2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 44 நாட்களை கடந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதி நிறைவைடைய போகிறது. ஏழு கட்டங்களாக நடந்த இத்தேர்தலின் முடிவு என்னவாக அமையப்போகிறது என்பது குறித்துதான் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் வெளியாகியிருந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை பா.ஜ.க-தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியது. மோடியின் பிம்பம், பா.ஜ.க-வின் சாதி-மத பிளவுவாத அரசியல் முதலானவை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அடிப்படையாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆனால், தேர்தல் தொடங்கியப் பிறகு நிலைமை அப்படியே தலைக்கீழானது. “அப்கி பார், 400 பார்” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி-அமித்ஷா கும்பல் அந்த முழக்கத்தையே கைவிடும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தவித்தது. மோடி 400 இடங்களை கைப்பற்றுவாரா? என்று விவாதம் நீர்த்துபோய் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற விவாதம் கிளம்பும் நிலை உருவானது.
ஏனெனில், பெரும்பான்மை மக்கள் “பா.ஜ.க. வேண்டாம்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இந்த தேர்தல்களம் துலக்கமாக காட்டியது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடியின் பிம்பம் முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால், இம்முறை மோடியின் பிம்பம் காலாவதியாகிவிட்டது. “எல்லாவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளதுபோல மோடிக்கும் காலாவதி தேதி உள்ளது” என மக்களே கருத்து தெரிவித்தனர்.
பாசிசக் கும்பலின் அடித்தளமாக இருக்கும் ஆதிக்கச்சாதி மக்களிடையே நடந்த போராட்டங்கள் பா.ஜ.க. கும்பலை ஆட்டங்காணச் செய்தது. குறிப்பாக விவசாயிகளின் போராட்டம், இளைஞர்களின் அக்னிபாத் போராட்டம் வடமாநிலங்களில் பா.ஜ.க-வின் முகத்திரையை கிழித்து மக்களிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வலுப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்தது; மதவெறியை கிளப்புவதற்காக ராமன் கோவில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்ற மோடிக் கும்பலின் நடவடிக்கையும் மக்களிடையே எடுபடவில்லை.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், மோடி-அமித்ஷா கும்பல் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், போலீசு, நீதித்துறை என ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பும் பா.ஜ.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் எதிர்க்கட்சிகளை தேடிதேடி நடவடிக்கை எடுப்பது, மறுபுறம் பா.ஜ.க-வின் அயோக்கியத்தனத்தையும் மோடியின் வெறுப்பு பேச்சுக்களையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பது என பா.ஜ.க-வின் ஒரு அங்கமாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்தப்பிறகும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அறிவிக்கும்போது பல்வேறு குளறுபடிகளை நிகழ்த்தியது. வாக்குப்பதிவு குறித்தான எண்ணிக்கைகளை ஆறாம் கட்டத் தேர்தல் வரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. வெளியிட்ட எண்ணிக்கையிலும் திடீரென 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சராசரியாக ஒரு தொகுதிக்கு 28,000 வாக்குகள் அதிகரித்தன. தேர்தல் ஆணையத்தின் இந்த அயோக்கியத்தனங்களை எதிர்கட்சிகள் அம்பலப்படுத்தி பேசினால் “சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மிரட்டியது.
தேர்தல் ஆணையத்தின் இம்முறைகேடுகளை தடுக்ககோரி எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகினால், தேர்தல் ஆணையம் கூறிய பதிலையே வெவ்வேறு வார்த்தைகளில் நீதிபதிகள் கூறினர். விவிபேட் (VVPAT) ஒப்புகை சீட்டுக்களை எண்ணக் கோரிய வழக்கு முதல் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை தேர்தல் ஆணையத்தை வெளியிடக் கோரிய வழக்கு வரை அனைத்து வழக்குகளிலும் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் சேவை செய்தது.
இந்த மோசடித் தேர்தலின் உச்சமாக, சில இடங்களில் வாக்குசாவடிகளை போலீஸ் துணையுடனே காவிக்கும்பல் கைப்பற்றியதும், வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை அடித்து விரட்டியதும் அரங்கேறியது. பல இடங்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அம்பலமானது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கள்ள வாக்கு செலுத்துவதை வீடியோக்களாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்; எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றி பெறுவதற்கான சூரத், இந்தூர் மாடலையும் பா.ஜ.க. உருவாக்கியது. இவையெல்லாம் ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பும் பா.ஜ.க-வின் வெற்றிக்காக பாடுபடுகிறது என்பதைக் காட்டியது.
சமீபத்தில், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. எனவே ஜூன் 4-ஆம் தேதி மோடிக் கும்பல் எத்தகைய தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்பது பெரும்பான்மையானோர் வெளிப்படுத்தும் கருத்தாக உள்ளது. இந்நிலையில், 120 சிவில் அமைப்புகள் இணைந்து, நாடுமுழுவதும் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் “நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளன.
22 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் மோடி ஆட்சியை விட்டு அவ்வளவு எளிதில் இறங்க மாட்டார்; ஒருவேளை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையென்றால் ரஃபேல் ஊழல், பணமதிப்பு நீக்கம், பி.எம். கேர்ஸ் நிதி, தேர்தல் பத்திரங்கள், பெகாசஸ் உளவு, பனாமா மற்றும் பண்டோரா ஆவணங்கள், அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், ரயில்வே போன்றவற்றில் அம்பானி-அதானி கும்பலுக்காக முறைகேடாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் என இந்த பத்து ஆண்டு காலத்தில் மோடி-அமித்ஷா கும்பல் நிகழ்த்திய முறைகேடுகளும் ஊழலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்; இதை மோடி விரும்ப மாட்டார், எனவே எப்படியாவது மீண்டும் வெற்றிப் பெறவே பார்ப்பார்; ஆட்சியைப் பிடிப்பதற்காக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தியது போன்று இந்தியாவிலும் மோடி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றெல்லாம் சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களும் பத்திரிக்கையாளர்களும் எச்சரிக்கின்றனர்.
படிக்க: மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா
ஆனால், இந்த அபாயகரமான நிலைமையில் கூட எதிர்க்கட்சிகள் பாசிசக் கும்பலுக்கு எதிராகவும் இந்த மோசடி தேர்தலை அம்பலப்படுத்தியும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு தயாராக இல்லை என்பதே அவலநிலை. தற்போதுவரை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்ற வரம்பைத் தாண்டி எதிர்க்கட்சிகள் வர மறுக்கின்றன. ஆனால், சிலர் எதிர்க்கட்சிகளை ஆட்சியில் அமர வைப்பதற்காக மக்கள் இந்த மோசடி தேர்தலை எதிர்த்து போராட வேண்டும் என்று அறைக்கூவல் விடுக்கின்றனர்.
ஆனால் மக்கள் நீண்ட காலமாக போராட்ட களத்தில்தான் உள்ளார்கள். பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் இன்று வரை விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாசிசக் கும்பலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள்தான் இன்று தேர்தல் களத்தில் பா.ஜ.க. கும்பலுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாறாக, எதிர்க்கட்சிகள்தான் மக்களின் போராட்டங்களுடன் கைகோர்க்காமல், மக்கள் போராட்டத்தால் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், பல இடங்களில் மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்காததால் வாக்கு சதவிகிதம் குறைகிறதே ஒழிய, அந்த வாக்குகள் அனைத்தும் இந்தியா கூட்டணிக்கு விழவில்லை. சான்றாக, மணிப்பூர் மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், அவர்கள் ஏன் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை என்பதே பரிசீலிக்க வேண்டியது. காரணம், இந்தியா கூட்டணி மணிப்பூர் மக்களுக்கு தன்னை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளவில்லை; குக்கி மக்களின் போராட்டங்களுடன் கைகோர்த்து நின்று, அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை என்பதே முதன்மையானது. சொல்லபோனால், இத்துணை துணிச்சலாக பாசிசக் கும்பல் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கே, என்ன நடந்தாலும் களத்திற்கு சென்று மக்களிடம் முறையிடுவதற்கு துணியாத இந்தியா கூட்டணி கட்சிகளின் பலவீனமும் முக்கியமான காரணம்.
மேலும், கடந்த ஆண்டு துருக்கியில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் எர்டோகன் பல்வேறு வகைகளில் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிர் முகாமிடம் பாசிசத்திற்கு எதிரான சரியான மாற்று ஜனநாயகத் திட்டம் இல்லாததால், எர்டோகன் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தடுக்க முடியாமல் போனது.
எனவே, பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்து, பா.ஜ.க-வின் தில்லுமுல்லு தேர்தலுக்கு எதிராகவும் மக்களை வதைக்கும் இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டத்தைக் கட்டியமைத்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளால் மக்களுக்கு நம்பிக்கையூட்டி தங்களை ஒரு மாற்று கட்சியாக முன்னிறுத்திகொள்ள முடியும். மாறாக, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் மட்டும் போதும்; அதுவே தங்களை சிம்மாசனத்தில் அமர்த்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டால், பா.ஜ.க-விற்கு எத்துணை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க-வை வீழ்த்த முடியாத நிலையே ஏற்படும்.
அறிவு
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube