கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டும் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் நேற்றிரவு கொல்கத்தாவின் நகர வீதிகளில் மக்கள் தங்களது வீட்டின் விளக்கை அணைத்து கைகளில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, கை மின்விளக்கு (Torchkolight) ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த  ஆகஸ்ட் 9-ஆம் தேதி  கொல்கத்தாவில் உள்ள  ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி  பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தங்களுடைய சகோதரிக்கு நீதிக் கிடைக்கும் வரை, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அன்று முதல் இன்றுவரை கொல்கத்தா உட்பட நாட்டின்   அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர்.

படிக்க : மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!

இந்நிலையில், “ஒளி பரவட்டும் நீதி நிலைக்கட்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து கொல்கத்தா மருத்துவர்கள் நேற்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, நேற்று  இரவு ஒன்பது மணியளவில் மக்கள் அனைவரும் மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தங்களது வீட்டின் விளக்குகளை ஒருமணி நேரம்  அணைத்தனர். இருட்டில் தங்களது கைகளில் தீப்பந்தம் ஏந்தி மனிதச் சங்கிலி அமைத்து மருத்துவர்களின்  போராட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

கொல்கத்தாவின் கவுரா நகர தெருவானது மெழுகுவர்த்தி, தீப்பந்த வெளிச்சத்தால் திருவிழாவினைப் போன்று காட்சியளித்தது. தீப்பந்தம், மெழுகுவர்த்தி, கை மின்விளக்கு, கைப்பேசி ஏந்தி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மக்களும் ஒன்றிணைந்த போராட்டத்தால் கொல்கத்தா நள்ளிரவு  போராட்டக்களமாக மாறியது.

இப்போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மருத்துவ மாணவியின் தந்தை, “இச்சம்பவத்தில் போலீசார் ஆரம்பத்திலிருந்தே அவசர அவசரமாக செயல்பட்டனர். எங்களது மகளை கூட பார்க்கவிடவில்லை. எங்களை போலீஸ் நிலையத்தில் பல மணி நேரம் காக்க வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலை எங்களிடம் ஒப்படைத்தபோது மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களுக்கு பணம் கொடுக்க முயன்றார். நாங்கள் அதனை நிராகரித்து விட்டோம். பின்னர் எங்களது மகள் உடலை  எரியூட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அவசர அவசரமாக  உடலை எரித்துவிட்டனர். உடல் எரிக்கும் இடத்திற்கு சென்ற போது அதற்கான கட்டணத்தை போலீசார் முன்கூட்டியே செலுத்தியிருந்தனர். அப்படி அவசரம் காட்ட வேண்டிய அவசியம்  என்ன?” என்ற கேள்வி எழுப்பினார்.

மேலும், போராட்டத்தில்  பங்கேற்ற பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், “நாங்கள் தூக்கத்தை தொலைத்தது போல எங்களது மகளை கொடூர முறையில் கொலை செய்த அனைவரும் தூக்கத்தை தொலைக்க வேண்டும்” என்று தன்னுடைய கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறினார். முக்கியமாக நேற்று கொல்கத்தாவில் மட்டுமல்லாது டெல்லியிலும் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகள் என அனைவரும் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

படிக்க : அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்

ஒருபுறம் மேற்குவங்க மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. இன்னொருபுறம் பா.ஜ.க. கும்பலோ மருத்துவ மாணவி மரணத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டிவிடுவதன் மூலம் ஆதாயம் தேடுகிறது. இக்கும்பலை போராடும் மாணவர்களும் மக்களும் முறியடிக்க வேண்டியுள்ளது.

மேலும், மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

தற்போது, மருத்துவ கட்டமைப்பில் ஊடுருவியுள்ள கிரிமினல் கும்பலுக்கு எதிராகவும் மருத்துவ மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மருத்துவர்கள் போராட்டமானது மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஜனநாயக சக்திகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், பெண்ணியவாதிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் மூலம் இதனை நாடுதழுவிய மக்கள் போரட்டமாக வளர்த்தெடுப்போம்.

இன்குலாப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க