சுய உதவிக் குழு கடன் நெருக்கடியால் தொடரும் தற்கொலைகள்!

ஒரு பக்கம் அம்பானி ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளில் ஆடம்பரத் திருமணம் நடத்திக் கொண்டிருக்கின்ற நாட்டில், ரூபாய் 5 ஆயிரம் கடனுக்காக எளிய மக்கள் தற்கொலை செய்து கொள்வது எவ்வளவு கொடூரமானது…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த சின்னபர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவரின் மனைவி உஷா, இவர்களின் மகள்கள் நிவேதா, ஷர்மிளா. இவர்கள் பர்கூரிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முறையே 12 ம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரமேஷுக்குப் போதிய வருவாய் இல்லாததால், குடும்பத்தினர் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுவில் நேற்று 5 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டிய நிலையில் பலரிடமும் கடன் கேட்டுள்ளார்.

எங்கும் கிடைக்காததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத் தகராறும் இருந்து வந்திருக்கிறது.  ஜூலை 19 அன்று, ரமேஷ் பெங்களூரிலுள்ள தன் தம்பி கணேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டிருக்கிறார். அப்போது வீட்டில் அதிக கூச்சல் இருந்ததால், அவர் போனைத் துண்டித்திருக்கிறார். இது குறித்து பர்கூரிலுள்ள தன் தந்தை காத்தவராயனைத் தொடர்பு கொண்டு அண்ணன் வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார் கணேசன். அப்போது காத்தவராயன், ரமேஷைத் தொடர்பு கொண்டபோது, “எனக்கு வாழவே பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” எனக் கூறி, போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார்.

பின்னர் அவர் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குப் பணம் ஏதும் கிடைக்குமா எனக் கேட்கச் சென்றுவிட்டார். மகன் தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காத்தவராயன், உடனடியாக மகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் மருமகள் உஷா, பேத்திகள் நிவேதா, ஷர்மிளா ஆகியோர் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகக் கிடந்திருக்கின்றனர்.

ஜூலை 25 அன்று இதே சுய உதவிக்கடன் பிரச்சினையில், கீர்த்திகா என்பவர் தனது இரு குழந்தைகளை தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


படிக்க: அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!


தொடர்ச்சியாக நடந்து வரும் இந்நிகழ்வுகளை கடன் தொல்லையால் தற்கொலை என்ற அடிப்படையில் மட்டும்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசின் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது; வேலையின்மை அதிகரித்துள்ளது. வர்க்க ஏற்றத்தாழ்வு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலைமைகள் தான் ஏழை எளிய மக்களை கந்துவட்டி, நுண்கடன், சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றை நோக்கித் தள்ளுகிறது. இந்த கடன் நெருக்கடிகள் தரும் அழுத்தத்தில் வேறு வழியின்றி தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

ஒரு பக்கம் அம்பானி ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளில் ஆடம்பரத் திருமணம் நடத்திக் கொண்டிருக்கின்ற நாட்டில், ரூபாய் 5 ஆயிரம் கடனுக்காக எளிய மக்கள் தற்கொலை செய்து கொள்வது எவ்வளவு கொடூரமானது…

கார்ப்பரேட் நலனுக்கான அரசின் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க போராடாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube