மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?

மூன்றாவதுமுறை ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பாசிச நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்துவதில் பாசிச மோடி அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது.

மீண்டும் பாசிச மோடியின் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் பாசிச அபாயமே நீங்கிவிட்டது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளை நம்பி மோடி ஆட்சியமைத்துள்ளார்; பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது; எனவே, மோடியால் கடந்த காலங்களில் இருந்ததைப் போல் சர்வாதிகாரமாக நடந்துக்கொள்ள முடியாது; பா.ஜ.க-வால் முன்பு போல் தடாலடியாக சட்டத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது; 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது போல 2029-இல் ஆட்சியை பிடித்துவிடும்; இவ்வாறு படிப்படியாக இந்தியாவில் ‘ஜனநாயகத்தை’ மீட்டுருவாக்கம் செய்துவிடலாம் என்றெல்லாம் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடிக்கும்பல், இந்துராஷ்டிரத்தை நிறுவும் தன்னுடைய இலக்கில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளப் போவதில்லை என்பதையே, மோடியின் பதவியேற்பிலிருந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவகாரம் வரை தெளிவாக உணர்த்துகிறது.

கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் நெருக்கடி யாருக்கு?

தற்போது அமைந்துள்ளது பா.ஜ.க. அரசாங்கம் இல்லை, என்.டி.ஏ. அரசாங்கம் என்பதை சிலர் அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். காரணம் இதற்குமுன் இரண்டுமுறை என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைந்திருந்தாலும் பா.ஜ.க-விடம் பெரும்பான்மை இடங்கள் இருந்ததால் அது பா.ஜ.க-வின் சர்வாதிகார ஆட்சியாகவே இருந்தது. அதிலும் மோடிதான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்பதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால், இம்முறை பா.ஜ.க-விடம் பெரும்பான்மை இல்லை, “ஐக்கிய ஜனதா தளம்” கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மற்றும் “தெலுங்கு தேசம் கட்சி”யின் தலைவர் சந்திரபாபுநாயுடு இருவரின் ‘தயவில்தான்’ மோடி ஆட்சி அமைத்துள்ளார்; எனவே, பா.ஜ.க-வால் தனித்து இயங்க முடியாது என்ற கருத்தை பலரும் முன்வைக்கின்றனர்.

ஆனால், பா.ஜ.க.-விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும், பா.ஜ.க-வின் அதே பாசிச சர்வாதிகார ஆட்சிதான் தொடரப்போகிறது என்பதை மோடியின் அமைச்சரவையே உணர்த்தியது. தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் முக்கியமான அமைச்சரவை துறைகளைக் கோரி பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

ஆனால், மொத்தமாக ஒதுக்கப்பட்ட 72 அமைச்சர் பதவிகளில் 60 பதவிகளை பா.ஜ.க-வே வைத்துக்கொண்டதோடு, முக்கியத்துறைகள் எதுவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ் என கடந்தமுறை மோடியின் அமைச்சரவையில் பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களைக் கொண்டுவந்த அதே நபர்களை மீண்டும் நியமித்ததன் மூலம் மோடியின் 3.0 ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதையே பாசிசக் கும்பல் அறிவி்த்தது.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


அதேப்போல், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க-விடமிருந்து தங்கள் கட்சியைக் கபளீகரம் செய்யாமல் காப்பாற்றிக் கொள்வதற்கான காப்பீடாக (Insurance) சபாநாயகர் பதவியை கண்டிப்பாக பெற்றுவிடுவார்கள் என்றுக் கூறப்பட்டு வந்தநிலையில், மீண்டும் ஓம் பிர்லாவையே சபாநாயகராக நியமித்தது பா.ஜ.க. இவையெல்லாம், கூட்டணி கட்சிகளால் பா.ஜ.க-விற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாகக் காட்டியது. மேலும், “அதிகாரத்தில் எல்லாம் பங்கு தர முடியாது, வேண்டுமானால் தங்களுடன் கூட்டணியில் இருப்பதன் மூலம் சில சலுகைகளை அனுபவித்துக் கொள்ளலாம்” என்பதே பா.ஜ.க-வின் கூட்டணிகட்சிகளுக்கான அணுகுமுறை.

மேலும் இக்கட்சிகள் பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுக்கும் என்று கருதுவதற்கு நிகழ்காலத்திலோ கடந்தகாலத்திலோ எந்த  முகாந்திரமும் இல்லை. மோடியின் பதவியேற்பு விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், மோடியின் காலில் விழுகிறார். அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி பொது சிவில் சட்டத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல, பரிசீலித்து ஒத்த முடிவு எடுத்தால் போதும் என்று பா.ஜ.க-விடம் சரணடைகிறார். இதே கருத்தை அக்கட்சி அக்னிபாத் திட்டத்திலும் முன்வைக்கிறது. கடந்தமுறை மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஷ்மீருக்கான 370-வது சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது, குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச சட்டங்களையும் இக்கட்சி ஆதரித்தே வந்துள்ளது. அதேபோல், குஜராத் இனப்படுகொலையின் போது ஒன்றியத்தில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு, இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை வேடிக்கைப் பார்த்தவர்தான் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கானாவில் மேடக் பகுதியில் கலவரத்தில் ஈடுபடும் காவிக் குண்டர்கள்.

எனவே, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே மோடியின் நவதாராளவாத-இந்துத்துவ கொள்கைகளுக்கு கருத்தியல் ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எதிரானவை அல்ல. தேர்தல் பரப்புரையின்போது மோடி கக்கிய வெறுப்பு-பொய் பிரச்சாரங்களை பெயரளவிற்கு கூட கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தவைதான் இவ்விரண்டு கட்சிகளும். இந்த பிழைப்புவாத-சந்தர்ப்பவாத கட்சிகள்தான் பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்போகின்றன என்று எண்ணுவதை காட்டிலும் முட்டாள்தனம் ஏதும் இல்லை.

இன்னொருபுறம் “இந்தியா” கூட்டணியினரோ, பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் அமைந்துவிட்டதாவும் இம்முறை நாடாளுமன்றத்தில் ‘சத்தமாக குரலெழுப்ப’ப் போவதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில், அம்பானி-அதானி குறித்து பேசினால் மைக் ஆஃப் செய்யப்படும்; பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தினால் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் உரை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்; அதையும் மீறி பேச முற்பட்டால் ஒழுக்கக்கேடு என நூற்றுக்கணக்கான எம்.பி-க்கள் தூக்கி வெளியே வீசப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும்; அதற்கும் பணியவில்லையெனில் எம்.பி. பதவி பறிக்கப்படும் என பெயரளவிலான ஜனநாயக முறைகள் கூட ஒழித்துக்கட்டப்பட்டு பாசிச நடைமுறைகளே நாடாளுமன்ற மரபுகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல், கடந்த ஆட்சியில் கொலீஜியத்தை ஒழித்துக்கட்டுவதற்கான நிகழ்ச்சிநிரலை கச்சிதமாக தொடங்கிவைத்து பா.ஜ.க-வின் கைத்தேர்ந்த அடியாளாக செயல்பட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இம்முறை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக மாற்றபட்டுள்ளதே பா.ஜ.க. இம்முறை எதிர்க்கட்சிகளை எவ்வாறு கையாளக் காத்திருக்கிறது என்பதற்கு போதுமான சான்று.

அருந்ததி ராய் மீது ஊபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவில் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

மேலும், தேர்தல் முடிவு வெளியான அன்று மோடி ஆற்றிய உரையில், “ஜூன் 4-க்கு பிறகு ஊழல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தும்” என்று பேசியது, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் இந்த ஆட்சியில் மேலும் மூர்க்கப்படுத்தப்படும் என்பதையே காட்டுகிறது. சமீபத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்த சம்பவம் இதனை உறுதிப்படுத்துகிறது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், மறுதினமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கியது, அமலாக்கத்துறை. அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்து முடிந்தன.

எனவே, தேர்தலில் நினைத்த வெற்றியை அடையாவிட்டாலும், அரசு கட்டமைப்பை பாசிசமயமாக்கியுள்ளதன் மூலம் பா.ஜ.க. தனது ஒற்றை கட்சி சர்வாதிகார கனவை நிறைவேற்றவே துடிக்கும். ஆக, எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுத்து பாசிச அரங்கேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என்று நினைப்பது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்கும் கதையே.

பாசிச நிகழ்ச்சிநிரலை மூர்க்கமாக்கும் பாசிசக் கும்பல்

மூன்றாவதுமுறை ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பாசிச நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்துவதில் பாசிச மோடி அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது.

புதிதாக சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜுன் ராம் மேக்வால், கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்குவரும் என்றும் அறிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் 146 எம்.பி-க்களை நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வீசியெறிந்துவிட்டு நிறைவேற்றப்பட்டதுதான் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள். ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகள் பார்வையிலிருந்து அணுகும் இச்சட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே லாரி ஓட்டுநர்களும் மருத்துவர்களும் போராடியுள்ளனர். மேலும், நாடுமுழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் அறிவுஜீவிகளும் பெரும்பான்மையாக வழக்கறிஞர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் இச்சட்டங்களை துணிச்சலாக அமல்படுத்த முயற்சிக்கிறது, பாசிசக் கும்பல்.

அதேபோல், பா.ஜ.க. ஆட்சியமைத்தவுடனேயே என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்திலிருந்து பாபர் மசூதி இடிப்பு குறித்த குறிப்புகளை நீக்கிவிட்டு, பாபர் மசூதி என்ற வார்த்தையை “மூன்று கோபுர கட்டடம்” என்று மாற்றியுள்ளது. ஏற்கெனவே, ஃபைசாபாத் என்ற பெயரை அயோத்தி என்றும் பாபர் மசூதி நிலம் என்பது ராமன் கோவில் இடம் என்றும் குறிப்பிடுவது பொது வழக்கமாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போது பாபர் மசூதி என்ற வார்த்தையை வரலாற்றிலேயே இல்லாமல் செய்வதற்கான வேலையில் பாசிசக் கும்பல் இறங்கியுள்ளது.

மேலும், கடந்த 2010-ஆம் ஆண்டு காஷ்மீர் குறித்து பேசியதற்காக ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அருந்ததி ராய் மீது ஊபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவில் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். பீமா கோரேகான் பொய் வழக்குப்போல் பாசிச எதிர்ப்பாளர்கள் மீதான வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்பதையே பாசிசக் கும்பலின் இச்செயல்பாடு உணர்த்துகிறது.


படிக்க: அபாயகரமான மோடியின் சட்டங்கள்! யாரையும் கைது செய்யலாம் | தோழர் மருது


முக்கியமாக, “பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும் புதிய அரசாங்கத்தில் அதன் பொருளாதார நிகழ்ச்சிநிரலில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது” எனவும், 2047-க்குள் விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்காக உள்கட்டமைப்பு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அம்பானி-அதானிகளுக்கான மோடியின் சேவை இந்த ஆட்சியில் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நெருக்கடிகள் உச்சத்தை அடையப்போகிறது.

அரசியல்-பொருளாதார கட்டமைப்பில் மட்டுமின்றி இந்துமுனைவாக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்காக அடித்தளத்திலும் ஆர்.எஸ்.எஸ். தீவீரமாக வேலை செய்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியமைத்தவுடனேயே ‘பசுவதை’ என்ற பெயரில் மீண்டும் கும்பல் படுகொலைகளையும் கலவரங்களையும் நடத்த ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பக்ரித் பண்டிகையின்போது 48 மணி நேரங்களில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஒடிசா, தெலுங்கானா என இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து கலவரம் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது, காவிக் கும்பல். குறிப்பாக, தெலுங்கானாவில் மேடக் பகுதியில் நடத்தப்பட்ட கலவரம் அப்பகுதியில் அரங்கேறிய முதல் கலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்-பொருளாதார கட்டமைப்பில் மட்டுமின்றி இந்துமுனைவாக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்காக அடித்தளத்திலும் ஆர்.எஸ்.எஸ். தீவீரமாக வேலை செய்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, பாசிச அபாயம் ஓய்ந்துவிட்டது, பா.ஜ.க-வின் இந்துராஷ்டிர கனவு தகர்ந்துவிட்டது என்று பேசுவதெல்லாம் பா.ஜ.க-வின் அபாயகரத்தை மக்களிடமிருந்து மறைத்து அவர்களை இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு கூட்டிச் சென்று நிறுத்துவதற்கே வழிவகுக்கும்.

000

இவையனைத்திற்கும் மேலாக ஒரு நாட்டில் பாசிசம் அரங்கேறுவதற்கு பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே அடிப்படையானது. இந்தியாவிலும் கடந்த பத்தாண்டுகளில் பாசிச மோடி கும்பல் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பாசிசமயமாக்கியுள்ளது என்றால் அதற்கு பா.ஜ.க. கைப்பற்றிய ஆட்சியதிகாரம் அடிப்படையான காரணம். அந்தவகையில், மூன்றாவது முறையும் பா.ஜ.க. தனது ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துள்ளது என்பது பாசிச அபாயம் தீவிரமடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது. இந்த எதார்த்தத்தை பரிசீலிக்காமல் பா.ஜ.க-விற்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதிலிருந்து இது தோல்வி என்று பேசுவது பாசிச அபாயத்தை மூடிமறைப்பதற்கே வழிவகுக்கும்.

தனக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் எந்தவொரு பாசிசக் கட்சியும் தனது திட்டத்தை கைவிட்டுவிடாது. எனவே, மோடி தனிபெரும்பான்மை பெற்றாலும் பெறாவிட்டாலும் தற்போது இந்தியாவின் ஆட்சியதிகாரம் பாசிஸ்டுகளின் கரங்களிலேயே குவிக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு எதிரான பாசிச எதிர்ப்பு திட்டத்தை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது.

இந்தியா பாசிச அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை பரிசீலிக்கும் அதேவேளையில் அதனை கண்டு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்பதை தற்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டம் உணர்த்துகிறது. எனவே, பாசிசக் கும்பலுக்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டங்களை கட்டியமைத்து, பாசிசக் கும்பலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பை நிறுவதற்கான திசையில் முன்னேறுவோம்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க