பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான அதானி குழுமம், “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மாபெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது” என்று 106 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை ஜனவரி 2023-இல் வெளியிட்டு அக்குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனமானது பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகிய இருவருக்கும், மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் அதானி நிறுவனம் உருவாக்கிய போலி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பங்குகள் இருந்ததாக தனது தளத்தில் கட்டுரையை வெளியிட்டு மீண்டும் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்கட்டுரையில், “கடந்த 18 மாதங்களுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரலாற்றின் மிகப்பெரிய மோசடியில் அதானி நிறுவனம் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தோம். முக்கியமாக மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் இயங்கும் போலி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கில் மோசடி செய்தது குறித்து அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால், செபி தரப்பில் எவ்வித ஆக்கப்பூர்வ விசாரணையும் நடத்தப்படாமல், எங்களை நேரில் ஆஜராக கோரி ஜூன் 2024-ல் கடிதம் அனுப்பப்பட்டது. அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படாததற்கு அந்த குழுமத்துடன் மாதபிக்கு தொடர்பு இருக்கலாம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது, கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும் அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் செபியின் முழுநேர உறுப்பினராக மாதபி நியமனம் செய்யப்படுவதற்கும் அதைத் தொடர்ந்து மார்ச் 2022-இல் அமைப்பின் தலைவராக பதவி உயர்த்தப்படுவதற்கும் முன்னதாக 2015- ஆம் ஆண்டில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. செபியில் முழுநேர உறுப்பினராக மாதபி நியமிக்கப்பட்டதும் அவரது பெயரிலான பங்குகளை தனது பெயருக்கு கணவர் தாவல் புச் மாற்றியுள்ளார்.


படிக்க: ஹிண்டன்பர்க் அறிக்கையும் உச்ச நீதிமன்ற  தீர்ப்பும்


2020 ஆம் ஆண்டு அக்டோபரில் அதானி குழும நிறுவனங்களில் அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களீன் பங்குகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்த விசாரணையை செபி தொடங்கியது. இதில் 14-20 சதவிகித மதிப்பிலான பங்குகளைக் கொண்ட 13 வெளிநாட்டு நிறுவனங்களைப் பற்றி விசாரனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடம் செபி கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆனால், அந்த விசாரணையின் முடிவு குறித்து இன்னும் விவரம் அளிக்கப்படவில்லை. ஏனெனில் அதானி குழுமத்துக்கு எதிராக அதே குழுமத்துடன் வணிக உறவிலுள்ள தலைவரைக் கொண்ட செபி செயல்பட விரும்பவில்லை” என ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறு செபி ஆணையத் தலைவர் அதானி குழுமத்தின் கைப்பாவையாக செயல்பட்டது பற்றிய கட்டுரையை 10 ஆம் தேதி வெளியிடுவதற்கு முன்னாலேயே ஹிண்டன்பர்க் நிறுவனமானது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “இந்தியாவில் பெரியதாக ஒன்று நடக்கவுள்ளது” என்று பதிவிட்டது உலகளவில் பேசுபொருளானது. ஹிண்டன்பர்க் நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி தான் செய்திகளை வெளியிடப் போகிறது என்பதை சுதாரித்துக்கொண்ட அதானி குழுமமும், பா.ஜ.க.வினரும் அதற்கு எதிர்வினையாற்ற அப்பொழுதே தயாராகத் தொடங்கிவிட்டனர்.

அதானி குழுமம் அடுத்த நாளே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள், பங்குகள் முழு வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களும் பல்வேறு பொதுத்துறை அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம். அதானி குழுமத்துக்கு எந்தவொரு தனிநபருடனும், எவ்வித வணிக ரீதியான தொடர்புமில்லை. ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை போலியானது, தவறானது, புனையப்பட்டது. பொதுவெளிகளில் உள்ள தகவல்களை திரட்டி உண்மையாக ஆராயாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் சுய லாபத்துக்காக ஹிண்டன்பர்க் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது

ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், கடந்த காலங்களில் முழுமையாக விசாரிக்கப்பட்டு, எவ்வித குற்றமோ முறைகேடோ நடைபெறவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்த விஷயங்களை ஹிண்டன்பர்க் மீண்டும் வெளியிட்டுள்ளது. இவையனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும்” அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

செபி ஆணையத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “தங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம். அதில் எந்த உண்மையும் இல்லை. எங்களின் நிதி சார்ந்த விசயங்கள் வெளிப்படைத்தன்மையுடனே உள்ளன. இது குறித்து முழு விளக்கத்தை அளிப்போம்” என்றும் “செபி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதற்கான சதி” என்றும் குறிப்பிடப்படுள்ளது.

பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்களும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை இந்தியாவிற்கு எதிரான சதி என்று பேசி வருகின்றனர். தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, “தொடர்ந்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைப்பது பணம் சம்பாதிப்பதற்காகத் தான்” என்றும் “வலிமையான இந்தியா உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்தியா வலிமையாக இருக்க கூடாது என்பதற்காக உலக அளவில் பெரிய சதி நடைபெறுகிறது. அதில் இதுவும் ஒன்று” என்றும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


படிக்க: அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!


ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியை அடிப்படையாக வைத்து, வெளிநாட்டு சதி என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசுவதன் மூலம் அதானி குழுமமும் பா.ஜ.க. கும்பலும் தங்களின் மோசடிகளை மறைக்க முயல்கின்றனர். மாறாக, இவர்கள் ஒருபோதும் ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக மறுத்ததில்லை.

மேலும், செபி அமைப்பானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளை அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட உடனையே எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது; ஒன்றரை ஆண்டுகளாக விசாரணையை முடிக்காமல் எந்த அறிக்கைகளும் சமர்பிக்காமல் காலதாமதப்படுத்தி வருவது; உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று தெரிவித்தது; அதானி குழுமத்தின் மீதான விசாரணையை செபி மட்டும் மேற்கொண்டால் போதும் என்று உச்சநீதிமன்றம் கூறிய போது அதை வரவேற்று அதானியே தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது; ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்னரும் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை குற்றஞ்சாட்டி விசாரித்த செபி, அவ்வழக்குகளில் பெரும்பாலானவற்றை அபராதத் தொகையோடு முடித்துவைத்தது; செபியின் முக்கிய பொறுப்பில் அதானி மகனின் மாமனார் உள்ளதாக செய்திகள் வெளியானது ஆகியவை செபியானது அதானி குழுமத்தை பாதுகாக்க செயல்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. செபி நிறுவனத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் இந்த முறைகேடு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை எனக் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார் என்று செபி தலைவரை மறைமுகமாக சாடியிருக்கிறார். மேலும், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என தற்போது தெரிய வருகிறது என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டில் வெளியான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை பல ஆண்டுகளாக அதானி குழுமம், பங்கு முறைகேடுகள், பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. அதன்விளைவாக, அதானி நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென சரிந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அதானி, ஒரே மாதத்தில் 30-வது இடத்திற்கு சரிந்தார். ஒரே மாதத்தில் 12.06 கோடி ரூபாய் சொத்து மதிப்புகளை அதானி குழுமம் இழந்தது.

ஆனால், அதானி குழுமமானது அடுத்த சில மாதங்களிலேயே மோடி அரசின் உதவியுடன் படிப்படியாக சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. தற்போது அதானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளார். அண்மையில் பார்க்லேஸ்-ஹூருண் இந்தியா வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அதானி குழுமத்திடம் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளது.

அதானி நிறுவனத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் வலைப்பின்னல் வெளியிட்ட அறிக்கை, இந்தோனிசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வு செய்தி ஆகியவை வெளிவந்துள்ள போதிலும் அதானி குழுமத்தின் பங்குச்சந்தைகள் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏனென்றால், மோடி அரசு அதானிக்கு எப்பொழுதும் துணை நிற்கும் என்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு அந்நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதற்கு மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உணர்த்திவிட்டன. இரண்டாவது, அதானியின் ஊழல் முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதற்கெதிரான போராட்டங்களை கட்டியமைப்பதில்லை. பிரச்சினைகள் வெளிவரும் போது அடையாள எதிர்ப்புடன் நிறுத்திக் கொள்கின்றனர். மேலும், அதானி – மோடி கும்பலும் தங்களுடைய அதிகார மற்றும் ஊடக பலத்தின் மூலம் மக்கள் மத்தியில் இருந்து முறைகேடுகள் பற்றிய செய்திகளை மறைத்து வேறு செய்திகளை பூதாகரமாக்கி மடைமாற்றுகின்றன.

தற்போது ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள கட்டுரையும் அதானி குழுமத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அதற்கான கட்டமைப்பையும் மோடி அரசின் ஆதரவையும் அதானி குழுமம் கொண்டுள்ளது.

மேலும், அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்றால், அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளின் துணையில்லாமல் ஈடுபட முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததாகும். மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியலில் ஆர்.எஸ்.எஸ். காவிகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது என்றால், பொருளாதாரத்தில் அம்பானி-அதானிகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அதற்கேற்ப அரசின் எல்லாத் துறைகளிலும் ஆட்கள் புகுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் பொருளாதாரத்தில் அம்பானி-அதானிகளின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. அதானி நிறுவனத்தின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டிய செபி நிறுவனத்தின் தலைவரே அதானியின் கைப்பாவையாக இருப்பதும் நமக்கு உணர்த்துவதை அதைத்தான். ஆகவே இந்தியாவில் நடைபெற்று கொண்டிருப்பது பெயரளவிலான ஜனநாயக ஆட்சி அல்ல. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலுக்கான ஆட்சி என்பதைத் தான் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க