பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”

கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் "நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்" என்றார்.

“பாரிஸ் 2024” ஒலிம்பிக்கில் அகதிகளை உள்ளடக்கிய ஒரு அணி பங்கேற்கிறது. “அகதிகள் அணி” பங்கேற்கும் மூன்றாவது கோடைக்கால ஒலிம்பிக் இதுவாகும். பாரிஸில் பங்கேற்கும் அகதிகள் அணி முன்னெப்போதையும் விட பெரியது; குறைந்தது 11 நாடுகளைச் சேர்ந்த 37 விளையாட்டு வீரர்கள் 12 வெவ்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். ஈரான், ஆப்கானிஸ்தான், கேமரூன், தெற்கு சூடான் மற்றும் சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் அணியின் கொடியை ஏந்தியவர்களில் ஒருவரான கேமரூனில் பிறந்த குத்துச்சண்டை வீரர் சிண்டி நாகம்பா (Cindy Ngamba), “எங்கள் பெயரை ‘அகதிகள் ஒலிம்பிக் அணி’ என்று அழைப்பதால், உலகெங்கிலும் உள்ள அகதிகள் எங்களை அங்கீகரிப்பார்கள். நாங்கள் ஒரு அணியாக பார்க்கப்படுகிறோம், நாங்கள் விளையாட்டு வீரர்களாக, போராளிகளாக, பசியுள்ள விளையாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறோம்” என்று கூறினார்.

“நாங்கள் வெறும் அகதிகள் அல்ல; விளையாட்டு வீரர்கள். (மக்கள்) எங்களை அகதிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடுகளைப் போலவே அதே இலக்குகளைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்” என்று நகாம்பா மேலும் கூறினார்.

அகதிகள் ஒலிம்பிக் அணி 2015 இல் உருவாக்கப்பட்டது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் 10 பேர் கொண்ட அணி பங்கேற்றது. போர் மற்றும் இடப்பெயர்வு உலகின் பல்வேறு பகுதிகளை அழித்து வரும் நிலையில், பாரிஸில் உள்ள 37 பேர் கொண்ட அகதிகள் அணி நீச்சல், கேனோயிங், மல்யுத்தம் மற்றும் டேக்வாண்டோ போன்ற துறைகளில் பங்கேற்கவுள்ளது.


படிக்க: ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?


காபூலைச் சேர்ந்த 21 வயதான மனிஷா தலாஷை (Manizha Talash) எடுத்துக் கொள்ளுங்கள். தவறுதலாக பார்த்த ஒரு வீடியோவால் ஈர்க்கப்பட்ட பின்னர் அவர் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டார். மேலும் 2021-இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் அவரது ஆர்வத்தைப் பின்தொடர்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்தபோது ஒரு வருடம் தனது தம்பிக்கு பராமரிப்பாளராக பணியாற்றிய தலாஷ், ஸ்பெயினுக்கு அகதியாக சென்றார். ஒரு திறமையான பிரேக் டான்சராக அவர் காணப்பட்டதால், ஐ.ஓ.சி  (International Olympic Committee) அவரது பயிற்சிக்கு நிதியளித்தது. வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்ட அவர் அகதிகள் அணியில் சேர்க்கப்பட்டார்.

“ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வேண்டும்; ஆனால் ஒலிம்பிக் மற்றும் பாரிஸில் இருப்பதே எனக்கு வெற்றி” என்று தலாஷ் டைம் இதழிடம் கூறினார்.

அவரது சக நாட்டவரான ஃபர்சாத் மன்சூரியும் (Farzad Mansouri) சமீபத்திய கடந்த காலத்தின் கொடூரங்களிலிருந்து தப்பிக்க விளையாட்டை ஒரு வழிமுறையாக பார்க்கிறார். டோக்கியோவில் ஆப்கானிஸ்தானின் கொடியை ஏந்திச் சென்ற அவர் டேக்வாண்டோ தடகள வீரராக போட்டியிட்டார். தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவருக்கு மீண்டும் ஒலிம்பிக்கில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது நண்பரும் அணி வீரருமான முகமது ஜான் சுல்தானி (Mohammed Jan Sultani) காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். மன்சூரி தனக்காகவும் இறந்தவர்களுக்காகவும் போட்டியிடுகிறார். “எனது நாட்டிலும் உலகெங்கிலும் அமைதியைக் காண முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தி கார்டியனிடம் அவர் கூறினார்.

சில அகதிகள் விளையாட்டின் மீதான தங்களின் ஆர்வத்தால் பாரிஸ் வந்துள்ளனர். 28 வயதான படகு வீரரான சமன் சொல்டானி (Saman Soltani), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் ஒரு கலை நீச்சல் நிகழ்ச்சிக்குப் பிறகு ஈரானுக்கு திரும்ப முடியவில்லை. ஆஸ்திரியாவில் ஒரு முன்னாள் பயிற்சியாளரின் கீழ் தஞ்சம் புகுந்தார். கேனோயிங் விளையாட்டால் ஈர்க்கப்பட்டார். அவர் தரவரிசையில் உயர்ந்து, ஆஸ்திரிய தேசிய சாம்பியன் ஆனார்.

“லாஸ் ஏஞ்சல்ஸ் 2028” ஒலிம்பிக்கில் ஆஸ்திரிய கொடியின் கீழ் அல்லது அகதிகள் அணிக்காக விளையாட வேண்டும் என்று சமன் கனவு காண்கிறார். “நான் சிறப்பு வாய்ந்தவள் என்று எனக்குத் தெரியும்; நான் குழந்தையாக இருந்தபோதே எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் எப்போதும் பெரிய விஷயங்களைச் செய்ய விரும்பினேன்” என்று அவர் கூறினார். “எதிர்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் நான் உலகப் புகழ் பெற விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.


படிக்க: கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !


“இந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு இருப்பதைப் போல உணர்கிறேன்” என்று தெற்கு சூடானில் பிறந்து, பெரும்பாலும் கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த 21 வயதான ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் (Perina Lokure Nakang) கூறினார். “நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்” என்றார்.

உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பாவில், தீவிர வலதுசாரி அரசியல் வளர்ந்து வருகிறது. அகதிகளை வெளியேற்றுவது என்பது இவர்களின் முக்கியமான பிரச்சாரமாக உள்ளது. அகதிகள் நாட்டின் எதிரிகளாகச் சித்தரிக்கப்படும் தற்போதைய சூழலில், பாரிஸ் ஒலிம்பிக்கில் அகதிகள் அணி பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க