தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 48 சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 11 சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருப்பது சாதிய ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதையே நமக்கு உணர்த்துகிறது. வன்னியர், கவுண்டர், தேவர் ஆதிக்கச் சாதிகளைச் சார்ந்த சாதிவெறியர்களால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும், தேவேந்திரகுல வேளாளர் என்று கூறிக்கொள்ளும் பட்டியல் சாதியைச் சேர்ந்த பள்ளர் சாதியாதிக்க வெறியர்களால் பறையர், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஆணவப்படுகொலை செய்யப்படுகின்றனர். அதற்குச் சான்றாக, சில ஆணவப்படுகொலை நிகழ்வுகளைப் பற்றி மட்டும் சுருக்கமாகக் கீழே குறிப்பிடுகிறோம்.
இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து திருமணம் செய்ததற்காக அப்பெண்ணின் தந்தையே அவரை மரத்தில் தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் சென்னையில் பிரவீன் என்ற பட்டியலினச் சாதியைச் சேர்ந்த இளைஞர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக அப்பெண்ணின் அண்ணனால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஜூன் மாதத்தில், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் பறையர் சாதியைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் பள்ளர் சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் மாமன் மகனால் தலை துண்டாக்கப்பட்டும் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டும் மிகக்கொடிய முறையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் மதுரைக்கு அருகில் உள்ள வேலாம்பூர் கண்மாயில் வீசப்பட்டது.
படிக்க: தொடரும் சாதிவெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!
ஜூலை மாதத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த கதிர் என்ற இளைஞனும் அதே ஊரில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் நிவேதாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ்க்கு இது தெரிய வர கதிரை அடித்து துன்புறுத்தியதோடு, இனிமேல் இப்படி நடந்துகொண்டால் உன்னைக் கொன்று புதைத்து விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார். அதன் பிறகும், இவர்களின் காதல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த நிவேதாவின் குடும்பத்தினர் 18 ஆம் தேதியன்று நிவேதா அழைப்பது போல கதிருக்கு போன் செய்து, அவரை வீட்டுக்கு வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் கொடூரமான முறையில் தாக்கி பாறாங்கல்லை கட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தூக்கிவீசிக் கொன்றுள்ளனர்.
குறிப்பாக, ஜூலை மாதத்தில் தருமபுரி மாவட்டத்தில் முகமது ஆசிக் என்ற முஸ்லிம் இளைஞரும் பறையர் சாதியைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணும் காதலித்தார்கள் என்பதற்காக, பெண்ணின் சகோதரர்கள் மற்றும் அவரின் நண்பர்கள் பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்த ஆசிக்கை கடைக்குள் புகுந்தே வெட்டிப் படுகொலை செய்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பறையர் சாதியிலும் சாதி ஆதிக்க சிந்தனை கொண்ட நபர்கள் உருவாகி உள்ளதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களிலும் பட்டியலினப் பிரிவில் உள்ள பள்ளர், பறையர் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வேலை செய்து சுயசாதி பற்றை ஊட்டி வருவதே முதன்மைக் காரணமாகும். எனவே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலையும் சாதிவெறி சங்கங்களையும் தடை செய்யாமல் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது.
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram