தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. அதில் 36 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுவாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் 5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது. மேலும் சுங்கச்சாவடிகள் 14 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. அதன்படியே தற்போது சுங்கக் கட்டணத்தை நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
சுங்கக் கட்டண உயர்வானது மாநில அரசு பேருந்துகளுக்கும் சேர்த்து வசூலிக்கப்படுவதால் போக்குவரத்துக் கழகத்தை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குமே தவிர போக்குவரத்துக் கழகத்தை எந்த வகையிலும் முன்னேற்றப் போவதில்லை. மேலும் சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும். ஏற்கெனவே ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த லாரி ஓட்டுநர்கள் கிடைக்கக் கூடிய வருமானதை வைத்து வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் அதற்கும் இனி வழியில்லை என்பதையே சுங்கக்கட்டண உயர்வு நமக்கு உணர்த்துகிறது.
காலாவதியான சுங்கச்சாவடிகளில் 40 சதவிகிதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அதனை எந்த சுங்கச்சாவடி அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. மேலும் எந்தெந்த சுங்கச்சாவடிகள் காலாவதியானவை போன்ற தரவுகளையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிடுவதில்லை.
படிக்க: திருமங்கலம் டோல்கேட்டின் அடாவடித்தனம் – முற்றுகையிட்ட கிராம மக்கள்
இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளைச் சுற்றி 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது போன்ற பெயரளவிலான விதிகள் கூட பின்பற்றப்படாமல் காகிதங்களைப் போல் காற்றில் பறக்கவிட்டுட்டு ஊருக்கு அருகிலேயே சுங்கச்சாவடி அமைத்து மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்.
அதன்படி மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியானது விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி. மீ தொலைவுக்குள் அமைந்துள்ளது. மேலும் உள்ளூர் மக்களிடமும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கு 50 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மக்களும் சரக்கு வாகன ஓட்டுநர்களும் போராடி வருகின்றனர். இதுவரை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் சுங்கச்சாவடியை அகற்றவில்லை, மக்கள் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மத்திய அரசின் தொடர் சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராகக் கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் – ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லத்தோவல் சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டதோடு சுங்கக் கட்டணத்தை 150 ரூபாய் வரை குறைக்க வேண்டுமென்றும் 20 கிலோ மீட்டர் சுற்றளவிலிருந்து வரும் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும் மற்றும் 24 மணி நேரத்திற்கான சுங்கக் கட்டணத்தை 170 ரூபாயாகக் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராகவும் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் இதுபோன்ற தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில் ஒன்றிய அரசானது சுங்கக் கட்டணத்தைக் குறைக்காமல் 7 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கார்ப்பரேட் நலன்களுக்காகச் சுங்கக் கட்டணம் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒன்றிய அரசிற்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவும், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும் முடியும்.
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram