நாள்: 20-07-2024

பத்திரிகைச் செய்தி:

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயாகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில்
புரட்சியை முன்னெடுப்போம்!

மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர
வழிமுறையில் ஊன்றி நிற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் கோலோச்சும் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை எமது அமைப்பின் 10-வது பிளீனத்தில் இருந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். அதன் முக்கியமான பகுதியாக, போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறை தொடர்பான ஓர் உட்கட்சி விவாதத்தை நடத்தி முடித்துள்ளதை தோழர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைப்பின் சித்தாந்த மட்டத்தில் ஒரு பெரும் உந்துதலை ஏற்படுத்தும் வகையிலான இந்த உட்கட்சி விவாதமானது, “அராஜகவாத செயல்தந்திரக் கண்ணோட்டமும் மா-லெ செயல்தந்திரக் கண்ணோட்டமும்” என்ற தலைப்பில் 21-10-2023-இல் தொடங்கப்பட்டது. எனினும் எடுத்துக் கொண்ட உள்ளடக்கத்தின் ஆழம் மற்றும் விரிவான தன்மை காரணமாக ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.

கட்சி முழுவதுமுள்ள கட்சிக் குழுக்களிலிருந்து இந்த சிறப்புக் கூட்டத்திற்கான சிறப்பு விவாதக் குழுக்கள் கட்டியமைக்கப்பட்டு, அக்குழுக்கள் விவாதித்து தங்களது குழு பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்பினர். இக்குழுக்களும், நேரடிப் பிரதிதிகளான முழுநேரப் புரட்சியாளர்கள், தேர்வுநிலை முழுநேரப் புரட்சியாளர்களும் தங்களது கருத்துகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சிறப்புக் கூட்டம் தள்ளிப்போனது. அந்தவகையில், கடந்த மே மாதம் 12-ஆம் தேதி அன்று இந்த சிறப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த உட்கட்சி விவாதமானது 1) மார்க்சிய-லெனினிய போர்தந்திர-செயல்தந்திர வழிமுறை 2) நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்ற இராணுவப் பாதை மற்றும் நிரந்தர தேர்தல் புறக்கணிப்பு ஆகியவற்றின் பொருத்தமின்மை 3) பாசிசம் அரங்கேறும் இன்றைய சூழலும் நமது குறித்தத் திட்டமும் ஆகிய அம்சங்களைத் தீர்மானிக்கும் வகையில் நடந்தேறியது.

சிந்தாந்தப் பிரச்சினைகள் தொடர்பான இந்த உட்கட்சி விவாதம் தோழர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சிறப்புக் கூட்டம் பேருற்சாகத்துடன் நடந்தது. விரிவான பரிசீலனை, பிரதிநிதிகளின் ஜனநாயக பூர்வமான கருத்துகள் – விவாதங்களுடன் நடந்தேறிய இக்கூட்டத்தில், புதிய இளம் தோழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டது முக்கியமான அம்சமாகும்.

மா.அ.க.வில் ஏற்பட்ட பிளவுக்கான காரணம் கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் என்று அரசியல் சித்தாந்த ரீதியாக எமது அமைப்பின் 10-வது பிளீனத்தில் அடையாளப்படுத்தியது மட்டுமல்ல, அதற்கு அடிப்படை வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதம் என்று இந்த மா.அ.க. சரியாக வரையறுத்தது, மார்க்சிய-லெனினிய இயக்கத்திற்கு மா.அ.க.வின் முக்கியமான பங்களிப்பும் திருப்பு முனையாக அமைந்ததாகும். புதிய திசையில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்பிக்கையூட்டியதாகும். இது உண்மை என்பதை கடந்த மூன்றரை ஆண்டு மா.அ.க.வின் அனுபவங்களும் தற்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சிறப்பான பங்களிப்பும் மீண்டும் உறுதிசெய்கிறது.

000

இந்தியாவில் மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறை தொடர்பாக, மா.அ.க.வைத் தவிர வேறெந்த மா-லெ குழுக்களும் தொகுப்பான ஒரு கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதில்லை. அந்தவகையில், 1980-களில் வகுக்கப்பட்ட அரசியல் கோட்பாட்டு ஆவணம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. ஆனால், அன்று முதல் மா.அ.க.வோ இந்த வழிமுறையைக் கைவிட்டு, அராஜகவாதக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வந்துள்ளது.

“மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்”, “பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம்”; “கட்டமைப்பு நெருக்கடிக்கு மாற்று மக்கள் அதிகாரம்”; “காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்” என்று கடந்த காலங்களில் மா.அ.க. வகுத்து செயல்படுத்தியவை அனைத்தும் இடைக்கட்டத்திற்கான முழக்கங்களை செயல்தந்திர முழக்கங்களாகக் கருதிக் கொண்டவையே அன்றி, இவை செயல்தந்திரங்கள் அல்ல. இந்த மைய முழக்கங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் முழங்குவதையே மைய இயக்கங்களாக தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, பிரபலம் தேடும் வழிமுறைக்கு வழிவகுத்ததே அன்றி, அரசியல் படை கட்டுவதற்கு வழி வகுக்கவில்லை.

இவ்வாறு எமது அமைப்பு திசைவிலகிச் சென்றதன் விளைவுதான் பிளவு என்பதை போர்த்தந்திர-செயல்தந்திர கோட்பாட்டு வழிமுறையைப் பின்பற்றுவதில் நிகழ்ந்த தவறான கண்ணோட்டத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

போர்த்தந்திர-செயல்தந்திர கோட்பாட்டு வழிமுறையின் முதன்மையான கூறுகள், அவற்றின் பருண்மையான செயல்பாடுகள், அவற்றை பிரித்தறிவதில் உள்ள சிக்கல்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் போன்றவை இந்த உட்கட்சி விவாதத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

மா-லெ இயக்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பதற்கும் பொருளாதாரவாதம், நவீன கலைப்புவாதம், நவீன அராஜகவாதம் என பல்வேறு திசைகளிலும் அடையாள அரசியலை இணைத்துக் கொண்டும் பிரிந்து பிளவுப்பட்டிருப்பதற்கான காரணங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பரிசீலிக்கப்பட்டன.

000

1980-களில் நிலவிய அன்றைய இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவத்தின் நிலைமைகளிலிருந்து நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்கிற இராணுவப் போர்த்தந்திரப் பாதையானது இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு உடையது என்று தீர்மானித்தோம். இந்த பாதையில் விவசாயிகளின் விவசாயப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

தற்போதைய மறுகாலனியாக்க டிஜிட்டல் யுகத்தில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைப் பொருந்தாது என்று முதல்நிலையிலேயே முடிவெடுத்தாலும், இது தொடர்பாக 1980-களில் நாம் வகுத்த முடிவுகளைப் பரிசீலிக்கும் போது, அன்றைய காலத்தில், புறநிலைமை குறித்து அரசியல் கோட்பாட்டு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையிலேயே அன்றைக்கே நீண்டகால மக்கள் யுத்தப் பாதை நமது நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

குறிப்பாக, நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையைத் தீர்மானிப்பதற்கான சீனாவின் நிலைமைகளுடன் இந்தியாவின் நிலைமைகளை ஒப்பிடும் அதேவேளையில், இந்தியாவிற்கு 10 சிறப்பம்சங்கள் (மையப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த அரசு; மூன்றாம் உலக நாடுகளிலேயே தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஒரு துணை வல்லரசு; தொழிலாளர் வர்க்கத்தில் செல்வாக்கு செலுத்தும் குட்டிமுதலாளித்துவ ஆதிக்கம்; அதுவரையில் நாடு தழுவிய எழுச்சி அனுபவங்கள் இன்மை; இந்திய கம்யூனிச இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் திரிபுவாதம்; மையப்படுத்தப்பட்ட இந்திய இராணுவம்; சாதி வேறுபாடுகளால் மக்கள் பிளவுற்றிருப்பது, மா-லெ கட்சி பலவீனப்பட்டு பல குழுக்களாகப் பிரிந்திருப்பது… போன்ற பத்து சிறப்பம்சங்கள்) இருப்பதால், துவக்கத்திலேயே ஆயுதப் போராட்ட முனை இருக்காது என்றும், அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில்தான் ஆயுதப் போராட்ட முனை உருவாகும் என்றும் தீர்மானித்திருந்தோம்.

உண்மையில், இந்த பத்து சிறப்பம்சங்கள் இந்தியாவின் நிலைமைக்கு நீண்டகால மக்கள் யுத்தப் பாதை பொருந்தாது என்பதை உணர்த்துகின்றன. ஆனால், அன்றைய காலத்தில், நக்சல்பாரி இயக்கம் என்றாலே நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற இடது சந்தர்ப்பவாத மனநிலையில் இருந்துதான் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைதான் புரட்சியின் பாதை என்ற முடிவை எடுத்துள்ளோம் என்பதை உணர்கிறோம்.

அந்தவகையில், புறநிலை யதார்த்தமான இந்த பத்து சிறப்பம்சங்களின் அடிப்படையில் அரசியல் இயக்கம் எடுப்பதை மட்டுமே நாம் செய்துள்ளோம். நக்சல்பாரி இயக்கம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நாம் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் செயல்படுவதாகக் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் முற்றாக நிராகரித்துவிட்டோம் என்பதுதான் நமது சிறப்பம்சமாகும்.

அதேவேளையில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதாகக் காட்டிக் கொள்ள, இத்துடன் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிரந்தரப் போராட்ட வடிவத்தை இணைத்துக் கொண்டோம். அந்த காலத்தில், தேர்தல் பங்கேற்பு என்பது திரிபுவாதம், தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே புரட்சிப் பாதை என்று வறட்டுத்தனமான அணுகுமுறை நக்சல்பாரி இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியதானது நம்மையும் பீடித்துள்ளது என்பதை உணர்கிறோம்.

மொத்தத்தில், 1980-களில் நாம் வகுத்த பத்து சிறப்பு நிலைமைகள் காரணமாக நீண்டகால மக்கள் யுத்தப் பாதை இந்தியப் புரட்சிக்குப் பொருந்தாது என்ற முடிவுக்கு வந்தாலும், 40 ஆண்டுகளில் மாறியுள்ள நிலைமைகள் அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றின் காரணமாக, இந்தியப் புரட்சியானது, முதலாளித்துவ நாடுகளில் பின்பற்றப்படும் மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையைப் (Insurrection) முதன்மையாகக் கொண்டதாக இருக்கும் என்று தீர்மானிக்கிறோம்.

அதேசமயம், வாய்ப்புள்ள சில பகுதிகளில் – வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மலைகளும் காடுகளும் சூழ்ந்த, மறுகாலனியாக்கத்தின் கீழ் நகரமயமாக்கம் தீவிரமடையாத பகுதிகளில், அரசின் கண்காணிப்பு வலைப்பின்னல் இன்னும் விரிவடையாத பகுதிகளில் மக்கள் அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இந்தியப் புரட்சியின் இராணுவப் பாதையானது, பிரதானமாக மக்கள்திரள் எழுச்சிப் பாதையைக் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் சில கூறுகளையும் கொண்டதாகவும் இருக்கும் என்று தீர்மானிக்கிறோம். அக்காலத்தில் நமது முன்னோர்கள் தீர்மானித்த நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற கட்சியின் அடிப்படை நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என்று கருதுவது, இயங்கியலுக்கே எதிரான வறட்டுத்தனமாகும்.

000

மா-லெ போர்த்தந்திர – செயல்தந்திரக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளூராட்சி மன்றங்கள் – அதாவது நிலவுகின்ற ஆளும் வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்திற்கானவற்றை, மற்ற ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதைப் போலவே ஒரு போராட்ட அரங்கமாக பயன்படுத்த வேண்டும்.

ஆகையால், நாம் நிரந்தர தேர்தல் புறக்கணிப்பை ஏற்கவில்லை. அதேபோல, நிரந்தர தேர்தல் பங்கேற்பையும் ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட தருணத்தின் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப நாம் வகுத்துள்ள செயல்தந்திரத்தின் அடிப்படையில்தான் தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பும், தேர்தலை வேறு வகைகளில் அணுகுவதும் அமையும்.

மேலும், தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு என்பது செயல்தந்திரத்தின் கூறுகளில் ஒன்றான போராட்ட வடிவமாகும் (Form of Struggle). தொழிலாளர்கள் நடத்தும் கெரோ போராட்டம், மறியல் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டம் முதலானவற்றைப் போலவே, தேர்தல் பங்கேற்பும் புறக்கணிப்பும் ஒரு போராட்ட வடிவமேயாகும்.

இவற்றில் எந்தப் போராட்ட வடிவம், குறிப்பிட்ட அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகவும், மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு அவசியமாகவும் இருக்கிறதோ, அதைச் செயல்படுத்துவது என்பதுதான் செயல்தந்திரத் தலைமையாகும். எப்போதும் ஒரே போராட்ட வடிவத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறுவது இயக்க மறுப்பியல் கண்ணோட்டமாகும்.

செயல்தந்திரத்தின் கூறுகளில் ஒன்றான போராட்ட வடிவத்தை மட்டுமே உரைகல்லாகக் கொண்டு, தேர்தலில் பங்கேற்பவர்கள் திரிபுவாதிகள், தேர்தலைப் புறக்கணிப்பவர்கள்தான் புரட்சியாளர்கள் என்ற ஒரு தவறான கருத்து நீண்டகாலமாக நமது அமைப்பிலும் நக்சல்பாரி இயக்கத்திலும் நிலவுகிறது. இத்தகைய இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

தோழர் லெனின் கூறியது போல, நாடாளுமன்றத்தில் பங்கேற்பதன் நோக்கமானது, நாடாளுமன்றத்தின் வர்க்கத் தன்மையை உழைக்கும் மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதாகும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத நாடாளுமன்றத்தின் யோக்கியதையை, அருகதையை மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதாகும். முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் மூடுதிரையாக உள்ள நாடாளுமன்றத்தின் சூழ்ச்சிகளையும் பல்வேறு கட்சிகளின் தன்மைகளையும் அம்பலப்படுத்துவதாகும்.

சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.எம்-எல் உள்ளிட்ட நவீன திரிபுவாதிகள் நீண்டகாலமாக இந்தக் கடமையைச் செய்யவில்லை. அதற்கு மாறாக, ஆளும் கட்சியின் சில ஊழல்களை அம்பலப்படுத்துவது, அதற்காக நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவதையே செய்து வந்துள்ளனர். மக்களுக்கு நாடாளுமன்ற முறையின் மீது இன்னமும் பிரமைகள் உள்ளதால், அதைப் போக்குவதற்காக நாடாளுமன்றத்தில் பங்கேற்று அதை அம்பலப்படுத்துவது அவசியம் என்று நவீன திரிபுவாதிகள் இன்னமும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய இந்திய நாடாளுமன்ற முறையானது மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நவீன காலனியாதிக்கக் காலகட்டத்தில் இயங்கிய நாடாளுமன்ற முறைக்கும் தற்போதைய மறுகாலனியாக்கக் கட்டத்தில் இயங்கும் நாடாளுமன்ற முறைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அந்தக் காலத்தைப் போல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் பிறகு சட்டமாக்கப்படும் நடைமுறை என்பது இப்போது இல்லை.

சட்டங்கள் பிரதமர் அலுவலகத்தால் அல்லது அமைச்சரவையின் ஒரு சிறு கும்பலால் தீர்மானிக்கப்படுகின்றன. 1990-களுக்குப் பின்னர், நாடாளுமன்றக் கூட்டங்களில் எண்ணற்ற மசோதாக்கள் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டு, எவ்வித விவாதமும் இல்லாமல் ஒரே நாளிலேயே சட்டமாக்கப்படுகின்றன. நாட்டு மக்களுக்கே தெரியாமல், நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் அந்நிய நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவற்றைப் பற்றி ஓட்டுக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புலம்பும் நிலைமைதான் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் நேரடியாக பங்கேற்கும் ஆணையங்கள், தீர்ப்பாயங்கள், முகமைகள் போன்ற அதிகார அமைப்புகளுக்கு அனைத்து அதிகாரங்களும் மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும், தேர்தல் கட்டுமானமே சீரழிந்து, கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைக்கு மாறிப்போய் விட்டது. மறுகாலனியாதிக்கத்தைத் திணிக்கும் சர்வாதிகார மன்றமாக அது மாறிப் போயுள்ளது. அதாவது, அரசு கட்டமைப்பு மட்டுமின்றி, நாடாளுமன்றம், தேர்தல் பிரதிநிதித்துவ முறை, உள்ளூராட்சி முறை உள்ளிட்ட அரசாங்கக் கட்டமைப்புகளும் மறுகாலனியாக்கத்திற்குப் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதையே நாம் கார்ப்பரேட் நலனுக்கான ஆட்சி அல்லது கார்ப்பரேட் ஆட்சி என்று குறிப்பிடுகிறோம்.

மன்மோகன் சிங் ஆட்சியின் 10 ஆண்டுகளில் உருவான இந்த நிலைமையானது, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் கடந்த 10 ஆண்டுகளில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான அடையாளங்கள் கூட இல்லாமல் ஒழிக்கப்படும் நிலைக்கு முன்னேறியுள்ளது. பல்வேறு சட்டங்களைத் திருத்தியதன் மூலமும் மரபுகளை மாற்றியதன் மூலமும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இத்தகைய நாடாளுமன்றத்தில் பங்கேற்று அதனை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளோ, கட்டுமானமோ தற்போதைய சூழலில் மிகமிக சொற்பமாகவே உள்ளன. இந்நிலையில், தேர்தலை ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் சுருங்கியுள்ளன. மா-லெ இயக்கம் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் நாம் பங்கேற்று, அதை அம்பலப்படுத்துவதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

000

2021 செப்டம்பரில் நடந்த உட்கட்சி விவாதத்தில், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற முழக்கமானது நமது செயல்தந்திரம் என்று தீர்மானித்திருந்தோம்.

அந்த ஆவணத்தில் வகுத்துள்ள பாசிசம் குறித்த சர்வதேச அளவிலான பொதுவான விளக்கங்கள் சரியானவையே எனினும், தற்போதைய மா-லெ போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறையின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, நமது நாட்டில் பாசிசம் அரங்கேறுவது ஓர் இடைக்கட்டத்தைக் குறிக்கிறது எனவும், அதற்கான தயாரிப்பு நடக்கும் இன்றைய சூழல் ஓர் இடைமாறுதல் கட்டம் என்ற முடிவுக்கு வருகிறோம்.

மேலும், காவி-கார்ப்பரேட் பாசிசம் என்ற வரையறையானது இன்றைய பாசிசப் போக்கின் பொதுவான சித்தாந்தத் தன்மை, வர்க்கத் தன்மையே குறிக்கிறதே அன்றி, அது இன்றைய நமது நாட்டின் பாசிச சக்தியை குறிப்பாக அடையாளம் காட்டவில்லை. நூற்றாண்டு அனுபவம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பல்தான் பாசிச சக்தி என்று வரையறுப்பதுதான் பொருத்தமானதாகும். இந்த பாசிச சக்தியானது, மார்வாரி, சிந்தி, பார்ப்பன, பனியா பின்னணி கொண்ட, அதிலும் குறிப்பாக, அம்பானி-அதானி-அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் நலனிற்காக முன்னிற்கிறது. அந்தவகையில், இன்றைய பாசிச சக்தியானது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி வகையறா பாசிசம் என்று வரையறிக்கிறோம்.

இந்த பாசிசம் நிச்சயம் அரங்கேறியே தீரும் என்பதால், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றை இப்போதே முன்வைத்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஆகியவற்றைக் கட்டுவதற்கான பணிகளில் இறங்க வேண்டும். எனினும், இப்போது இருப்பது பாசிசம் அரங்கேறுவதற்கான தயாரிப்புக் காலம் என்பதால், இடைமாறுதல் கட்டமாக இதனை வரையறுத்து, அதற்குரிய அரசியல் நடத்தை வழியை முன்வைத்து செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம்.

மேலும், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள குறித்த திட்டத்தில் உள்ள உடனடிக் கடமைகளில், நடைமுறைக்குப் பொருந்தாத பல அம்சங்களை நீக்கியும்  திருத்தியும் செழுமைப்படுத்தியுள்ளோம்.

சான்றாக, பக்கம் 338-இல் 10-வது அம்சமான, “கோயில்கள், மத நிறுவனங்கள், மடங்கள், டிரஸ்டுகளுகு சொந்தமான அனைத்து நிலங்களும் அவர்களது தனிச்சிறப்பான உடமைகளும் எவ்வித நட்ட ஈடுமின்றி பறிமுதல் செய்து, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களின் செல்வாக்கு நீக்கப்படும்” என்ற வறட்டுத்தனமான அம்சங்களை நீக்கியுள்ளோம்.

000

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் இந்தப் புதிய கோட்பாட்டு முடிவுகளுக்கு வந்துள்ளோம். இப்புதிய கோட்பாட்டு முடிவுகளின் அடிப்படையிலான செயல்பாடுகள்தான், நமது அமைப்பில் நீண்டகாலமாக நிலவிவந்த தவறான போக்குகளையும், நக்சல்பாரி இயக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாகப் பீடித்துள்ள நோயையும் விரட்டுவதற்கான அருமருந்தாகும். மக்களுடன் ஐக்கியப்பட்ட போல்ஷ்விக் முறையிலான கட்சியைக் கட்டியமைப்பதற்கான புதிய பாதையாகும்.

இம்மாபெரும் கடமையை சாதிக்க, உற்சாகத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்படுவோம்! தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அர்ப்பணிப்புடன் புரட்சிப் போரில் பீடுநடைபோட்டு தொடர்ந்து முன்னேற உறுதியேற்போம்!

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர-செயல்தந்திர வழிமுறையில் ஊன்றி நிற்போம்!

வலது சந்தப்பவாத – நவீன அராஜகவாத, நவீன கலைப்புவாதப் போக்குகளை முறியடிப்போம்!

பரந்துவிரிந்த மக்கள் திரள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில் புரட்சியை நோக்கி முன்னேறுவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை சாதித்து முடிப்போம்!

புரட்சிகர வாழ்த்துகள்!

✼ ★ ✼