உலகளவில் வறுமையை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இது வரலாற்று ரீதியிலான பின்னடைவு என ஐ.நா-வின் “நிலையான வளர்ச்சிக்கும் தீர்வுக்குமான தொடர்பு” (SDSN) அறிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2024-இல் நடைபெறவிருக்கும் ஐ.நா-வின் “எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு” முன்னதாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணக்கார உலக நாடுகள் வறுமையை நீக்க முன்னெடுத்த வழிமுறைகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ள நிலையில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட “நிலையான வளர்ச்சி இலக்கு” (SDG) அடிப்படையில் 2030-ஆம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்பது நிச்சயமற்றதாக மாறியுள்ளது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் 2030-ஆம் ஆண்டில் இன்னும் 600 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுவார்கள் என்று கூறுகிறது.
ஏற்கனவே, சூடான், மாலி, எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா உள்ளிட்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
சமீபத்திய அறிக்கையில் கூட ஆப்பிரிக்காவில் பல நாடுகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகின்றன என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. ஒரேநேரத்தில் குறைந்த எடை மற்றும் உடல் பருமன் என இரண்டு விதமான ஊட்டச்சத்து பிரச்சினைகளை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்வதாகவும் இந்த ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு வளர்ந்த உலக நாடுகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை உலகளவில் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. வேலையின்மை, போதிய ஊதியமின்மை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தான உணவு வகைகளை பல குடும்பங்களால் வாங்க முடிவதில்லை.
படிக்க: இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை
2019 முதல் 2022 வரை உலகளவில் தானியங்களின் விலை 60 சதவிகிதமும் பால் விலை 45 சதவிகிதமும் சமையல் எண்ணெய் விலைகள் 125 சதவிகிதம் வரையும் உயர்ந்துள்ளது என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக 2022-ஆம் ஆண்டு குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71 சதவிகித மக்களாலும், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 6 சதவிகித மக்களாலும் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்து வருவதால் போர், வறுமை, பஞ்சம் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மக்கள் அகதிகளாக்கப்படும் போக்கும் வறுமை மற்றும் பஞ்சத்தால் கொல்லப்படும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்நெருக்கடியை தீர்ப்பதற்கு பதிலாக ஏகாதிபத்தியம் அதை மேலும் மேலும் கொடூரமானதாக மாற்றி வருகிறது என்பதை ஐ.நா-வின் அறிக்கை உறுதி செய்கிறது.
நன்றி: தீக்கதிர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube