உதவித்தொகை கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகைக்கு விண்ணப்பித்து 14 மாதங்களாகக் காத்திருக்கும் சுமார் 1 லட்சம் பேருக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, “தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” சார்பில் ஜூலை 16 அன்று மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காத்திருப்போர் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட உயரதிகாரிகள் முயற்சிப்பதை தடுக்க வேண்டும்; மாற்றுத் திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களின் ரேசன் அட்டைகளை ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் படி 35 கிலோ உணவு தானியத்திற்கான அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைகளாக மாற்றித்தர வேண்டும்; 100 நாள் வேலையில் மாற்றுத் திறனாளிகளுக்குரிய சட்ட விதிகளின்படி வேலையை முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் எழுச்சியாக நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த தாமதப்படுத்தியதை அடுத்து தடுப்பைத் தகர்த்து முன்னேறினர். அப்போது, போலீசுடன் தள்ளுமுள்ளு நடைபெற்றது. பின்னர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


படிக்க: போராடும் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கும் திமுக அரசு!


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் நேரில் இறங்கி வந்து கோரிக்கைகளைக் கேட்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

பா.ஜான்சிராணி தலைமை வகித்து கூறியதாவது: “தமிழக அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.

ஆனாலும் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. அதேபோல அந்தியோதயா அன்னபோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஏஏஒய் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த பல மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

மேலும், ரூ.1,500 உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவை எதுவுமே கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு கண்ணியத்துடன் வாழ முடியும். மாற்றுத் திறனாளிகள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதற்குமேல் அவர்களை மாவட்ட ஆட்சியர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்”, என்றார்.


படிக்க: மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்


செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 800 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில் மாநில துணைத் தலைவர் பா.சு. பாரதி அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 700 பேர் பங்கேற்றனர். திருவண்ணாமலையில் மாநில துணைச் செயலாளர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1,800 பேர் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் பி. ஜீவா தலைமையில் நடைபெற்றப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சேலம்,  நாமக்கல், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போராட்டம் ஆவேசமாக நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் இப்பிரச்சனையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும், அவர்களின் கோரிக்கைகள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காதுகளில் விழுவதில்லை. போராட்டத்தை ஒடுக்குவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை போலீசைக் கொண்டு மிருகத்தனமாக கையாண்டதை யாரும் மறக்கவில்லை. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றைக் கூட நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க