தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!
பாசிச மோடி அரசிடம் நிதியைக் கெஞ்சி பெற முடியுமா?

23.07.2024

பத்திரிகை செய்தி

பாசிச மோடி அமித்ஷா கும்பலின் 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முன்வைக்கப்பட்டுள்ளது. சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் செலவினத்தைக் கொண்டதாக அமைந்துள்ள இந்த பட்ஜெட்டில், ஆட்சியை காப்பாற்றுவதற்காக பீகாருக்கும் ஆந்திராவுக்கும் நிதி வாரி இறைக்கப்பட்டுள்ளது.

பேரரசர் தனக்கு விருப்பப்பட்டவர்களுக்கு பிச்சை போடுவார் என்பது போல, பாசிச மோடி அரசு தனக்கு யார் தேவையோ அவர்களுக்கு மட்டும் நிதியை வாரி இறைத்திருக்கிறது. இந்த நாட்டில் அதிகப்படியாக வரியை ஒன்றிய அரசுக்கு வாரி கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. அந்த தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி எதுவும் கிடையாது என்றால், தமிழ்நாட்டின் பெயரே பட்ஜெட்டில் இருக்காது என்றால் இதற்குப் பெயர்தான் இந்து ராஷ்டிரத்தின் முதல் பட்ஜெட். இனி இந்த நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை யாரும் பேச முடியாது என்பதை விளக்கும் ஒற்றை ஆட்சி முறையின் முதல் பட்ஜெட்.

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் வேளாண்மை கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று வேளை உணவை சாப்பிடுகின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இந்த நிலையில் தங்கத்தின் விலையை குறைத்து விட்டோம், விண்வெளி சாதனங்களுக்கான பொருட்களின் விலையை குறைத்து விட்டோம் என்கிறது மோடி அரசு.

பீகாரும் ஆந்திராவும் முறையாக கேட்பது போல கேட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கும் நிதி கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்கள் பாசிச பிஜேபியினர். தமிழ்நாடு வாரிக் கொடுத்த நிதியில் எங்களது பங்கு எங்கே என்று கேள்விக்கு பதில் கூற வக்கில்லாதவர்கள் ஒன்றிய அரசின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்கிறார்களோ?


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!


தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மகாராட்டிரம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிதியை மறுத்திருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயிலுக்கான சிறப்பு நிதி, பேரிடர் சிறப்பு நிதி போன்ற பல வகைகளில் நிதியின் தேவையை பக்கம் பக்கமாக அறிக்கையாக கொடுத்து பல மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் பாசிச மோடி அரசு ஒருபோதும் பதில் அளிக்கவில்லை.

இந்த நாட்டில் செல்வ வளங்கள் ஒரு சதவீதத்துக்கு குறைவானவர்களிடம் குவிந்து கிடைக்கிறது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மூன்று வேளை உணவு அருந்துவதே கேள்விக்குறியாகிவிட்டது. அதற்கெல்லாம் எந்த விடையும் சொல்லாத பட்ஜெட் இது. இருக்கின்ற அரசுத்துறைகளை எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கான பட்ஜெட் இது.

ஆந்திராவுக்கும் பீகாருக்கும் வாரிக்கொடுத்ததன் மூலம் அந்த மாநில மக்களுக்கு ஒரு போதும் பயன் இல்லை. கட்டுமானங்களை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் அங்கு இருக்கிற கார்ப்பரேட்டுகளின் வயிற்றை நிரப்புவதுதான் இந்த பட்ஜெட்டின் வேலை.

ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துவிட்டதை போலவும் மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டதைப் போலவும் இதோ இப்போது வேலையில்லாதவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என்று மோடி வித்தை காட்டத் தொடங்கி இருக்கிறது பாசிச மோடி அரசு.


படிக்க: மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!


“வேலையில் சேரும் தொழிலாளி ரூ 5000 மூன்று மாத தவணைகளில் பெறுவார். ஆனால் அவரை பணியமர்த்தும் முதலாளி ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ரூ 72000 பெறுவாராம். இது அரசு நிதியை கார்ப்பரேட்டுகளுக்கு மடை மாற்றம் செய்யும் ஏற்பாடே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இந்தியா உச்ச அளவிலான ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இது கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிற அரசின் கொள்கைகளின் தொடர்ச்சியே ஆகும்” என்று பாசிச மோடி அரசின் இந்த பட்ஜெட் திட்டத்தை அம்பலப்படுத்துகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுக்க இனியும் ஒன்றிய அரசு மறுத்தால், தமிழ்நாட்டில் இருந்து எந்த நிதியும், எந்த வரியும் ஒன்றிய அரசுக்கு செல்ல முடியாது என்ற நிலையை நாம் உருவாக்காத வரை இப்படிப்பட்ட அநீதிகள் தொடர்ந்து நடக்கும் என்பதே உண்மை.

அந்த வகையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பட்ஜெட்டை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் பாசிச மோடி அரசை தூக்கி எறிவதற்கான போராட்டங்களை மேற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் மீதான அடக்குமுறையை தவிர்க்க முடியாது என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க