கள்ளச்சாராய மரணத்திற்கு ₹10 இலட்சம் கொடுப்பதை எப்படி பார்ப்பது?

ள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். பத்து லட்சம் கொடுத்தவுடனே குணமாகி வீட்டுக்கு சென்றவனெல்லாம் மிச்ச சரக்கைக் குடித்துவிட்டு செத்து போகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் என்றதும் டாஸ்மாக் சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வயிறுவலி என்று மருத்துவமனையில் கிடக்கிறார்கள்” என்று நாக்கில் நரம்பின்றி பேசினார். அதேபோல, நடிகை கஸ்தூரியும் தனது பார்ப்பன-மேட்டுக்குடி திமிரோடு, “எதற்கு பத்து லட்சம்? இறந்தவர்கள் என்ன சுதந்திரப் போராட்ட தியாகிகளா?” என்று  பாதிக்கப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து சமூக ஊடக பக்கங்களிலும் இது தாக்கம் செலுத்த தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களை இழிவுப்படுத்தும் வகையிலான மீம்ஸ்கள், சமூக ஊடக பதிவுகள் அதிகளவு பகிரப்பட்டன.

ஆனால், தற்போது உயிரிழந்த மக்கள் அனைவருமே அன்றாடங்காட்சிகள். காலை முதல் இரவு வரை உடல்வலிக்க வேலை செய்துவிட்டு சாராயத்தைக் குடித்துவிட்டு படுப்பவர்கள். ஒருநாளைக்கு 300 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர்களால் அரசாங்கத்தின் டாஸ்மாக்கில் 300 ரூபாய் செலவு செய்ய முடியாது. இதன் காரணமாகவே இவர்கள் கள்ளச்சாராயத்தைக் குடித்து காலப்போக்கில் போதைக்கு அடிமையாகின்றனர். இதனை அரசும் ஊக்குவிக்கிறது. சாராயம் மட்டுமின்றி உடல்வலி தாங்காமல் தினமும் இரவில் உடல்வலி மாத்திரை போட்டுவிட்டு படுப்பதால் இக்கிராமங்களில் உள்ள பெரும்பான்மையோருக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது. இத்தகைய கொடூரமான சூழலில் வாழும் மக்களின் சூழலை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எப்படி என்று சிந்திக்காமல், அவர்கள் ஏதோ திமிரில் குடிக்கிக்கிறார்கள் என்று பேசுவது வக்கிரத்தின் உச்சம்.

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube