கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய இராணுவம் காசாவில் நடத்திய விமான தாக்குதலில், பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவர்களது தாய், பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தந்தை முகமது அல் கும்சன் அவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறச் சென்ற வேளையில் குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். “குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்று சொல்லி கதறி அழுகிறார் அல் கும்சன். நம் மனதை நடுங்கச் செய்யும் இது போன்ற சம்பவங்கள் காசாவின் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது.
2023 அக்டோபர் முதல், இஸ்ரேல் இராணுவமானது, ஹமாஸ் மீது தாக்குதல் தொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, காசாவின் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், குடிபெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் ஆகியவற்றின் மீது தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில், இதுவரை சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 92,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 10,000-ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகள் இந்த இனப்படுகொலையை கண்டித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இஸ்ரேல் பிரதமருடன் உரையாடியது குறித்து பதிவிட்டிருந்தார். அதில், “இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்த உரையாடலின் போது, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். அவரிடம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். மேலும், பணயக் கைதிகளின் விடுதலை, போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதன் அவசியம் குறித்து விவாதித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியை ஒரு சர்வதேசத் தலைவர் என்றும் அவர்தான் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவார் என்றும், காசாவின் மீதான ‘போரை’யும் நிறுத்துவார் என்றும் சங்கி கும்பல் பிரச்சாரம் செய்தது.
படிக்க: அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
மோடி அரசாங்கமானது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாக வெற்று வார்த்தைகளில் கூறிக் கொண்டு இஸ்ரேல் அரசுடன் நெருக்கத்தைப் பேணி வருகிறது. பாலஸ்தீன மக்கள் மீதான மோடியின் அக்கறையில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஒருபுறம் காசாவின் மீதான இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, மற்றொருபுறம் அதானியின் நிறுவனத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் அதானி குழுமமும், இஸ்ரேலின் எல்பிட் ஆயுதத் தயாரிப்பு நிறுவனனும் இணைந்து, அதானி எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Adani-Elbit Advanced Systems India Ltd) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கின. காசாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஹெர்ம்ஸ் 900 ஆளில்லா ரக விமானங்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
2014 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸுக்கு எதிரான ப்ரொடெக்டிவ் எட்ஜ் நடவடிக்கையில் இந்த ஆளில்லா விமானங்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. அந்த ஏழு வாரப் போரில் 2,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக காசா மீது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு உதவும் வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஹெர்ம்ஸ் 900 வகை ட்ரோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதை “தி வயர்” இணையதளம் உறுதி செய்துள்ளது.
இதுமட்டுமின்றி, இந்திய அரசின் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை வேறொரு தனியார் நிறுவனத்தின் மூலம் இவ்வாண்டில் மட்டும் இரண்டு முறை ஏற்றுமதி செய்துள்ளனர். மேலும், ஒன்றிய அரசு நிறுவனமே நேரடியாக ஏற்றுமதி செய்ய விண்ணப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் போர்நிறுத்தம், அமைதி, நல்வாழ்வு என பேசுவதும், மறுபுறம் அப்பாவி மக்களைக் கொல்ல ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி கொடுப்பதுமாக இரட்டைவேடம் போட்டு வருகிறது மோடி அரசு. மோடி கும்பல், எந்தவகையிலும் ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் எதிரானவர்களல்ல. அதானியின் நிறுவனம் இஸ்ரேலுக்கு டிரோன்கள் ஏற்றுமதி செய்வதைத் தடுக்காததன் மூலம் கார்ப்பரேட் மீதான தனது விசுவாசத்தையும், காசா மக்களுக்கு எதிரான தனது பாசிச முகத்தையும் ஒருசேரக் காட்டியுள்ளது மோடி அரசாங்கம்.
இந்த இனப்படுகொலைக்கு, அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது என்பது உண்மையல்ல. கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் அரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை அனுமதித்து வருகின்றன. உலகெங்கிலுமுள்ள ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்கு சேவை செய்வதே இந்த அரசுகளின் ஒரே நோக்கம். இவர்கள் ஒருபோதும் காசா மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. மாறாக, இவர்கள் போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள்.
இஸ்ரேலுக்கு எந்த வகையிலும் உதவி செய்வதை அனுமதிக்கக்கூடாது என, அந்தந்த நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும், அரசாங்கங்களுக்கு எதிராகவும் சொந்த நாட்டு மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உலகின் பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாண்டில் நடத்திய போராட்டங்களே நமக்கு முன்னுதாரணமாகும். அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்படும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், அதானிக்கு எதிரானதாகவும் அதானியின் நலனைப் பாதுகாத்து வரும் பாசிச மோடி அரசுக்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube