கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயப் படுகொலைகள்!

கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடியும் அவலம்!

21-06-2024 மாலை 5 மணி வரை சாவின் எண்ணிக்கை 51.
இன்னும் மருத்துவமனையில் 170 பேருக்கு மேல்
உயிருக்குப் போராடி வருகிற அவலம்!

இறப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டும் என்ற அச்சம் பகுதியில் நிலவுகிறது! இவற்றை மூடி மறைக்கவே அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டு வருகிறனர்!

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்:

1) தோழர் முருகானந்தம், கடலூர் மண்டல செயலாளர், மக்கள் அதிகாரம்.
2) வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றம்.
3) வழக்கறிஞர் உத்தரவேல், கடலூர்.
4) வழக்கறிஞர் முஜுபூர் ரஹ்மான், கடலூர்.
5) தோழர் சரவணன், வி.சி.க., கடலூர்.
6) தோழர் ராஜசங்கர், இ.க.க. (மா-லெ ), விடுதலை, விருதாச்சலம்.
7) தோழர் பஞ்சாட்சரம், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.
8) தோழர் விநாயகம், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.

மேற்கண்ட எட்டு பேர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைத்து 21/06/2024 காலை கள்ளக்குறிச்சிக்குச் சென்றோம்.

கண்டறிந்தவை:

கள்ளச்சாராயம் விற்ற வீடு, கருணாபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது; 100 மீட்டர் இடைவெளி கூட கிடையாது. வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தான் போலீசு நிலையம் கூட உள்ளது. சாராயம் வாங்கிக் கொண்டு முதன்மை சாலைக்கு வரும் வழியில் தான் இந்தப் போலீசு நிலையம் உள்ளது.

இந்த கருணாபுரம் பகுதியோ பேருந்து நிலையம் அருகில் தான் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் அன்றாடம் உழைக்கும் தலித் மக்கள். பெரும்பாலும் நிரந்தர வேலை ஏதுமற்ற அன்றாடம் காய்ச்சிகளாகத் தான் வாழ்கின்றனர்.

டாஸ்மாக் சரக்கு ஒரு குவாட்டர் விலை 150 முதல் 200 வரை விற்பனை ஆகிறது. முதலில் இந்த டாஸ்மாக் சரக்குக்கு அடிமையானவர்கள், தொடர்ந்து கூடுதலாக விலை கொடுத்து வாங்கி குடிக்க முடியாமல் போகிறது. எனவே விலை குறைவாகவும் கூடுதலான போதையும் கிடைக்கும் கள்ளச்சாராயச் சரக்கை நாடி ஓடுகின்றனர். இதன் விலை ரூபாய் 60 தான்.

இந்த கருணாபுரத்தில் கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவன் 20 முதல் 25 வருடங்களாக தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகிறான். ஒரு பாக்கெட்டின் விலையான அறுபது ரூபாயில் எம்.எல்.ஏ.வுக்கு 20 ரூபாய் கமிஷன் ஆகவும், வருவாய்த்துறையைச் சேர்ந்த தலையாரி முதல் தாசில்தார் வரை ஒரு கமிஷன் என்றும், உள்ளூர் போலீஸ் முதல் உளவுத்துறை போலீஸ் வரை அவர்களுக்கும் ஒரு கமிஷன், வார்டு மெம்பர் முதல் அரசியல்வாதிகள் வரை கமிஷன் என அனைவருக்கும் லஞ்சம் கொடுத்து வீடு, பேருந்து நிலையம், ஆற்றங்கரை என மூன்று இடங்களில் கள்ளச் சாராயம் விற்று வந்துள்ளார்.

விழுப்புரம் சாராய சாவுக்குப் பின் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்த போதும் இந்த கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்படவில்லை. அந்த அளவுக்கு அரசியல், அதிகார வட்டாரப் பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக உலா வந்துள்ளான். பகுதியில் மக்கள் மத்தியில் இவனுக்கு செல்வாக்கு உள்ளது. அப்பகுதியில் கந்துவட்டி கொடுமையிலிருந்து பாதிப்புக்குள்ளனவர்களைப் பாதுகாத்து உள்ளான். பணம் நெருக்கடி உள்ளவர்களுக்கு கடன் கொடுத்து உதவியுள்ளான். அனைவரிடமும் மரியாதை கொடுத்துப் பழகி வந்துள்ளான். சுருக்கமாகச் சொன்னால் மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்து வந்துள்ளான்.

மேற்கண்ட காரணங்களால் பகுதியில் இவனைத் தங்களில் ஒருவராகப் பார்த்து வந்துள்ளனர். இதையும் மீறி, பகுதியில் வசிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் போலீசு நிலையத்தில் வெவ்வேறு காலங்களில் தனித்தனியே புகார் கொடுத்துள்ளனர். போலீசோ மனு மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் விசுவாசமாக கள்ளச் சாராய ரவுடி கன்னுக்குட்டியிடம் ஒப்படைத்து விட, அவனோ புகார் அளித்த நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வைத்துள்ளான். அதன் பின் பெரும்பாலும் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

நாங்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது இவ்வளவு பேருடைய இறப்புக்கு காரணமான இவன் மீது கோபமோ வெறுப்போ யாரிடமும் காண முடியவில்லை. மக்கள் கையறு நிலைக்குத தள்ளப்பட்டுள்ளனர். அரசின் நிவாரண உதவி, உத்தரவாதமான ஒரு வேலை என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இறந்து போனவர்களைத் தவிர உயிருக்கு போராடிவரும் பலருக்கும் கண் தெரியாமல் காது கேட்காமலும் மூளை சாவடைந்தும் உள்ளனர். இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு எங்களை அனுமதிக்கவில்லை. போலீசுத்துறை உயர் அதிகாரியிடம் பேசிய போது அவர்கள் பதில் அளிக்கவில்லை. எனவே இதன் முழு விவரத்தை எங்களால் வெளியில் கொண்டு வர இயலவில்லை. எங்களது வேலையை முழுமையாக செய்து முடிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிந்துரைகள்:

  • போலீசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவர் மீதும் கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்காலிக பணி நீக்கத்தை வெறும் கண்துடைப்பு நாடகம் என வன்மையாக கண்டிக்கிறோம்.
  • அதேபோல், உள்ளாட்சித் துறைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் முதல் நகராட்சி தலைவர்கள் வரை தொகுதி எம்.எல்.ஏ உள்ளடக்கிய மக்கள் பிரதிநிதிகள் அனைவரின் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பகிரங்கமாக விற்பதற்கு துணை போன எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
  • அதேபோல் வருவாய்த் துறையிலும் தலாரி முதல் தாசில்தார் வரை சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மக்களை போதைக்கு பழக்கி போதைக்கு அடிமைபடுத்தும் அரசின் டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். டாஸ்மார்க் கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதில் அரசே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க