“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு”
கோவை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
“பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு” என்ற முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக கோவையில் அரங்கக்கூட்டம் ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்றது.
அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் மாறன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் பறை இசையுடன் கூட்டம் தொடங்கியது.
தோழர் மாறன் தலைமையுரையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த மூன்று குற்றவியல் சட்டங்களை மாணவர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் பிரச்சாரம், அரங்கக் கூட்டங்களை நடத்துவதன் தேவையையும், மேலும் பிரச்சார இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற அனுபவத்தையும் பேசினார்.
கருத்துரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதிநிதி அக்பர் அலி அவர்கள் பேசுகையில், ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததும் சட்டத்தைத் தனது கையில் வைத்துக் கொண்டு மக்களை நசுக்கி வருகிறது. யாரும் கருத்து சொல்லக் கூடாது, போராடக் கூடாது என, இவர்கள் உருவாக்க நினைக்கும் இந்துராஷ்டிரத்திற்க்கான சட்டம் தான் இது. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டது அதற்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இன்று ஆளுநராக இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அனைத்து வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்ட சட்டம் மூலம் பாபர் மசூதி பாதுகாக்கப்பட்டதா? இல்லை அந்த சட்டமே பாதுகாக்கவில்லை, இந்த சட்டம் எப்படிப் பாதுகாக்கும் என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
அடுத்ததாகப் பேசிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் தோழர் பன்னீர்செல்வம், குடிக்கத் தண்ணீர் வரவில்லை என்று போராடினாலும் இச்சட்டம் உங்களை தேசவிரோதியாக்கும். குறிப்பாகச் சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் பழைய சட்டத்தின்படி அதைப் பதிவு செய்ய வைக்கவே பல போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இப்போது இந்த சடத்தின்படி 14 நாட்கள் வரை வழக்குப் பதிவு செய்ய நேரம் உள்ளது. இந்த மோடி அரசு ஆட்சிக்கு வந்த உடன் தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டுள்ளது, அன்று போராடிப் பெற்ற உரிமை இன்று இல்லை, 8 மணி நேர வேலை 12 நேரமாக மாற்ற தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது, அதற்கு பல்வேறு எதிர்ப்பு எழுந்த பின் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் அப்படிச் செய்ய முடியாது உரிமைக்காகப் போராட முடியாது. இந்த சட்டம் தொழிலாளர்கள், சிறுபான்மையினர், மாணவர்கள், ஜனநாயக சக்திகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வைக்கும் வரை அனைவரும் சேர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
வெல்ஃபேர் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் கோவை இப்ராஹிம் அவர்கள் பேசும் போது, விவசாயிகள் விவசாயப் பிரச்சினைக்குப் போராடுகிறார்கள், தொழிலாளர்கள் தனியாகப் போராடுகிறார்கள், வழக்கறிஞர்கள் தனியாகப் போராடுகிறார்கள் இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதை மக்களுக்குக் கொண்டு சென்று ஒருங்கிணைந்த போராட்டமாகக் கொண்டு செல்வது கடினமான பணியாக உள்ளது. இந்த சட்டம் மூலம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-க்கான சட்டம் காலனியக் காலத்திலிருந்த சட்டத்தைச் சுதந்திர இந்தியா எனத் தனது நெஞ்சில் தட்டிக் கொள்ளும் ஒவ்வொரு இந்தியா குடிமகனையும் அடிமையாக்கும் சட்டம் இது. அது ஒருபுறம் இருக்க இராணுவம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் காவல்துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இச்சட்டத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறைக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது மாநில உரிமை பறிக்கப்படுகிறது என்பது பற்றி திராவிட மாடல் அரசு ஏன் வாய்திறக்கவில்லை. பேருக்கு தனிநபர் குழுவை அமைத்துள்ளது. இந்த சட்டம் UAPA வின் மாற்று வடிவம். எனவே இச்சட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று மக்கள் எழுச்சியின் மூலம் வீழ்த்த முடியும் அதைச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஜெமிஷா பேசுகையில், வழக்கறிஞர்கள் ஆகிய நாங்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் இது வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டம் என்பதை விட இது மக்கள் விரோத சட்டம் என்றுதான் கூறி வந்துள்ளோம். எனவே இந்த சட்டங்களைத் திரும்பப் பெற மக்கள் திரள் போராட்டத்தை நடத்த வேண்டும். அதற்கு முழு ஆதரவை எஸ்.டி.பி.ஐ கட்சி கொடுக்கும் எனக் கூறினார்.
சிறப்புரையாக மக்கள் அதிகாரத்தின் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது பேசுகையில், இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் எப்படி மக்கள் போராட்டமாக மாறியது என்பது நமக்குத் தெரியும். அந்த வரலாற்றில் கோவைக்கு முக்கிய பங்கு உண்டு. இங்குப் பேசிய அனைத்து தோழர்களும் உணர்வுப்பூர்வமாகப் பேசினர். குறிப்பாக இன்று நாம் எப்படிப்பட்ட சூழலில் வாழ்கிறோம் என்று தெரியுமா? நீதிமன்றங்களுக்கு நீதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களுக்குச் சட்டம் இயற்றும் உரிமை பறிக்கப்பட்டு ஒரு சிறு கும்பலிடம் அதிகாரம் உள்ளது. அந்த கும்பல் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிச கும்பல் தான். பிரதமர் அலுவலகத்திற்கு அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ஜனநாயக முறைப்படி போராட முடியுமா? மாறாக இந்த பாசிச கும்பலின் அரசைச் செயல்பட விடாமல் தடுக்க வேண்டும். வாகன விபத்து சட்டத் திருத்தத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் போல ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் வேண்டும். அதைத் தமிழ்நாடு செய்ய வேண்டும், இந்த முப்பெரும் சட்டங்களைக் கிழித்தெறிந்து, ஏற்க மறுக்க வேண்டும் எனப் பேசினார்.
JACC அமைப்பின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் சக்திவேல் பேசும் போது, இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அரங்கக் கூட்டங்களை நடத்தி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பு JACC யின் சுமையைக் குறைத்துள்ளது. இந்த போராட்டம் எளிதாக முடியப்போவதில்லை நீண்டகால போராட்டம் தேவை, அதனைத் தொடர்ந்து கொண்டு செல்வோம் எனக் கூறினார்.
கூட்டத்திற்கு இடையே சிவப்பு அலை கலைக்குழுவின் பாடல்கள் பாடப்பட்டன.
இறுதியாக நன்றியுரையை மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன், கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், பெருந்திரளாக கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், மாற்றுக் கட்சி நிர்வாகிகள், ஜனநாயக சக்திகளுக்கும் நன்றி தெரிவித்துக் கூட்டத்தை நிறைவு செய்தார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram