம்மணமாக்கப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவங்கள் கேட்கும் மனித மனங்களை ஆழ்துளைக்கு இட்டுச் செல்ல மறப்பதில்லை!
ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்!
ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!
ரத்த வெறிபிடித்த அமெரிக்காவும் இந்தியாவும்
தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும்,
இலங்கையின் வளங்களை கொள்ளையடிக்கவுமே இப்போரை நிகழ்த்தியது.
அமெரிக்காவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்த ஆயுதங்களும்
செய்த நாசகர வேலைகளும்
லட்சம் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கவும், லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படவும் மூலதனமாகியது !
இனவெறி நஞ்சை சிங்கள மக்களிடம் விதைத்து,
தமிழ் மக்களின் பிணங்களை அறுவடை செய்த ராஜபக்சேவின் கோர முகம்
நாடு நெருக்கடியில் சிக்கியபோது இலங்கை மக்களிடம் அம்பலமானது.
இன்று ராஜபக்சே சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டது, வரலாறு மக்கள் பக்கம் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.
இனம், மொழி பேதம் கடந்து
வர்க்கமாய் யாவரும் ஒன்றாவோம் !
இப்போராட்டங்களே நமக்கான வழி !
களம் காண்போம் வாருங்கள் உறவுகளே !
விடுதலை காற்றினை சுவாசிக்க !
செந்தாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube