பீகாரில் இட ஒதுக்கீடு உயர்வு இரத்து: மனு ‘நீதி’ அடிப்படையிலான தீர்ப்பு

இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டக் கூடாது என்றால், ‘உயர்சாதி’ ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு (EWS) மட்டும் எப்படி சாத்தியமானது?

2

பீகார் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC), பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக உயர்த்துவதற்காக பீகார் அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தங்களை பாட்னா உயர் நீதிமன்றம் ஜூன் 20 அன்று ரத்து செய்துள்ளது.

இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா நவம்பர் 9, 2023 அன்று பீகார் சட்டப்பேரவையிலும், நவம்பர் 10 அன்று சட்ட மேலவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு நவம்பர் 21, 2023 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இச்சட்டத் திருத்தத்தின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (EBC) இட ஒதுக்கீடு தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், பட்டியல் சாதியினருக்கு 16 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 1 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு தற்போதுள்ள 3 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் அனுமதித்த 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற உச்ச வரம்பையும் தாண்டி 65 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்தது. ‘உயர் சாதி’யைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக ‘பின்தங்கிய’ வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடும் இருப்பதால் பீகாரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத்தம் 75 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் வரம்பின் கீழ் வந்துவிடும்.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


இந்நிலையில் தான் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நவம்பர் 27, 2023 அன்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை மார்ச் 11, 2024 அன்று முடிவடைந்தது. அதன் தீர்ப்பு தான் தற்போது, ஜூன் 20 அன்று, வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான பீகார் அரசின் முடிவானது, ஜே.டி.யூ. – ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சியின் போது நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் (Bihar caste-based survey report) தரவுகளின் அடிப்படையிலானது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் அக்டோபர் 2, 2023 மற்றும் நவம்பர் 7, 2023 என இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது.

இதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 13 கோடியில் 63 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மேலும், மாநிலத்தின் 34.13 சதவிகிதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களின் மாத வருமானம் ₹6,000 அல்லது அதற்கும் குறைவாகவும், 29.61 சதவிகித குடும்பங்களின் மாத வருமானம் ₹6,000 முதல் ₹10,000 வரை இருப்பதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக, 63.74 சதவிகிதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ₹10 ஆயிரத்திற்கும் குறைவான மாத வருமானத்தையே கொண்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் தான் பீகார் அரசு இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இருப்பினும், பாட்னா உயர் நீதிமன்றம் அதனை இரத்து செய்துவிட்டது.


படிக்க: 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


தற்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம்.

இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டக் கூடாது என்றால், ‘உயர்சாதி’ ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு (EWS) மட்டும் எப்படி சாத்தியமானது? உச்ச நீதிமன்றத்தால் அது எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது?

இந்த கேள்விக்கான விடை தான் பார்ப்பனிய மேலாதிக்கம்.

தரவுகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பீகார் அரசால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாக நீதித்துறையின் கண்களுக்குப் புலப்படுகிறது. ஆனால், தரவுகளின் அடிப்படையில் அமையாத, தர்க்கமற்ற ‘உயர்சாதி’ ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு (EWS) மட்டும் சட்டப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது.

இது தான் பார்ப்பனியம்!

பீகாரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 84.5 சதவிகிதத்தினராக இருக்கும் மக்களுக்கு (BC, EBC, SC, ST) 65 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதமானது. ஆனால், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மக்கள் தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள ‘உயர்சாதி ஏழை’களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது சட்டப்பூர்வமானது.

இதுதான் மனு ‘நீதி’!

பார்ப்பனிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலோடு இணைந்து நீதித்துறையும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதையே இந்த இட ஒதுக்கீடு இரத்து தீர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube