கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்: யார் குற்றவாளி?

தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.

ள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது கருணாபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஜூன் 18 அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த நால்வருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு கூச்சலிட்டு துடித்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆனால், சிகிச்சையளித்த மருத்துவர்களும் போலீசும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால்தான் நால்வரும் உயிரிழந்தனர் என்ற உண்மையை உறவினர்களிடம் சொல்லாமல் மூடி மறைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஜுன் 19 அன்று மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை. இறந்தவர்களில் ஒருவருக்கு குடிப்பழக்கமே இல்லை” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அயோக்கியத்தனமாக பொய் கூறினார். இதனால், ஊர் மக்களும் சாதாரண உடல்நிலை பிரச்சினையால்தான் நால்வரும் உயிரிழந்துள்ளனர் என்று நம்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்துதான் கள்ளக்குறிச்சி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த கொடுமை அரங்கேறியது. மாவட்ட ஆட்சியரின் வார்த்தைகளை உண்மை என்று நம்பிய மக்கள், ஏற்கெனவே வீடுகளில் வாங்கி வைத்திருந்த சாராயத்தையும், இறந்தவர்களின் இறுதி சடங்கில் விநியோகிக்கப்பட்ட சாராயத்தையும் வாங்கி குடித்துள்ளனர். இதனையடுத்து கருணாபுரத்திலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் நூற்றுக்கணக்கானோருக்கு வாந்தி, மயக்கம், கால்வலி, வயிற்றுவலி ஏற்பட்டு வலியில் துடித்துள்ளனர். ஏறக்குறைய 219 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நிலைமை கையை மீறிப் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க, மொத்தம் 65 பேரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

இதுகுறித்து இறந்தவர்களில் ஒருவரின் சகோதரர் பேசுகையில், “இறந்தவர்களில் ஒருவருக்கு குடிப்பழக்கமே இல்லை, அவருக்கு குடும்பப் பிரச்சினை என்று சொல்லிவிட்டு மாவட்ட ஆட்சியர் சென்றுக்கொண்டே இருந்தார். நாங்கள் அழைத்தும் அவர் நிற்கவில்லை. என் அண்ணன் குடிப்பாரா இல்லையா என்பது எங்களுக்குதான் தெரியும். எங்கள் குடும்பப் பிரச்சினை அவருக்கு தெரியுமா? வயிற்றுவலி காரணமாகத்தான் அவர்கள் இறந்தார்கள் என்று சொன்னது முற்றிலும் பொய். மூன்று, நான்கு பேர் இறப்பார்கள், மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தார்கள். இவ்வளவு பூதாகரமாக வெடிக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறைத்து வெளியே சொல்லாமலேயே இருந்துள்ளனர். அடுத்தடுத்து மக்கள் பாதிக்கப்படவேதான் விசயம் வெளியில் தெரிந்துள்ளது” என்று மாவட்ட ஆட்சியரின் முகத்திரையை கிழித்தார்.

மாவட்ட ஆட்சியரும், மருத்துவர்கள் மற்றும் போலீசும் மக்களிடம் உண்மையை சொல்லி எச்சரித்து, அவசரகால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் நேர்ந்த பேரழிவை தடுத்திருக்க முடியும். ஆனால், நயவஞ்சகமாக உண்மையை மூடி மறைத்ததால் 65 உயிர்கள் பறிபோயுள்ளன.

கள்ளக்குறிச்சியின் கோமுகி நதிக்கரையில் ஜூன் 21 அன்று மட்டும் 21 உடல்கள் எரியூட்டப்பட்டன.

ஓயாத மரண ஓலங்கள்

கள்ளக்குறிச்சியின் கிராமங்களில் ஜூன் 18 அன்று கேட்கத் தொடங்கிய மரண ஓலம் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஓயவில்லை. சொல்லபோனால், இறுதிச்சடங்கிற்காக உடல்கள் வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு கூட்டம் வர முடியாத அளவிற்கு ஏறக்குறைய ஒவ்வொரு வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருந்தது. உட்கார்ந்து அழுவதற்கும் இறுதி சடங்குகளை செய்வதற்கும் ஆட்கள் இல்லாமல், இறந்தவர்களின் உறவினர்கள் பரிதவித்துப் போயினர். “எங்களுக்கு ஐம்பது வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் சுனாமிக்கு பிறகு இப்படி ஒரு சாவை நாங்கள் பார்த்ததே இல்லை. எந்த வீட்டிற்கு செல்வது என்று தெரியாமல் அலை மோதிக்கொண்டிருக்கிறோம்” என்று கிராம மக்கள் கதறியழுதனர். ஜூன் 21 அன்று மட்டும் கள்ளக்குறிச்சியின் கோமுகி நதிக்கரையில் 21 உடல்கள் ஒரே நேரத்தில் எரியூட்டப்பட்டன. அடுத்தடுத்த நாட்களிலும் கோமுகி நதிக்கரையில் பிணங்கள் எரிந்துக்கொண்டே இருந்தது அக்கிராம மக்களிடம் உளவியல் ரீதியாகவே தாக்கம் செலுத்தியது.

இதுகுறித்து பேசிய கருணாபுரம் கிராமத்துப் பெரியவர் ஒருவர், “200 குடியிருப்பு இருக்குற ஊர்ல, 26 வீட்டுல சாவு. செத்துப் போனவங்க குழந்தைகளெல்லாம் என்ன பண்றதுனு தெரியாம முழிக்குதுங்க. பொம்பளைப் பிள்ளைங்க வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குதுங்க. ஒரு கிராமமே அழிஞ்சு போயிருச்சு. இதுலருந்து எப்படி மீண்டு வரப்போறோம்னே தெரியல” என்று தனது வேதனையை கொட்டித் தீர்த்தார்.

கள்ளக்குறிச்சியின் கிராமங்களில்
ஜூன் 18 அன்று கேட்கத் தொடங்கிய
மரண ஓலம்
இரண்டு வாரங்களுக்கு மேலாகியும்
இன்னும் ஓயவில்லை.

உண்மையில், கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கு பின்னாலும் இருக்கும் சோகக்கதைகள் நம் நெஞ்சை உலுக்குகின்றன.


படிக்க: கள்ளச்சாராய மரணத்திற்கு ₹10 இலட்சம் கொடுப்பதை எப்படி பார்ப்பது?


முதலில் இறந்த நால்வரில் ஒருவரான பிரவீன் என்ற இளைஞர், தனது மனைவி பிரிந்துச்சென்ற போதிலும், எட்டு வயதிற்குட்பட்ட தன்னுடைய இரண்டு குழந்தைகளை வளர்ந்து வந்துள்ளார். தற்போது அவர் பலியான நிலையில் அவருடைய இரண்டு மகன்களும் அப்பா இறந்துவிட்டதை உணரக்கூட முடியாமல் “அப்பா எப்ப வருவாரு?” எனத் தேம்பி அழுது கொண்டிருக்கின்றனர். அதே போல, ஒரு வீட்டில் கணவன்-மனைவி இருவருமே உயிரிழந்துவிட்ட நிலையில், பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அவர்களின் குழந்தைகள் மூவரும் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் பரிதவிக்கின்றனர்.

பார்வைத் திறனை இழந்த வயதான மூதாட்டி ஒருவர், தன்னைப் பராமரித்துவந்த தன்னுடைய மகன் கள்ளச்சாராயத்திற்குப் பலியாகியுள்ள நிலையில், “என் மகனுக்கு திருமணம் கூட ஆகவில்லையே. இனி என்னை யார் பார்த்துக்கொள்வார்கள்? அவனுக்குப் பதிலாக நான் இறந்து போயிருக்கலாமே” என்று வேதனையில் புலம்புகிறார். கள்ளச்சாராயம் குடித்து தன் தாய் இறந்ததிலிருந்தே மீண்டுவராத பெண்மணி ஒருவர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் கணவனைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார். அதேபோல், உயிர் பிழைத்தவர்களும் பூரணமாக குணமடையவில்லை. பலருக்கு நிரந்தரமாக கண் பார்வை, செவித்திறன் பறிபோயுள்ளது. பலர் மூளைச்சாவு அடைந்துள்ளனர். உடலுழைப்பை மட்டுமே ஒற்றை ஆதாரமாக நம்பி வாழ்ந்துவந்த இம்மக்கள் தற்போது வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்த பேரழிவிலிருந்து கள்ளக்குறிச்சி மக்கள் மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. இறந்தவர்கள் அனைவருமே அன்றைய தினம் வேலைக்கு சென்றால்தான் அடுத்தவேளை உணவு சாப்பிட முடியும் என்ற நிலையில் வாழும் அடித்தட்டு ஏழை மக்கள், பெரும்பான்மையானோர் தலித் மக்களாவர். ஏறக்குறைய இவர்களில் யாருக்குமே சொந்த வீடு கிடையாது. குடும்பத்தின் நிதி வருவாய்க்கான அடிப்படை ஆதாரமாக இருந்தவர்களை பல குடும்பங்கள் இழந்துள்ளன. கணவன், மனைவி, அப்பா, அம்மா என நெருக்கமான உறவுகளை பலர் இழந்துள்ளனர். இவர்களின் மரணமானது அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் குறைந்தது ஒரு தலைமுறைக்கேனும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாக்கம் செலுத்தும் என்பதே நிதர்சனம்.

ஊரறிந்த ரகசியம் தி.மு.க-விற்கு ‘தெரியாத’ அதிசயம்

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பேசுபொருளானது. இந்தியாவிலுள்ள ஆங்கில, இந்தி ஊடகங்கள், ஒருசில சர்வதேச ஊடகங்கள் கூட இச்சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டன. இதனையடுத்து கள்ளச்சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜனும் அவனது தம்பி மற்றும் தம்பியின் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில், அவர்கள் 25 ஆண்டுகளாக கள்வராயன் மலையிலிருந்து காய்ச்சி கொண்டுவரப்படும் கள்ளச்சாராயத்தையும் மெத்தனால் கலந்த ரசாயன சாராயத்தையும் விற்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உள்ளிட்டு 16 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. அரசு தெரிவித்தது. இதுகுறித்து “எக்ஸ்” தளத்தில் பதிவிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திக்கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்றார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் ஒருவருக்கு, தி.மு.க. அரசாங்கத்திற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் தெரியாமல்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சப்பட்டது என்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால், கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு பிறகு உளவுப்பிரிவின் கண்காணிப்பின்றி சிறு கூட்டத்தைக் கூட நடத்த முடியாது என்று சொல்லப்படும் நிலையில், அரசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது என்று பேசுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதை. மேலும், அரசாங்கம்-அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.


படிக்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் | கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை | செய்தி – புகைப்படம்


இவ்வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜன் கடந்த 25 ஆண்டுகளாக கள்ளச்சாரயம் விற்று வந்துள்ளார். அதிலும் முன்பெல்லாம் ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் ஊருக்கு வெளியே விற்கப்பட்டுவந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரின் மையப்பகுதியில் கோவிந்தராஜனின் தம்பியின் குடிசையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இக்குடிசைக்கும் கள்ளக்குறிச்சி நீதிமன்றம் மற்றும் போலீசு நிலையத்திற்கும் தலா நூறு மீட்டருக்கும் குறைவான இடைவெளியே உள்ளது.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய திறந்திருக்கும் இக்குடிசைக்கு எத்தனை மணிக்கு சென்றாலும் சாராயம் கிடைக்கும். பணம் இல்லை என்றால் கடனுக்கு வழங்குவது, இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களில் நேரடியாக வீட்டிற்கே வந்து சாராயத்தை கொடுப்பது என சாராய விற்பனை கொடிக்கட்டி பறந்துள்ளது. இதற்கெதிராக ஊர் மக்கள் கோவிந்தராஜனை எதிர்த்து நின்றால், “நான் கொடுக்க வேண்டிய அனைவருக்கும் பணம் கொடுத்துவிட்டேன். எனக்கு எல்லாரையும் தெரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று அவன் மக்களை மிரட்டி வந்துள்ளான். அதனையும் மீறி கோவிந்தராஜன் மீது போலீசில் புகாரளித்தால், புகாரளித்தவர்களின் முழு விவரங்களும் போலீசால் கோவிந்தராஜனுக்கு அனுப்பப்பட்டு புகாரளித்தோர் உடனடியாக மிரட்டப்படுவர்.

எனவே, கோவிந்தராஜன் தலைமறைவாக இருந்துகொண்டு கள்ளச்சாராய வியாபாரத்தை ரகசியமாகவெல்லாம் நடத்தவில்லை. போலீஸ் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக உள்ள பகுதியில், போலீசு, அமலாக்கத்துறை, வருவாய்த்துறை, உளவுப்பிரிவு உள்ளிட்டவற்றின் துணையுடனே கள்ளச்சாராய வியாபாரம் நடந்துள்ளது. அதிலும், கள்ளச்சாராய ஒழிப்பு சோதனை நடைபெறவுள்ளதெனில், கோவிந்தராஜனுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து தடயங்களை அழிப்பது; தனியாக ஆட்களை நியமித்து சாராய கழிவுகளை துப்புரவு செய்வது; அமலாக்கப் பிரிவு போலீசுக்கு மாதம் இரண்டு முதல் மூன்று வழக்குகளை கோவிந்தராஜனே ஏற்பாடு செய்துதருவது என அதிகார வர்க்கத்தின் துணையுடன் ஓர் ‘ஒழுங்கமைக்கப்பட்ட’  செயலாகவே இந்த விற்பனை நடந்துவந்துள்ளது.

கோவிந்தராஜன் தலைமறைவாக இருந்துகொண்டு
கள்ளச்சாராய வியாபாரத்தை
ரகசியமாகவெல்லாம்
நடத்தவில்லை.
போலீஸ் நடமாட்டம்
எப்போதுமே அதிகமாக உள்ள பகுதியில்,
போலீசு, அமலாக்கத்துறை,
வருவாய்த்துறை
உளவுப்பிரிவு உள்ளிட்டவற்றின் துணையுடனே
கள்ளச்சாராய
வியாபாரம் நடந்துள்ளது.

குறிப்பாக, ஜூனியர் விகடனால் வெளியிடப்பட்ட, கள்ளக்குறிச்சி உட்கோட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி அலுவலகத்திலிருந்து கிடைத்த வார மாமூல் பட்டியல் ஒன்று அதிகார வர்க்கத்தின் முகத்திரையை கிழிக்கிறது. அதில் கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் பார்களின் பெயர்கள், கைப்பேசி எண்கள், ஊர், மாமூல் தொகை உள்ளிட்டவை இடம்பெற்றிருந்ததோடு, ரூ.10,000 என குறிப்பிடப்பட்டு கோவிந்தராஜின் பெயர் முதலிடத்தில் இருந்தது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இரவு முடிக்கப்படும் இந்த வசூலில் வாரத்துக்கு மூன்று லட்சம் வீதம் மாதத்திற்கு 12 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. இது வெறும் அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி அலுவலகத்தின் மாமூல் பட்டியல் மட்டுமே. இவையன்றி தனிப்பிரிவு போலீசுக்கு ஒவ்வொரு போலீசு நிலைய வரம்பிற்கும் உட்பட்டு தனி பட்டியல் வைத்து வசூலிக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வதெனில், கள்ளக்குறிச்சிக்கு பணிமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் மீண்டும் வேறு ஊருக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய மாமூலில் அதிகார வர்க்கம் கொழுக்கிறது.

அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் இதில் பங்குள்ளது. குறிப்பாக, ஊர் பஞ்சாயத்து முன்னிலையில்தான் கள்ளச்சாராய விற்பனைக்கான ஏலம் நடத்தப்படும் என்றும் அரசியல்வாதிகளே இந்த ஏலங்களை எடுத்து சாராய வியாபாரிகளுக்கு கொடுக்கின்றனர் என்றும் போலீசில் உள்ளவர்களே தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தி.மு.க. எம்.எல்.ஏ-க்களான வசந்தன் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோரும் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்களும் கள்ளச்சாராய வியாபாரத்தில் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர் என இவ்விவகாரம் வெளியே வந்தது முதலே பேசுபொருளானது.

மேலும், இந்த அரசியல்வாதிகள்தான் போலீசுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் இடையில் தரகர்களாகவும் செயல்படுகின்றனர். இதன் உச்சமாக, கள்ளச்சாராய வியாபாரிகள் சோதனைகளில் சிக்காமல் இருப்பதற்காக அரசியல்வாதிகளின் கார்களிலேயே சென்று சாராயத்தை கொண்டுவரும் சம்பவங்களும் நடக்கின்றன. பல நேரங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்களிடம் பணம் இல்லாதபோது அவர்களுக்கு பணம் கொடுத்து வியாபாரத்தை ஊக்குவிப்பதும் போலீசும் அரசியல்வாதிகளும்தான்.

கள்ளச்சாராயப் படுகொலையில் தாய் தந்தை இருவரையும் இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்.

எனவே, கள்ளச்சாராயம் விற்றுவந்த கோவிந்தராஜ் சிறு பொறி மட்டுமே. கோவிந்தராஜனை போல பல கள்ளச்சாராய வியாபாரிகள் கள்ளக்குறிச்சியிலும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் உள்ளனர். இவர்களை வைத்து மக்களை குடிக்கு அடிமையாக்கி அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்க கும்பல் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.

தி.மு.க. அரசே குற்றவாளி!

இதுவரையிலும் தி.மு.க. கொண்டுவந்த மக்கள் விரோத திட்டங்கள், கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் தி.மு.க-வின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு குரல்கள் எழுந்த போதிலும் அதனை பல்வேறு வகைகளில் தி.மு.க. மூடி மறைத்தே வந்துள்ளது. ஆனால், தற்போதைய கள்ளச்சாராயப் படுகொலையின்போது தி.மு.க-வின் கூட்டணி கட்சியினரே போராட்டம் நடத்தும் அளவிற்கு இச்சம்பவம் பெரும் பேசுபொருளானது. இவ்விவகாரத்தையொட்டி பல்வேறு விதமான வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டன.

அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் “முதல்வர் பதவி விலக வேண்டும்; சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” என்று அரசியல் செய்து கள்ளச்சாராய மரணங்களால் தமிழ்நாட்டு மக்களிடம் தி.மு.க. அரசின் மீது அதிகரித்துள்ள அதிருப்தியை அறுவடை செய்துகொள்ள முயன்றன.

குறிப்பாக, இந்தியா முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கி பலமுறை அம்பலமாகியுள்ள கிரிமினல்களின் கூடாரமான பா.ஜ.க. கும்பல், துளியும் கூச்சநாச்சமின்றி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தது. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மதுவிலக்கு அமைச்சர் எஸ்.முத்துசாமியை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிடும்படி  வலியுறுத்தினர். மேலும், “பெரும்பாலும் பட்டியலின மக்கள் இறந்துள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியதன் மூலமும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என்று பிரச்சாரம் செய்ததன் மூலமும் பா.ஜ.க. இதனை தேசிய அளவிலும் விவாதப்பொருளாக்கியது.

இன்னொருபுறம், தி.மு.க-வின் கைக்கூலிகள் சமூக ஊடகங்களில், கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மின்னல் வேகத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்; தமிழ்நாடு அரசும் முதல்வரும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்; போலீசுத்துறையில் பணியாற்றும் சில கருப்பு ஆடுகள், வருவாய்த்துறை, மதுவிலக்குத்துறை அதிகாரிகள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள்தான் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என தி.மு.க அரசின் மீதான கோவத்தை மட்டுப்படுத்துவதற்கான வேலையில் இறங்கினர்.

எப்போதும்போல், தி.மு.க-வின் இணைய குண்டர் படை கள்ளசாராய மரணங்களுக்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும் என்று பேசுபவர்களை யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் சங்கி, அ.தி.மு.க. அடிமை என்றெல்லாம் கடித்து குதற தொடங்கியது. “டாஸ்மாக்கை மூட சொல்வது மக்கள், டாஸ்மாக் வேணும் என்பதும் மக்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவது மக்கள், வாங்கி குடிப்பதும் மக்கள், இதையெல்லாம் அரசு தடுத்தால் போராட்டம் செய்வதும் மக்கள், அரசு தடுக்கல என்றால் போராட்டம் செய்வதும் மக்கள், ஒரே குஸ்டமப்பா” என்றெல்லாம் அருவருக்கத்தக்க வகையில் பேசி மக்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிட்டு தி.மு.க-வையும் மு.க.ஸ்டாலினையும் பாதுகாக்கும் வேலையில் ஈடுப்பட்டன.

கள்ளச்சாராயப் படுகொலையில்
தி.மு.க. அரசுதான் குற்றவாளி
என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதேபோல் தி.மு.க அரசின் நடவடிக்கைகள் எதையும் விமர்சிக்காமல் பூரண மதுவிலக்குதான் இதற்கான தீர்வு என்ற வகையில் பிரச்சினையை திசைத்திருப்பும் நடவடிக்கைகளும் நயவஞ்சகமாக மேற்கொள்ளப்பட்டன. பூரண மதுவிலக்கு தீர்வா? இல்லையா? என்பதில் இங்கு விவாதம் இல்லை. ஏனெனில், தற்போது நடந்திருப்பது அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தின் கூட்டில் அரசின் துணையுடன் அரங்கேறியுள்ள கள்ளச்சாராயப் படுகொலை. இதில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து தண்டனை வழங்கி இப்படுகொலைக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, கள்ளச்சாராய குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கி அவர்களை பாதுகாக்கிறது, தி.மு.க. அரசு.

அதேபோல், கடந்தாண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் பகுதியில் நேர்ந்த இதேபோன்ற கள்ளச்சாராய மரணத்தில் 57 பேர் உயிரிழந்தபோதே கள்ளச்சாராய வலைப்பின்னல் ஊடகங்கள் வரை அம்பலமானது. ஆனால், முழுமையாக ஓராண்டு நிறைவடைவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் திமு.க-விற்கு இல்லை என்பதையும் தி.மு.க-வே குற்றவாளி என்பதையும் பொட்டில் அடித்தாற்போல் தெரிவிக்கிறது. ஆனால், இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காமல் பூரண மதுவிலக்கு என்று பேசுவது இவ்விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பி தி.மு.க-வை காப்பாற்றும் அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.


படிக்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!


குறிப்பாக, கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்டு வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்பது ஊரறிந்த உண்மை. இம்மாவட்டங்களில், கள்ளச்சாராயம் எங்கு, எவ்வளவு விற்பனையாகிறது என டாஸ்மாக் மேலாளர்கள் உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பித்து, அதனை மீறி எப்படி டாஸ்மாக் சாராயத்தை விற்பனை செய்வது என அரசதிகாரிகள் ‘உத்திகளை’ வகுப்பதெல்லாம் நடைமுறையில் உள்ளதே.

இம்மாவட்டங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கிராம மக்கள், கேரளாவிற்கு மிளகு எடுக்க குடும்பத்தோடு செல்வது, கர்நாடகாவிற்கு வேலைக்கு செல்வது, ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தொழிலில் தள்ளப்படுவது என மோசமான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றனர். சமவெளிகளிலேயே இந்த நிலை என்றால் மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை. இதன் காரணமாகவே கள்வராயன் மலை போன்ற மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நோக்கி தள்ளப்படுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் அம்மக்களே இத்தொழிலிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தாலும் அதிகாரிகள் அதற்கு அனுமதிப்பதில்லை.

எனவே, மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, கல்வி, சாலைவசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தருவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்றவையும் இம்மக்களை கள்ளச்சாராய தொழிலிற்குள் அமிழ்த்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்-அதிகாரிகளை  கூண்டோடு கைது செய்வது கள்ளச்சாராய வலைப்பின்னலை அறுத்தெறிவதும்தான் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக இருக்கும். இல்லையெனில், கடந்தாண்டு செங்கல்பட்டு, விழுப்புரம், இந்தாண்டு கள்ளக்குறிச்சி, அடுத்த ஆண்டு இன்னொரு மாவட்டம் என இப்படுகொலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

எனவே, ஊடகங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், தனக்கான இணைய குண்டர்படை மூலம்தான் குற்றவாளி இல்லை என்று தி.மு.க. தப்பிக்க முயன்றாலும் தி.மு.க. ஆதரவாளர்கள் திட்டமிட்டே இவ்விசயத்தை திசைதிருப்பினாலும் தி.மு.க அரசு குற்றவாளிதான் என்பதை யாராலும் மறைக்க முடியாது.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க