உத்தரப்பிரதேசத்தில் “கான்வர் யாத்திரை” செல்லும் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்கள் மற்றும் ஸ்டால்களின் பெயர்ப்பலகைகளில், அவற்றின் உரிமையாளர் பெயர்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
வட இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை முப்பது நாள்கள் “கான்வர் யாத்திரை” என்ற காவடி யாத்திரை நடைபெறும். இவ்வாண்டு ஜூலை 22 தொடங்கி ஆகஸ்டு 2 வரை நடைபெறவுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிவபக்தர்கள் காவடி தூக்கிச்செல்வர்.
ஹரித்துவார், கங்கோத்திரி, கேதார்நாத், வாரணாசி உள்ளிட்ட ஆன்மித் தலங்களுக்கு சிவபக்தர்கள் நடைப்பயணம் மேற்கொள்வார்கள். அப்போது, கங்கை நீரை எடுத்துவந்து தங்கள் ஊர்களில் இருக்கும் சிவலிங்கத்துக்கு அமாவாசை, மகா சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வார்கள். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கான்வர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.
முதலில், முசாபர்நகர் மாவட்டம் முழுவதும் உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவை முசாபர்நகர் போலீசு பிறப்பித்திருந்தது. இதைக் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள், போலீசு தனது உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்தின.
ஆனால், பா.ஜ.க, அசைந்து கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீதான தீண்டாமையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அருவருக்கத்தக்க உத்தரவை இரட்டிப்பாக்கி மறுநாளே யோகி ஆதித்யநாத் அரசு மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் அரசாங்கமும் இதே போன்றதொரு உத்தரவைப் பிறப்பிக்கப்போவதாகக் கூறியுள்ளது.
படிக்க: ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!
‘ஆன்மிகப் பயண’த்தின் புனிதத்தைப் பாதுகாக்கவே இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படுவதாக யோகி கூறியிருக்கிறார். அவரது உத்தரவின்படி, சிறு உணவகங்கள், பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்கள் என அனைத்து உணவகங்களின் உரிமையாளர் பெயர்களும் கட்டாயம் எழுதிவைக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை உத்தரப்பிரதேச அமைச்சர் கபில் தேவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். அவர், “முஸ்லிம் வியாபாரிகள் தங்களை இந்துக்கள் போலக் காண்பித்துக்கொண்டு, புனித யாத்திரை செல்பவர்களுக்கு அசைவ உணவை வழங்கிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் உணவகங்களின் பெயர்களை வைஷ்ணவ் தாபா பந்தர், ஷகும்பாரி தேவி போஜனாலயா என்று வைத்துக்கொண்டு, அசைவ உணவுகளை விற்பனை செய்கிறார்கள்” என்று விசமத்தனமாகப் பேசியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. “இது ஒரு சமூகக் குற்றம்” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
“நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை இது” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியும், “அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் மதவெறி இது” என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெராவும் விமர்சித்திருக்கிறார்கள். யோகி அரசின் இந்த நடவடிக்கையை அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்றும் கெரா கூறியிருக்கிறார்.
படிக்க: உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
பா.ஜ.க-வின் கோட்டை என்று கருதப்பட்ட உ.பி-யில், கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க-வுக்குள் கோஷ்டி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தால், முதல்வர் யோகியின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டிருக்கிறது.
விரைவில் உ.பி-யில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, உணவக உரிமையாளர்களின் பெயர்களை எழுதிவைக்க வேண்டும் என்ற இந்த உத்தரவின் மூலம் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தி கலவரம் செய்து, அதன்மூலம் தனது அரசியல் எதிர்காலத்தை காத்துக்கொள்ள யோகி ஆதித்யநாத் திட்டமிடுகிறார்.
“இது முஸ்லிம்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு” என்று வெறும் கண்டனத்தை வெளியிட்டால் மட்டும் போதாது. யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் போராட்டமாக இது இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube