தென்கொரிய சாம்சங் நிறுவனத்தில் ஜூலை 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது சாம்சங் மின்னணு தொழில் தேசியத் தொழிற்சங்க (Samsung electronics national union) தலைமை.

உலகின் தென்கிழக்கு மூலையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு, உலகின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களையும் கதிகலங்க செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இதுவரை பேச்சுவார்த்தை நடத்த சாம்சங் நிறுவாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், போராடும் தொழிலாளர்கள் “எங்களது மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜூலை 10 முதல் காலவரையற்றப் போராட்டமாக அறிவித்திருக்கிறோம் என்று தொழிற்சங்க தலைமை தங்கள் இணையத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

***

உலகில் குறைக்கடத்தி உற்பத்தியிலும் நினைவகச்சில்லு (MemoryCards) தயாரிப்பிலும் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. A.I(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் செயல்முறைக்கு வந்திருக்கும் நிலையில் புதிய நினைவகச்சில்லுகளின் சந்தை பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்த நிலைமையை பயன்படுத்தி நடப்பு ஆண்டு, இரண்டாவது காலாண்டில் தங்களது இலாபம் சென்ற ஆண்டைவிட பல மடங்காக உயரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த நிர்வாகத்தின் பேராசையில் மண் விழுந்துள்ளது.

படிக்க : கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை

நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் 2024, ஜனவரி மாதத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து வருகிறது. நிர்வாகம் முன்வைத்த 5.1 சதவிகித ஊதிய உயர்வை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. மாறாக, 5.6 சதவிகிதம் என்ற ஊதிய உயர்வையும் வெளிப்படையான செயல் திறனை அடிப்படையாகக் கொண்ட போனஸ் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்; அடுத்து ஆண்டுக்கு ஒரு நாள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன் தள்ளியது சங்கத் தலைமை.

சாம்சங் நிறுவனத்தில் மின்னணு உற்பத்தி தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பல்வேறு உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் 30 ஆயிரம் பேர் இந்த புதிய தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள். இது சாம்சங் நிறுவனத்தின் மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

ஜூன் 7-ஆம் தேதி, ஒரு நாள் அடையாள மொத்த விடுப்பு (Mass Leave) போராட்டமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், திட்டமிட்டவாறு ஒரு மாதம் கழித்து ஜூலை 8,9,10 ஆகிய மூன்று நாள் வேலை நிறுத்தப்போராட்டமாக அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தேறியது. கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் காலவரையற்றதாக மாற்றப்படும் என்று முன்பே எச்சரிக்கையும் விடுத்திருந்தது தொழிற்சங்க தலைமை.

நினைவகச் சில்லு உற்பத்தி பிரிவிலிருந்து மட்டும் 6000-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அசெம்பிளி லைனில் உள்ள தொழிலாளர்களும் அடங்குவர். 3000-க்கும் மேற்பட்டோர் தலைமையகத்தின் முன்னால் நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மூன்றாம் நாளான ஜூலை 10 அன்றும் நிர்வாகம் அசைந்து கொடுக்காத நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமாக அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.

இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் முடிவில் சாம்சங் நிர்வாகம் இந்த வேலை நிறுத்தம் உற்பத்தியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் ஆயினும் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் எப்போதும் நல்ல நம்பிக்கை வைத்துள்ளது என்று பொதுவான முறையில் கருத்து வெளியிட்டிருந்தது.

உண்மையில், உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் போராட்டம் தொடர்ந்தால் நிறுவனம் மேலும் மேலும் பெரும் நட்டங்களை சந்திக்கும் என்றும் நடந்து முடிந்த போராட்டத்தில் வேலை தடைபட்ட இயந்திர அமைப்புகளை பழைய நிலைமைக்கு சரி செய்யவே நீண்ட நாட்கள் பிடிக்கும் என்றும் நிர்வாகத்தின் கருத்துக்களை மறுத்திருக்கிறது சங்கத் தலைமை.

தொழிலுற்பத்தியில் நிலவும் களச்சூழ்நிலையும் தொழிலாளர்களின் வாழ்நிலையும்தான் வேலை நிறுத்தப்போராட்டம் வெடிக்க காரணம். நிலைமைகளை சரி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பது நிர்வாகம் மட்டுமே.

ஆனால், நிர்வாகம் நிலைமைகளை சீர் செய்ய அக்கறை செலுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, போராட்டத்தை நீர்த்துப்போக செய்வதற்கு நைச்சியமாகவும் இரகசியமாகவும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது. எனவேதான், நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறோம். நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்திற்காக அவர்கள் நிச்சயம் வருந்த நேரிடும் என்கிறது தொழிற்சங்கத்தின் இணைய அறிக்கை.

படிக்க : பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை

“தொழிலாளர்களின் உறுதிதான் எமது போராட்டத்தை வெற்றியடையச் செய்யும்; தொழிலாளர்களின் சிறந்த எதிர்க்காலத்திற்காகவே எமது போராட்டம் என்பதை உணர்ந்து ஊசலாட்டத்தில் இருக்கின்ற மற்ற தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்; தொழிலாளர் வேலை நிறுத்தம் நிர்வாகத்தை இறுதியில் மண்டியிடச் செய்யும்; அவர்களுக்கு வேறுவழி இருக்காது” என்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது சங்கத் தலைமை.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஊடாகவே “சாம்சங் மின்னணு தொழில் உற்பத்தி தேசிய தொழிற்சங்கத்தின்” உறுப்பினர் எண்ணிக்கை 28,000 லிருந்து 31,000 ஆக அதிகரித்திருக்கிறது என்பதை CNN செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சாம்சங் தொழிலாளர்களும் அவர்களது புதிய தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் நிர்வாகத்தை பணிய செய்யப்போவது நிச்சயம். அவர்களது கோரிக்கைகளை வெல்லப் போவதும் நிச்சயம்.

ஆதி
10/07/2024

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க