ண்டுதோறும் ஆகஸ்ட் 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளைத் தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இவ்வாண்டு விடுதலைச் சிறுத்தைகள் கொடியேற்றுவதற்குப் பல இடங்களில் போலீசு மற்றும் அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமாவளவன் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியும் அளித்துள்ளார்.

பல இடங்களில் போலீசின் அனுமதியின்றி விளம்பர படங்களை வைத்ததாகக் காரணம் கூறி விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பர தட்டிகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்; கொடிக்கம்பங்களை அகற்றி இருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பத்தை தாசில்தார் வந்து பிடுங்கி எறிந்திருக்கிறார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில் “அதிகாரிகளுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் கொடிகளை அகற்றுவதைத் தனது கடமை என்கின்ற அடிப்படையிலே பல பேர் ஆங்காங்கே செயல்படுவது தமிழ்நாடு அரசுக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் மட்டுமே அதிகாரிகள் விதிமுறைகளைப் பேசுகிறார்கள். புதிதாகக் கொடியேற்றக் கூடாது, தாசில்தாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதெல்லாம் வினோதமாக இருக்கிறது. வருவாய்த் துறையினருக்கு இதில் தலையீடு செய்வதற்கு எப்போது அதிகாரம் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. எந்தச் சட்டம் அந்த அதிகாரத்தை வழங்குகிறது என்றும் தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துகின்ற உடனடி அதிகாரம் போலீசு துறையினருக்குத்தான் உண்டு. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் நடவடிக்கையில் அடிக்கடி வருவாய்த்துறையைச் சார்ந்தவர்கள் தலையிடுவது, போலீசு துறையைத் துணைக்கு அழைத்துக்கொள்வது, பொக்லைன் வைத்து அல்லது ரம்பம் வைத்து கொடிக் கம்பங்களைப் பிடுங்குவது அல்லது அறுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக, எங்கெங்கெல்லாம் இப்படி நடந்து இருக்கிறதோ அதை எல்லாம் தொகுத்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.


படிக்க: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றுவதற்கு ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆதிக்கச் சாதியினருக்குத் துணையாகப் போலீசும் அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை அகற்றுவதும், கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குகளைப் போடுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்றாக இருக்கிறது.

இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல. தலித்துக்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்வதற்காக, தங்களை சமூகத்தில் முன்னிறுத்திக் கொள்வதற்காக முயலும் போதெல்லாம் இது போன்ற அடக்குமுறைகள் நடக்கிறது. இந்த சமூகம் தலித் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பது இல்லை. அதனுடைய வெளிப்பாடாகத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன்னை அனைத்து சமூகத்திற்குமான கட்சியாக முன்னிறுத்திக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் விசிக-வை தலித் அமைப்பாகத் தான் பார்க்கின்றன. அக்கட்சியை ஒடுக்குவதை அவர்கள் நிறுத்துவதில்லை; நிறுத்தப் போவதுமில்லை.

ஆதிக்க சாதிவெறி சக்திகள் எங்கெல்லாம் வலுவாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் விசிக உள்ளிட்ட தலித்திய அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இவ்வாறான நெருக்கடிகள் கொடுக்கப்படுவது தொடர்ந்து நடக்கும் அநீதியாகவே உள்ளது.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறுகிறார். இக்கூற்று திமுக அரசே நினைத்தாலும் அதிகார வர்க்கத்தைத் திருத்த முடியாது என்பது தான் இந்த ‘ஜனநாயக’ கட்டமைப்பினுடைய அவல நிலை என்பதை உணர்த்துகிறது. அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை என்பதை இது பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.


படிக்க: ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்


அதிகார வர்க்கம் அரசாங்கத்திலிருந்து தனித்ததாகவும், சாதிவெறி – மதவெறி மிக்கதாகவும் இருப்பதால், எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் அதை திருத்தவோ மாற்றவோ முடியாது என்பதைத் தான் தலித்துகள் மீதான நூற்றுக்கணக்கான தொடர் தாக்குதல் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது அடக்குமுறைகள் அன்றாடம் அதிகரித்து வருவதற்கு அதிகார வர்க்கமே மதவெறி – சாதிவெறி – இனவெறி கொண்டதாக இருப்பது தான் முதன்மைக் காரணம்.

அதனை ஏதோவொரு வகையில் உணர்ந்ததால் தான், தொல்.திருமாவளவன் அவர்களே “இது திமுக அரசின் மீது களங்கம் விளைவிப்பதற்கான சில அதிகாரிகளின் செயல்” என்று குறிப்பிடுகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற பெரிய கட்சிக்கே இதுதான் நிலைமை என்றால் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சிறிய தலித் அமைப்புகளுக்கு எவ்வளவு மோசமான நிலைமை இருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாசிசத்திற்கு எதிராக இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க-வோடு ஒத்துழைப்பதாகச் சொன்னாலும், பாசிசத்திற்கு எதிராக ஓர் உண்மையான ஜனநாயக கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதைத்தான் இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கும் சுதந்திரமான ஒரு சமூகக் கட்டமைப்பு இல்லாமல் தலித் மக்களுக்கும், தலித் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் நடக்கும் அநீதிகளை ஒருநாளும் தடுக்க முடியாது.

எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற அந்த மாற்றுக் கட்டமைப்பைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைவோமாக.


தீரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க